தொப்பை இருக்கா? தினமும் சுடு தண்ணீர் குடித்தால் உடல் எடை சட்டென குறையும்? மருத்துவர்கள் சொல்வது என்ன
சென்னை: உடல் பருமன் என்பது இப்போது மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. சூடான நீரைக் காலை நேரத்தில் குடித்தால் எடையைச் சட்டெனக் குறைக்கலாம் எனப் பலரும் கருதுகிறார்கள். ஆனால், இது எந்தளவுக்கு உண்மை.. சூடான நீர் உடல் எடையைக் குறைக்க எந்தளவுக்கு உதவும் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்த காலத்தில் உடல் எடை அதிகரிப்பு என்பது பெரும்பாலான மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையாக இருக்கிறது. உடல் பருமன் சிக்கல் என்பது சர்வதேச அளவில் மிகப் பெரிய சிக்கலாக உருவெடுத்துள்ளது. இந்தியாவும் அதற்கு விதி விலக்கு இல்லை..

உடல் எடை குறைப்பு
இதனால் உடல் எடையைக் குறைக்க அனைவரும் தீவிரமாக முயன்று வருகிறார்கள். இருப்பினும் உடல் எடை குறைப்பு என்பது அவ்வளவு ஈஸியான பயணம் எல்லாம் இல்லை. உடல் எடையைக் குறைக்க நாம் உணவு முறை மட்டுமின்றி வாழ்க்கை முறையிலும் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். அதுபோல தீவிர முயற்சி எடுத்து எடையைக் குறைத்த பலரையும் நாம் பார்த்து இருப்போம்.
அதேநேரம் இதைச் செய்தால் உடல் எடையைக் குறைக்கலாம்.. அதைச் செய்தால் உடல் எடையைக் குறைக்கலாம் எனப் பல டிப்ஸ்களும் கூட இணையத்தில் பரவி வருகிறது. உதாரணமாகப் புதினா, சீரகம், கிராம்பு ஆகியவற்றைச் சூடு நீரில் கலந்து குடித்தால்.. அது உடலில் உள்ள கூடுதல் கொழுப்பைக் குறைக்கும் என நம்பப்படுகிறது. இதுபோன்ற வெதுவெதுப்பான பானங்கள் எடை இழப்பை ஈஸியாக மாற்றிவிடும் எனப் பலரும் நம்புகிறார்கள்.. ஆனால், இது உண்மைதானா? இது தொடர்பாக மருத்துவர்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
வெதுவெதுப்பான நீர்
முதலில் வெதுவெதுப்பான நீரில் இதுபோன்ற பொருட்களைக் கலந்து சாப்பிடுவது உடல் எடையைக் குறைக்க உதவுமா? எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் இல்லை.. இது தொடர்பாக ஊட்டச்சத்து நிபுணர் அமிதா காத்ரே கூறுகையில், "வெதுவெதுப்பான நீர் பானங்கள் கொழுப்பைக் குறைக்க அல்லது கரைக்க உதவாது. இருப்பினும், காலையில் வெதுவெதுப்பான நீரைக் குடிக்கும் போது அது வயிற்றில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, உங்கள் செரிமான அமைப்பைச் சிறப்பாக மாற்ற உதவும். இது உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது, இது எடை இழப்புக்கு இன்றியமையாதது" என்றார்.
வேறு என்ன உதவும்
சரி சூடான நீர் எடை இழப்பிற்கு உதவாது என்றால் வேறு என்ன தான் உதவும். கலோரிகளை குறைவாக எடுத்துக் கொள்வதே இதற்கு நமக்கு உதவும். அதாவது நீங்கள் எடுத்துக் கொள்ளும் கலோரிக்களை விட அதிக கலோரிக்களை எரிக்க வேண்டும். அப்போது தான் உடல் எடையைக் குறைக்க முடியும். இது வயது, பாலினம், எடை ஆகியவற்றை பொறுத்தும் கூட மாறும். எல்லாவற்றையும் விட இதுபோல கலோரிகளை குறைவாக எடுத்துக் கொள்வதே உடல் எடை குறைப்பை வேகப்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
4 பாயிண்ட் முக்கியம்
உணவில் சாதம், சப்பாத்தியைக் குறைத்துவிட்டு காய்கறிகளை அதிகரிக்க வேண்டும். மேலும், சாப்பிடும் முன்பு பழங்களையும் கூட சாப்பிடலாம். இதன் மூலம் வயிறு ஈஸியாக நிரம்பிவிடும் என்பதால் நாம் குறைவாகச் சாப்பிடுவோம். அதேபோல தினசரி காலை முதல் இரவு வரை தொடர்ந்து தண்ணீரைக் குடித்துக் கொண்டே இருங்கள். மேலும், உணவை எப்போதும் ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இதைப் பின்பற்றினால் உடல் எடை குறைப்பைச் சற்று விரைவுபடுத்தலாம் என்கிறார்கள் வல்லுநர்கள்.












Click it and Unblock the Notifications