கொரோனாவை தடுக்கும் நாட்டு மருந்தை அரசு அங்கீகரித்ததா? பரவும் தகவல்! TN Fact Check Unit விளக்கம்!
சென்னை: கொரோனா தொற்றைத் தடுக்கும் நாட்டு மருந்தை அரசு அங்கீகரித்துள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில் இது தவறான தகவல் என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பல உயிர்களை பறித்தது. ஊரடங்கு, தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கைகளால் கொரோனா தொற்று பரவல் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியதால் உலக நாடுகள் மத்தியில் அச்சம் எழுந்தது.

இந்தியாவில் மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா
கொரோனா தொற்று தற்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. நாட்டில் அண்மைக் காலமாக கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தொற்று பாதித்தவர்கள் இணை நோய்களுடன் உயிரிழந்துள்ளனர். அதன்படி, தற்போது வரை தமிழகத்தில் 4 பேர் உள்பட நாட்டில் 55 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன்முலம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5755 ஆக உள்ளது.
பரவும் செய்தி
இந்நிலையில் தான், பரவி வரும் கொரோனா தொற்றை குணப்படுத்த நாட்டு மருந்து பயன்படுத்தலாம் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றுக்கு கண்டுபிடிக்கப்பட்ட நாட்டு மருந்துக்கு பொது சுகாதாரத்துறை அங்கீகாரம் அளித்திருப்பதகாவும் ஒரு தகவல் பரவி வருகிறது.
"மும்பை கண்டுபிடித்த நாட்டு மருந்தை அரசு அங்கீகரித்துள்ளது. ஒரு ஸ்பூன் மிளகு பொடியும், இரண்டு ஸ்பூன் தேனும், கால் ஸ்பூன் இஞ்சி சாறும் கலந்து வெறும் வயிற்றில் 5 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் 100% கொரோனாவை தடுத்துவிடலாம்" என்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
இது தவறான தகவல் என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் (TN Fact Check Unit) வெளியிட்டுள்ள தகவலில், "கடந்த 2018 ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவலுக்கு முன் சளி மற்றும் இருமலுக்கான கசாயம் செய்வதற்கான சமையல் குறிப்பு ஒரு இணையதளத்தில் புகைப்படங்களுடன் வெளியானது. அதே புகைப்படத்துடன் அந்தச் சமையல் குறிப்பைக் கொரோனா மருந்து என்று பரப்பி வருகிறார்கள்.
உலக சுகாதார நிறுவனம் (WHO) தேன், இஞ்சி மற்றும் மிளகு கொரோனாவுக்கான மருந்து என்பதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரம் இல்லை என்று அறிவித்துள்ளது. தவறான தகவலைப் பரப்பாதீர்! எச்சரிக்கையுடன் இருப்பீர்!" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications