மண்டையை பிளக்கும் வெயில்! உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும்! இதை சாப்பிடுங்க போதும்
சென்னை: வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெயில் காரணமாக நமது உடல் பல விதமான பாதிப்புகளை எதிர்கொள்கிறது. இந்த கோடையில் இருந்து எஸ்கேப் ஆக நாம் என்ன செய்யலாம் என்பதைப் பார்க்கலாம்.
இப்போது நாடு முழுக்க மிகக் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடந்த மாதம் வெப்பம் மிக மோசமாக இருந்ததாக வானிலை மையமே எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோடைக் காலமே தொடங்காத நிலையில், பல பகுதிகளில் இப்போதே வெப்பம் சதத்தை நெருங்கிவிட்டது. வரும் காலங்களில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.

கோடை வெப்பம்
தொடர்ந்து வெப்பம் அதிகரிப்பதால், நமது ஆற்றலும் எனர்ஜியும் விரைவாகக் குறைந்துவிடும். கோடைக் காலத்தில் மிக விரைவில் சோர்வடைந்து விடுவோம். ஏனென்றால் நம் உடலில் இருக்கும் நீரின் அளவு வேகமாகக் குறைகிறது.. இத்துடன் சுட்டெரிக்கும் வெப்பமும் சேர்ந்து கொள்வதால், நமக்கு இது பல விதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதனால் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மற்றும் நம்மை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் முக்கியமாக மாறுகிறது.

என்ன சாப்பிடலாம்
தண்ணீர் குடித்தால் மட்டும் போதாது.. ஒவ்வொரு பருவத்திற்கு ஏற்ப நமது உணவு முறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். அதிக அளவு நீர்ச்சத்து மற்றும் வயிற்றைக் குளிர்விக்கும் பண்புகளைக் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த காய்கறி மற்றும் பழங்களை நமது அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டால் அது நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவை நமது உடலின் வெப்பத்தைக் குறைக்கவும் செரிமானம் முறையாக நடக்கவும் உதவுகிறது.

தயிர்
புரோபயாடிக்குகள் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. இது நமது செரிமான ஆரோக்கியத்திற்குக் காரணமாக உள்ளது. பால், பாலாடைக்கட்டி போன்ற பெரும்பாலான பால் பொருட்களில் புரோபயாடிக்குகள் உள்ளன. இருப்பினும் அவை ஜீரணிக்கக் கடினமாக இருக்கும். எனவே, அதற்குப் பதிலாக அன்றாட உணவில் தயிர் அல்லது மோரை சேர்த்துக் கொள்ளலாம்.வெப்பமான கோடை நாட்களில் உங்கள் வயிற்றைக் குளிர்ச்சியாக வைத்திருக்க ஒரு நாளைக்கு ஒரு முறையாவது தயிர் மோரை சாப்பிடுங்கள். நீங்கள் விரும்பும் பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் கலந்தும் கூட சாப்பிடலாம். மோராக எடுத்துக் கொண்டால் இன்னுமே எளிதாக ஜீரணமாகும்.

தர்பூசணி
கோடைக் காலத்தில் நீங்கள் எங்குத் திரும்பினாலும் தர்ப்பூசணிகளே இருக்கும். தர்பூசணி பழத்தில் மிக அதிகளவில் நீர்ச்சத்து உள்ளது, இது கோடைக் காலத்தில் சாப்பிடச் சிறந்த உணவுகளில் ஒன்றாகும். இது நம்மை மிகவும் குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவும். இது தவிர, எலுமிச்சை மற்றும் புதினா இலைகளுடன் ஜூஸ் போட்டும் குடிக்கலாம். இது நமது உடலின் வெப்பத்தைக் குறைத்துக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

இளநீர்
அதேபோல எவ்வளவு முடியுமோ அவ்வளவு இளநீரைக் குடியுங்கள்.. கோடைக்காலத்தின் சிறந்த பானமாக இளநீர் இருக்கிறது. இதில் ஏகப்பட்ட நன்மைகள் கொட்டிக் கிடக்கிறது. கோடைக் காலத்தில் அனைத்து இடங்களிலும் இது கிடைக்கும் என்பதால் வாங்குவதிலும் சிரமம் இருக்காது. அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களால் இது நிரம்பி இருக்கிறது. கோடை வெயிலுக்கு எதிராகப் போராட உதவும்.. தொடர்ந்து இளநீரைக் குடித்து வருவது கேன்சர் போன்ற நோயில் இருந்தும் நம்மை பாதுகாக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மூலிகை பானங்கள்
கோடையில் உடலை போதிய நீர்ச்சத்துடன் வைத்திருக்க மற்றொரு வழி இருக்கிறது. ஸ்பியர்மின்ட் (spearmint), லெமன் கிராஸ் (lemongrass) போன்ற மூலிகை கூலிங் எலிமெண்ட்களை கொண்டு பானங்களைத் தயாரித்துக் குடிக்கலாம். தண்ணீரில் புதினா இலைகள், எலுமிச்சை சாறு சேர்க்கவும். மேலும், இதில் உங்களுக்கு விருப்பமான பழங்களையும் துண்டு துண்டாகக் கட் செய்து சேர்க்கலாம். அதை நன்றாக மிக்ஸ் செய்து சிறிது நேரம் அப்படியே வைக்கவும். அதன் பிறகு எப்போது வேண்டுமோ அப்போது அதை குடிக்கலாம்.

வெள்ளரிக்காய்
வெப்பமான கோடை நாளில் நல்ல குளிர்ச்சியான ஒரு ஸ்நாக்ஸ் வேண்டும் என்றால் அதற்கு வெள்ளரிக்காய் தான் பெஸ்ட். இது போரிங்காக இருந்தாலும் கூட ஆரோக்கியமான சாலட்கள், ஜீஸ்களாக இதை எடுத்துக் கொள்ளலாம். வெள்ளரிக்காய் கட் செய்து தனியாகவும் சாப்பிடலாம், அதில் மற்ற விருப்பமான பழங்களைச் சேர்த்தும் சாப்பிடலாம். உணவில் சேர்க்கக் கொள்ள வேண்டிய அடிப்படை உணவுகள் இவை.
இது பொதுவான டிப்ஸ் மட்டுமே, இதை மருத்துவ ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உடல்நிலை பாதிப்புகள் ஏற்படும் போது, உடனடியாக மருத்துவரையே தொடர்பு கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications