
சென்னை அல்ல.. பாலத்திலிருந்து தண்ணீர் பீய்ச்சியதாக பாஜக பரப்பிய வீடியோ பாகிஸ்தானில் எடுக்கப்பட்டது!
சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், சென்னையில் எடுக்கப்பட்டதாகக் கூறி வீடியோ ஒன்று இணையத்தில் உலா வருகிறது.
மழை என்றால் குஷியாகும் நிலைமை மாறி, சென்னைவாசிகளுக்கு மழை என்றாலே அலர்ஜியாகிவிட்டது. அதற்குக் காரணம் கடந்த சில ஆண்டுகளாக நாம் சந்தித்த பிரச்சினைகள்தான்.
கடந்த சில ஆண்டுகளாகவே சென்னையில் கொஞ்சம் மழை இருந்தாலே சாலைகளில் தண்ணீர் தேங்கிவிடும். போக்குவரத்து நெரிசலும் மிக மோசமாகவே ஏற்படும்.
வடகிழக்கு பருவமழை! 26 மனித உயிரிழப்புகள்.. 29 கால்நடை உயிரிழப்புகள்! 67 குடிசைகள்.. 66 மரங்கள் சேதம்

சென்னைவாசிகள்
இதனால் மழைக் காலத்திற்கும் சென்னைவாசிகளுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தமாக சில ஆண்டுகளாக இருந்து வந்தது. சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை மூலமே அதிக மழையைப் பெய்யும். இதனால் இந்த காலகட்டத்தில் சென்னைவாசிகளுக்கு ஒருவித அச்சம் இருந்தே கொண்டே இருக்கும். மழை என்றால் ரோட்டில் நீர் இருக்கத் தானே செய்யும் என நீங்கள் கேட்கலாம்.

பருவமழை
மழை பெய்யும் போது சாலைகளில் தண்ணீர் தேங்கி இருந்தால் ஓகே.. ஆனால் அது 4,5 நாட்கள் ஆகியும் வடியாமல் இருந்தால் என்ன செய்ய? அப்படியொரு நிலை தான் சென்னையில் சில ஆண்டுகளாகவே இருந்து வந்தது. தேர்தல் காலத்தில் இதை கிட்டதட்ட ஒரு வாக்குறுதியாகவே கொடுத்த திமுக, வடிகால் வாரிய பிரச்சினையைச் சரி செய்வோம் என்று கூறியே சென்னையில் பிரசாரம் செய்தது.

கனமழை
அதன்படி இந்தாண்டு தொடக்கத்தில் இருந்தே, மழைநீர் வடிகாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. பல இடங்களில் பருவமழை தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பு இந்த பணிகள் முடிந்துவிட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. இந்தச் சூழலில், கடந்த வாரம் தமிழகத்தில் பல பகுதிகளில், அதிலும் குறிப்பாகச் சென்னையில் கனமழை வெளுத்து வாங்கியது. ஓவர் நைட்டில் மழை கொட்டித் தீர்த்துவிட்டது.

நடவடிக்கை
ஆனால், மழைநீர் வடிகால் பணிகள் காரணமாகக் காலையிலேயே தண்ணீர் பெரும்பாலான இடங்களில் வடிந்துவிட்டது. நீர் தேங்கிய இடங்களிலும் மோட்டர் பம்ப் மூலம் மழை நீர் விரைந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினார். பருவமழை முடியும் வரை இதே நிலை தொடர்ந்தால் மகிழ்ச்சி என்றே பலரும் கூறி வருகின்றனர். இதற்கிடையே சென்னை மழை என்று கூறி சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது.

பாஜக நிர்மல் குமார்
இந்த வீடியோவை பாஜகவின் ஐடி பிரிவின் தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் கூட தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். மேலும் அதில், "4000 கோடி ஷவர் பேக்கேஜ்" என்றும் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் மேம்பாலத்தின் மழையால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன. அப்போது மேம்பாலத்தின் மீது பேருந்து செல்லும்போது, கீழே நிற்கும் வாகன ஓட்டிகள் மீது நீர் அப்படியே விழுகிறது.

உண்மை என்ன
இதை பாஜக ஆதரவாளர்கள் பலரும் தங்கள் ட்விட்டரில் பகிர்ந்து இருந்தனர். இருப்பினும், இதன் உண்மைத்தன்மை குறித்து பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர். இதை நாம் தேடி பார்க்கும்போது, அந்த வீடியோ அக். மாதம் முதலே இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. மேலும், அந்த சம்பவம் நடந்தது சென்னையில் இல்லை. பாகிஸ்தானில் என்பதும் தெரிய வந்துள்ளது.

பொய்
பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மிக மோசமான வெள்ளம் ஏற்பட்டது அனைவருக்கும் தெரியும். அப்போது லாகூரில் எடுக்கப்பட்ட வீடியோ தான் இது. இந்த வீடியோவை தான் சிலர் இப்போது சென்னையில் எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறி பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். கடந்த காலங்களில் சூரத்தில் வெள்ளம் ஏற்பட்ட போதும் இதே வீடியோவை பலர் பரப்பி இருந்தனர்.

Fact Check
வெளியான செய்தி
பருவமழை காரணமாகச் சென்னையில் மேம்பாலத்தில் இருக்கும் நீர்க் கீழே உள்ள வாகன ஓட்டிகள் மீது விழுகிறது.
முடிவு
இந்த வீடியோவில் பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ.