For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வளர் இப்ப நீ எங்கே இருக்கே... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (5)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

சிவப்பு நாடாவோடு கூடிய ஃபைலை கையில் எடுத்த போலீஸ் கமிஷனர் திரிபுரசுந்தரி தனக்குப் பக்கத்தில் அதிர்ச்சியோடு உட்கார்ந்திருந்த வளர்மதியை ஒரு பெருமூச்சோடு பார்த்தாள்.

" இந்த ஃபைல் ஒரு மணி நேரத்துக்கு முன்னாடிதான் டி.ஜி.பி. மூலமாய் என்னோட கைக்கு வந்தது. ஃபைலோட இடதுபக்க மூலையில் என்ன எழுதப்பட்டிருக்குன்னு பாரு "

வளர்மதி தன்னுடைய பார்வையை ஃபைலின் இடதுபக்க மூலைக்குக் கொண்டு போனாள். ஆங்கில வாசகத்தோடு கூடிய ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு பார்வைக்குத் தட்டுப்பட்டது.

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 5

"THE SECRET CONTENT MUST BE KEPT'

திரிபுரசுந்தரி அந்த ஃபைலைப் பிரித்துக்கொண்டே சொன்னாள்.

" இந்த ஃபைலில் சொல்லப்பட்ட விஷயங்களை நான் யார் கூடவும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. இருந்தாலும் உனக்குத் தெரியப்படுத்தணும்ன்னு நான் விரும்பறதுக்கு காரணம் என்ன தெரியுமா ? "

" சொல்லுங்க மேடம்......"

" இன்னிக்கு நான் சொன்னபடி அந்த ஈஸ்வரை நீ போய்ப் பார்த்து த்ரில்லிங்கான முறையில் பிறந்தநாள் வாழ்த்து சொல்லிட்டு வந்துட்டே. ஆனா இதனோட பின் விளைவுகள் எப்படியிருக்கும்ன்னு ரெண்டு பேருமே யோசிச்சுப் பார்க்கத் தவறிட்டோம் "

" பின் விளைவுகளா ? "

ஆமா..... நீ இப்போதைக்கு அந்த ஈஸ்வர்கிட்டே உன்னைப்பத்தியும் உன்னோட கணவரைப்பத்தியும் உண்மையான விபரங்களைச் சொல்லியிருப்பே..... அரவணைப்பு விடுதிக்கும் உனக்கும் உள்ள தொடர்பைப் பத்தியும் சொல்லியிருப்பே இல்லையா ?"

" ஆமா மேடம்.... அந்த ஈஸ்வர்க்கு..... என்மேல ஒரு சின்னதாய் சந்தேகம் கூட வந்துடக்கூடாதுங்கிறதுக்காக என்னைப் பத்தின எல்லா விபரங்களையும் உள்ளது உள்ளபடியே சொல்லிட்டேன். ஏன்னா அவர் யாரையாவது அனுப்பி க்ராஸ் செக் பண்ணும்போது அந்த விபரங்கள் எல்லாம் உண்மையாய் இருந்தால்தானே நாளைக்கு நான் மறுபடியும் அவரைப் பார்க்க முடியும் "

திரிபுரசுந்தரி வளர்மதியை இறுக்கமான முகத்தோடு பார்த்தாள்.

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 5

"நீ இப்படி யோசிச்சுப் பார்த்தியா ?"

" எப்படி மேடம் ... ?"

" ஒரு வேளை நீ பார்ட் டைமா போலீஸ் இன்ஃபார்மர் வேலையும் பார்க்கிறேன்னு அந்த ஈஸ்வர்க்கு தெரிய வந்தா ?"

" அவர்க்குத் தெரிய வாய்ப்பில்லை மேடம் ... "

" தெரிஞ்சுட்டா...... ?"

" தெரிஞ்சுட்டா....... கொஞ்சம் பிரச்சினைதான் "

" பிரச்சினை கொஞ்சமாய் வராது வளர்மதி......பெரிய அளவுக்கு வரும். அப்படிப்பட்ட பிரச்சினைகளை உன்னை மாதிரியான பெண்கள் ஃபேஸ் பண்ண முடியாது. அதனால்தான் இந்த ஈஸ்வர் விவகாரத்திலிருந்து நீ விலகிடுன்னு சொல்றேன்........! "

" மேடம்..... நீங்க இப்ப பேசிட்டிருக்கிறது எனக்கு ஆச்சர்யமாய் இருக்கு. இதுக்கு முன்னாடி நாலைஞ்சு சிக்கலான கேஸ் விவகாரங்களில் ஒரு போலீஸ் இன்ஃபார்மராய் வொர்க் பண்ணி உபயோகரமான தகவல்களை திரட்டிக் கொடுத்து இருக்கேன் "

திரிபுரசுந்தரி கையமர்த்தினாள்.

" இதோ பார் வளர்மதி...... நீ பண்ணின உதவியை எல்லாம் நான் மறக்கலை. அந்த கேஸ் விவகாரங்களில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க

காரணமாய் இருந்ததே நீ சேகரம் பண்ணிக் கொடுத்த தகவல்கள்தான். ஆனா இந்த ஈஸ்வர் விவகாரம் வேற மாதிரியானது "

" வேற மாதிரின்னா எப்படி மேடம்...... ?"

" ஈஸ்வரை என்ன காரணத்துக்காக வேவு பார்க்கப் போனே ...... ?"

" அவர் ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை ஒவ்வொரு ஊருக்குப் போய் 9 ஜோடி, 18 ஜோடின்னு இலவசத் திருமணங்களை நடத்தி வைக்கிற விஷயம் போலீஸ் உளவுத்துறைக்கு நெருடலாய் இருந்ததுன்னு நீங்கதான் சொன்னீங்க மேடம்..... அப்படி அவர் ஏழைப் பெண்களுக்கு இலவசமாய் திருமணம் பண்ணி வைக்கிறது இந்த சமூகப் பார்வைக்கு நல்லவிதமாய் பட்டாலும் அவர் ஏதோ ஒரு சுயநல நோக்கிற்காக செய்யறதாய் உளவுத்துறைக்கு சந்தேகம்ன்னு சொன்னீங்க. அது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரிஞ்சுக்கத்தான் நான் ஈஸ்வரை போய்ப் பார்த்து பேச்சு கொடுத்து ஏதாவது விபரம் கிடைக்குமான்னு முயற்சி பண்ணினேன். அதுவும் நீங்க சொல்லித்தான் நான் போனேன் "

" நான்தான் சொன்னேன்..... மறுக்கலை....ஆனா இப்போ விவகாரம் வேற மாதிரி இருக்குன்னு நான் கேள்விப்பட்ட பின்னாடி இந்த விஷயத்துல ஒரு குடும்பம் பெண்ணான உன்னை இன்வால்வ பண்ண விரும்பலை "

" மேடம்..... என்னைப் பொறுத்த வரைக்கும் நீங்க ஒரு துணிச்சலான போலீஸ் ஆபீஸர். எந்த ஒரு கேஸூக்கும் நீங்க இப்படி கலவரப்பட்டு நான் பார்த்தது இல்லை. இந்த ஈஸ்வர் கேஸ்ல ஒரு விபரீதம் இருக்குன்னு சொன்னீங்க. அது எதுமாதிரியான விபரீதம்ன்னு தெரிஞ்சுக்கலாமா

மேடம் ...?"

" தாராளமாய் " என்று சொன்ன திரிபுரசுந்தரி குரலைத் தாழ்த்தினாள்.

" இந்த ஈஸ்வர் நாலு வருஷத்துக்கு முந்தி ஈரோட்டில் ஒரு பெரிய கல்யாண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 18 பெண்களுக்கு இலவசமாய் கல்யாணம் பண்ணி வெச்சார். கல்யாண செலவு போக ஒவ்வொரு ஜோடிக்கும் ரெண்டு லட்ச ரூபாய் பணத்தை பேங்க்ல ஃபிக்ஸ்ட் டெபாசிட்டாய் போட்டார். அது சம்பந்தமான பேப்பர் கட்டிங்ஸைக்கூட உனக்குக் காட்டினேன் "

" ஆமா மேடம்..... "

" இப்போ அந்த 18 ஜோடிகளில் மூணு ஜோடிகள் உயிரோடு இல்லை "

" என்ன சொல்றீங்க மேடம் ? "

" எஸ்....அந்த மூணு ஜோடியும் கல்யாணம் நடந்த ரெண்டு வருஷ காலத்துக்குள்ளே தற்கொலை பண்ணிகிட்டு இறந்து போயிருக்காங்க......"

வளர்மதியின் கண்களில் பீதி பரவியது.

" தற்கொலையா ?"

" எஸ் "

" காரணம் ?"

" தெரியலை.... உயிர் வாழ விருப்பம் இல்லைன்னு ரெண்டு பேரும் தங்கள் கைப்பட லெட்டர் எழுதி வெச்சுட்டு விஷம் குடிச்சு செத்துப் போயிருக்காங்க......"

" மே.....ட.....ம் "

" பார்த்தியா..... உனக்கு இப்ப பயம் வருது "

" இது பயமில்லை மேடம்..... அதிர்ச்சி "

" பயம், அதிர்ச்சி, இந்த ரெண்டுமே ஒண்ணுதான் "

" அந்த மூணு ஜோடிகள் தற்கொலை பண்ணிகிட்டதுக்கும் ஈஸ்வர்க்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கும்ன்னு நினைக்கறீங்களா மேடம்?"

" எஸ் "

" அந்த தற்கொலைகள் ஏன் கோ- இன்சிடென்ட்டாய் நடந்து இருக்கக் கூடாது...... ?"

" அதாவது ஈஸ்வர் சம்பந்தப்படாமே ?"

" ஆமா மேடம் ...... "

" அதுக்கான வாய்ப்பு இல்லை.... வளர்மதி "

" எப்படி சொல்றீங்க மேடம் ?"

" நாலு வருஷத்துக்கு முந்தி ஈரோட்ல நடந்த இலவச திருமண ஜோடிகளில் மூணு ஜோடிகள் தற்கொலை பண்ணிகிட்ட மாதிரியே ரெண்டு வருஷத்துக்கு முந்தி அவிநாசியில் நடந்த 9 ஜோடி இலவச திருமணத்தில் கல்யாணம் பண்ணிகிட்ட ரெண்டு ஜோடி போன மாசம் 10ம் தேதி விஷம் சாப்பிட்டு தற்கொலை செஞ்சு இறந்து போயிருக்காங்க......"

வளர்மதி உறைந்து போய் உட்கார்ந்திருந்தாள். திரிபுரசுந்தரி கேட்டாள்.

" என்ன .... பேச்சையே காணோம் ?"

" இப்ப ஏதோ புரியற மாதிரி இருக்கு மேடம் "

திரிபுரசுந்தரி தன் கையில் வைத்து இருந்த ஃபைலைப் பிரித்து அதிலிருந்து ஒரு தாளை உருவி வளர்மதியிடம் நீட்டினாள்.

" இது ஃபாரன்ஸிக் ரிப்போர்ட் இதை மட்டும் படி. நான் சொன்ன "விபரீதம்" என்கிற வார்த்தைக்கு உனக்கு அர்த்தம் புரியும் "

வளர்மதி ஒரு நிமிட நேரத்தை செலவழித்து அந்த ரிப்போர்ட் முழுவதையும் படித்து முடித்துவிட்டு நெற்றியில் மின்னும் வியர்வையுடன் நிமிர்ந்தாள்.

" என்ன மேடம் இப்படி ஒரு ரிப்போர்ட் ?"

" உனக்கு என்ன புரியுது ?"

" தற்கொலை பண்ணிகிட்டு செத்துப் போன அந்த கல்யாண ஜோடிகள் எல்லாருமே ரிசின் (RICIN) என்கிற விஷத்தைச் சாப்பிட்டுத்தான் தற்கொலை பண்ணிகிட்டு செத்துப்போயிருக்காங்க ........! "

" இது ஒரு விபரீதமான தகவலா இல்லையா ? "

கண்களில் கலக்கத்தோடும் முகத்தில் பீதியோடும் வளர்மதி தலையாட்டினாள்.

" எஸ் மேடம் ....... மொத்தம் ஐந்து ஜோடிகள் "ரிசின்" என்கிற அந்த விஷத்தைச் சாப்பிட்டு தற்கொலை பண்ணிகிட்டது ஒரு அதிர்ச்சிகரமான விஷயம்..... இந்த மரணங்கள் தற்கொலைகளாக இருக்க வாய்ப்பில்லை "

" உன்னோட கையில் இருக்கிற ஃபாரன்ஸிக் ரிப்போர்ட்டும் அதைத்தான் சொல்லுது. ஆனா போலீஸ் ரிக்கார்ட்ஸ்படி அந்த ஐந்து ஜோடிகள் அதாவது மொத்தம் பத்து பேர் இந்த உலகில் வாழப்பிடிக்காமல் இறந்து போயிருக்காங்க.... இப்ப சொல்லு வளர்மதி ......உனக்கு அந்த ஈஸ்வரை நினைச்சா பயம் வரலை ........! "

" வரலை ....... மேடம் "

" சும்மா வீம்புக்கு சொல்லாதே ! "

" எனக்கு பொய் பேசிப் பழக்கமில்லை மேடம். நான் காலேஜ் டேஸ்ல இருந்தே த்ரில்லான விஷயங்களை அனுபவிக்க ஆசைப்பட்டவள். டிகிரியை முடிச்சதும் போலீஸ்ல வேலைல சேர நினைச்சேன். அப்பா ஒ.கே. சொன்னாலும் அம்மா சொல்லலை. நான் போலீஸ் வேலைக்குப் போகக்கூடாதுன்னு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினாங்க. நான் அம்மாவோட அழுகையை பொருட்படுத்தாமே வேலைக்காக முயற்சி பண்ணிட்டிருந்த போது அம்மா ஒருநாள் திடீர்ன்னு என் கால்ல விழுந்து நீ போலீஸ் வேலைக்கு போகக்கூடாதுன்னு அழுதப்ப அதிர்ந்து போயிட்டேன். போலீஸ் வேலைக்குப் போகிற எண்ணத்துக்கு அந்த விநாடியே முழுக்குப் போட்டேன். ஆனா போலீஸ் டிபார்ட்மெண்ட்டுக்கு ஏதாவது ஒரு வகையில் என்னோட சர்வீஸை தரணும் என்கிற காரணத்துக்காகத்தான் போலீஸ் இன்ஃபார்மராய் மாறினேன். நீங்களும் சம்மதிச்சு என்கிட்டே சில கேஸ்களை ஓப்படைச்சீங்க. அந்த வழக்குகளில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க நானும் ஒரு காரணமாய் இருந்தேன் "

வேகமாய் பேசிக்கொண்டே போன வளர்மதியை கையமர்த்தினாள் திரிபுரசுந்தரி.

" வளர்மதி ..... ! உன்னை போலீஸ் இன்ஃபார்மராய் இருக்க வேண்டாம்ன்னு நான் சொல்லலை. இந்த ஈஸ்வர் விஷயத்தை டீல் பண்ண வேண்டாம்ன்னுதான் சொல்றேன். இதுக்கு முன்னாடி டீல் பண்ணின கேஸ்கள் எல்லாம் சாதாரணமானது. இது அப்படியில்லை. ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை 9 ஜோடி, 18 ஜோடின்னு இலவசத் திருமணங்களை பண்ணி வைக்கிற அந்த ஈஸ்வர்கிட்டே ஏதோ ஒரு பெரிய தப்பு இருக்கு. அதைக் கண்டுபிடிக்கிற முயற்சியில் நீ இறங்கினா வேண்டாத பிரச்சினைகள் உன்னைத் தேடி வரும். உனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு. அம்மா, அப்பா, கணவன், மாமியார், மாமனார் என்கிற அருமையான உறவுகள் இருக்கு. அவங்களுக்குத் தெரியாமே நீ போலீஸ் இன்ஃபார்ம் வேலை பார்க்கிறதே என்னோட மனசுக்கு உறுத்தலாய் இருக்கு. இந்த நிலைமையில் ஈஸ்வர் மாதிரியான ......... "

திரிபுரசுந்தரி சன்னமான குரலில் நிறுத்தி நிதானமாக பேசிக்கொண்டிருக்கும்போதே வளர்மதியின் கைப்பையில் இருந்த அவளுடைய செல்போன் டயல் டோனை வெளியிட்டது.

" ஸாரி மேடம்" என்று சொல்லிவிட்டு செல்போனை எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தாள்.

கணவன் ஹரி மறுமுனையில் கூப்பிட்டுக்கொண்டு இருந்தான். எடுத்து செல்போனை காதுக்குக் கொடுத்து "ஹலோ" என்றாள்.

" வளர்.... ! நீ இப்போ எங்கேயிருக்கே ?"

" என்ன கேள்வி இது ..... ஆபீஸ்லதான் "

" பொய் சொல்லாதே.....! "

(தொடரும்)

[ பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X