உடம்பு பூரா வியர்வை! டிரஸ்ஸே நனைந்து போச்சு! வீட்டுக்கு வந்து தண்ணீரை மடக் மடக்குனு குடிக்கலாமா?
சென்னை: அதீத வியர்வை வெளியேறும் போது மடக் மடக் என தண்ணீரை ஒரே நேரத்தில் குடிக்கலாமா என்பது குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கியுள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: வெயில் காலங்களில் வெளிப்புறங்களில் பணிபுரியும் போது பயணம் செய்யும் போது சராசரியாக வெளியேறும் வியர்வையை விடவும் மூன்று முதல் நான்கு மடங்கு வியர்வை வெளியேறும்.

வியர்வை வெளியேறுவதன் காரணம் என்ன? உடலின் மையப்பகுதி (CORE TEMPERATURE)சூடாகும் போது
உடலைக் குளிர்விக்கும் பொருட்டு வியர்வை வெளியேறுகிறது. இதற்காக உடல் முழுவதும் நமது சருமத்தில் வியர்வை சுரப்பிகள் உள்ளன. வியர்வையில் நீர் மட்டும் வெளியாவதில்லை.
அதனுடன் சோடியம், பொட்டாசியம் போன்ற முக்கிய தாது உப்புகளும் வெளியேறுகின்றன. மேலும் அதீத வியர்வை நீண்ட நேரம் ஏற்படும் போது நமது ரத்தத்தின் மொத்த நீர்ச்சத்து அளவு குறையும். இதனால் ரத்த நாளங்களுக்குள்ளேயே ரத்த உறைதல் நிகழ்வுகள் தூண்டப்படலாம்.
அதீத உடல் உழைப்பு, வெயில் காலங்களில் அதீத வியர்வை ஏற்படும் போது பொட்டாசியம் அளவு குறைந்து ஹைப்போ கலீமியா எனும் நிலை உண்டாகும். இந்த நிலையில் நமது இதயமானது தறிகெட்டுத் துடிக்க ஆரம்பிக்கும். இதன் விளைவாகவும் இதய செயல் முடக்க நிலை ஏற்படலாம். வியர்வை அதிகமாக வெளியேறும் போது அதை வெறுமனே நீர் மட்டும் கொண்டு ஈடுசெய்வதில் இன்னுமொரு பிரச்சனை இருக்கிறது.
அதீத உடல் உழைப்பினாலும் வெயில் காலங்களில் வெளியே விளையாடுவது / ஓடுவது போன்றவற்றில் ஈடுபடும் போது வியர்வையில் சோடியமும் வெளியேறும் என்று கண்டோம். இவ்வாறு நமது ரத்தத்தில் ஏற்கனவே சோடியம் குறைவாக இருக்கும் நேரத்தில் மிக அதிகமான அளவு தண்ணீரை ஒரே நேரத்தில் மடக் மடக் என்று குடித்தால் ரத்தத்தின் சோடியம் அளவுகள் இன்னும் அபாய அளவில் குறைந்து விடும்.
இதை "டைலூசனல் ஹைப்போநாட்ரீமியா" (DILUTIONAL HYPONATREMIA) என்று அழைக்கிறோம். இதன் விளைவாக வலிப்பு , மூளையில் வீக்கம் , கோமா மற்றும் மரணம் வரை ஏற்படலாம். முடிவுரை ஒரே நேரத்தில் மிக அதிகமான அளவு நீரை அருந்தக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக நீரை அருந்த வேண்டும்.
பொதுவாக வெயில் உச்சத்தில் இருக்கும் காலை பத்து மணி முதல் நான்கு மணி வரை - அத்தியாவசியத் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம். விளையாட்டைத் தவிர்ப்பது நல்லது. நீரிழிவு , ரத்தக் கொதிப்பு, இதய நோய், சிறுநீரக நோய், சிறுநீரகக் கற்கள் இருப்பவர்கள், கல்லீரல் நோய் இருப்பவர்கள், முதியோர்,ஒரு வயது தாண்டாத பச்சிளம் குழந்தைகள் , கர்ப்பிணிகள் கட்டாயம் வெயில் காலங்களில் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்ப்பதே நல்லது.
நீரிழிவு நோயர்கள் நீர்ச்சத்து கூட்டுவதற்கு இனிப்பு மிகுந்த பழச்சாறுகளை அருந்துதல் கூடாது. நீரிழிவு நோயர்கள் - நீர் மோர் , தயிர் , வெள்ளரிக்காய் சாறு, உப்பிட்ட லெமன் சாறு, உப்பிட்ட நெல்லிச் சாறு, அவகாடோ பழச்சாறு, வெள்ளரிப்பழம், ஸ்ட்ராபெர்ரி சாறு போன்றவற்றைப் பருகலாம். மேற்சொன்ன எதிலும் இனிப்பு சுவை தரும் சீனி/ நாட்டு சர்க்கரை / வெல்லம் / கருப்பட்டி / தேன் போன்றவற்றைச் சேர்க்கக் கூடாது.
அதீத வியர்வை ஏற்படும் அளவு வொர்க் அவுட், உடல் உழைப்பு , விளையாட்டு, மாரத்தான் ஓட்டம், பயணங்கள் என்று ஈடுபடும் போது நீர்ச் சத்துடன் கூடவே தாது உப்பு ( எலக்ட்ரோலைட்ஸ்) நிறைந்த ஓ.ஆர்.எஸ் கரைசல் , உப்பு சேர்த்த மோர் , உப்பு சேர்த்த கூழ், இளநீர் போன்றவற்றைப் பருக வேண்டும். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications