தோசை மாவு அரைக்கிறீங்களா? சர்க்கரை நோயாளிகள் இட்லி, தோசையை இனி இப்படி சாப்பிடுங்க.. சூப்பர் சத்துகள்
சென்னை: தோசைக்கு அரைக்கும்போது, ஒருசில விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தினாலே, ஆரோக்கியமான முழு உணவாக மாற்றிவிடலாம் என்கிறார்கள் உணவு நிபுணர்கள்.
சர்க்கரை நோயாளிகளின் பாதுகாப்பான உணவாக இட்லி திகழ்ந்து வருகிறது. இதற்கு காரணம், எண்ணெய், கொழுப்பு இல்லாதது.. கார்போஹைட்ரேட் நிறைந்த உணவாக இருந்தாலும், ஆவியில் வேகவைத்து எடுக்கும்போது, ஆரோக்கியம் கூடுகிறது.

சத்துக்கள்: இட்லிகள் எளிதில் செரிமானம் ஆகின்றன.. எனினும் கலோரிகள் அதிகம் இருப்பதால் அரிசிக்கு மாற்றாக ரவா இட்லி, கேழ்வரகு இட்லி, ஓட்ஸ் இட்லி என சிறுதானியங்களை சேர்த்து இட்லி செய்து சாப்பிட்டால் இன்னும் நல்லது.
அதுபோலவே, தோசையிலும் சில மாற்றங்களை செய்து கொள்ள வேண்டுமாம்.. காரணம், எண்ணெய் சேர்க்கப்பட்டு சுடப்படும் முறுவலான தோசைகளை சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்ல, இதயநோயாளிகளும் சாப்பிடக்கூடாது. அதாவது, ஒரு மசால் தோசையில் 387 கலோரி இருக்கிறதாம்.. ஒரு சாதா தோசையில் 133 கலோரிகள் இருக்கிறதாம்.
பாசிப்பருப்பு: அரிசியில் கிளைசெமிக் குறியீடு அதிகமாக உள்ளதால், அரிசியில் செய்த தோசைக்கு பதிலாக பாசிப்பருப்பில் செய்த தோசை சாப்பிடலாம். இதில் புரோட்டீன், நார்ச்சத்துக்கள், கனிம சத்துக்கள் அதிகமாக உள்ளன.
அதேபோல, வெள்ளை அரிசியுடன் என்றில்லாமல் சிவப்பு அரிசி, கோதுமை மாவு கலந்து தோசை செய்யலாம்.. அந்த தோசை மாவில், காய்கறிகள், வெங்காயம், நறுக்கி போட்டும் தோசை செய்யலாம்.. இதனால், தேவையான ஊட்டச்சத்துகள் உடலுக்கு கிடைக்கும். தோசை மாவில் கீரை வகைகளை துருவி போடலாம்.. அல்லது விழுதாக அரைத்தும் தோசை வார்க்கலாம்..
சத்தான தோசை: பாலக்கீரை - 2கப், கடலை மாவு - 1 கப், ஆளி விதை - 20 கிராம், தயிர் - 50 மில்லி அளவு, காய்ந்த மிளகாய், வெந்தயம் 1 ஸ்பூன், சீரகம் 1 ஸ்பூன் இவைகளை கலந்து தோசை செய்தால் உடலுக்கு நன்மையாகும்.
புழுங்கரிசி அரை கப், பச்சரிசி அரை கப், துவரம் பருப்பு அரை கப், கடலைபருப்பு அரை கப், கோதுமை அரை கப், வெந்தயம் 2 ஸ்பூன், மிளகு 2 ஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு சேர்த்து அரைத்து, இந்தமாவில் தோசை சுடலாம். அல்லது கருப்பு கொண்டை கடலை, கருப்பு உளுந்து, பாசிபருப்பு, வெந்தயம் இவைகளை 6 மணி நேரம் ஊறவைத்து அரைத்து, இந்த மாவில் தோசை செய்து சாப்பிடும்போது, ஊட்டச்சத்தும், உடலுக்கு தேவையான ஆற்றலும் கிடைக்கிறது. இதனால் உடல் எடையும் குறைகிறது.
தேங்காய் சட்னி: தோசைக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் தருகிறோமோ, அதே அளவுக்கு சட்னிக்கும் முக்கியத்துவம் தர வேண்டும. சர்க்கரை நோயாளிகள் தேங்காய் சட்னி சாப்பிட்டால் அதிக ஆபத்தை உண்டாக்கும்.. அதேபோல, தக்காளி சட்னிகளை, கிட்னி பாதிப்புள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். வேர்கடலைச் சட்னியையும் நீரிழிவு நோயாளிகள் குறைத்துக்கொள்ள வேண்டும்.
புதினா, கொத்தமல்லி சட்னியை அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும.. பருப்பு அல்லது சாம்பார் அதிக அளவில் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், காலை 8 முதல் 9 மணிக்குள் காலை உணவை சாப்பிட்டுவிட வேண்டுமாம்.












Click it and Unblock the Notifications