ரூ.25000 தரும் தமிழக அரசு.. சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு ரெடியாகும் இளைஞர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்பட பல்வேறு உயர் அதிகாரிகளின் பணியிடங்களை நிரப்பும் யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வின் முதல் நிலை தேர்வில் வென்றவர்களுக்கு தமிழக அரசு ரூ.25 ஆயிரம் ஊக்கத் தொகையுடன் முதன்மைத் தேர்வுக்கு பயிற்சி அளிக்கிறது. இதற்கு வருகிற 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் அறிவித்துள்ளது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்' (Union Public Service commission) நடத்தும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் உள்ளிட்ட உயரிய பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வென்று பணிக்கு சேரும் தமிழர்களின் எண்ணிக்கை முன்பைவிட குறைந்துவிட்டது. பலரும் ஒயிட் கலர் ஜாப் எனப்படும், சாப்ட்வேர் என்ஜினியர், மருத்துவர், சிஏ என படிப்புகளில் சேர்ந்து லட்சங்களில் சம்பளம் வாங்கி செட்டில் ஆக நினைக்கிறார்கள்.

ஆனால் ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளில் சேர விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் குறைந்துவிட்டது. இதை உணர்ந்த தமிழக அரசு, சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற விரும்புவோருக்கு ஊக்கத் தொகையுடன் பயிற்சி அளிக்கிறது.
இதுபற்றி கடந்த 2022-23-ம் ஆண்டு தமிழக பட்ஜெட் உரையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்,அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காக பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளைச் செய்து உதவும் வகையில் ஒரு திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இதன்படி தமிழக அரசு 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வு பிரிவு செயல்பட்டு வருகிறது. இதில் மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இங்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியுடன் இணைந்து சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பு வெளியான உடன், 1,000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதம் ரூ,7,500 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்பட்டு முதல்நிலைத் தேர்வுக்கு பயிற்சியினை தமிழக அரசு வழங்குகிறது. அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்கான பயிற்சியும் அரசால் அளிக்கப்படுகிறது. அவ்வாறு பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் சமீபத்தில் சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான முதல்நிலைத்தேர்வு நடந்து முடிந்து அதற்கான தேர்வு முடிவும் வெளியானது. இந்த தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி ரூ.25 ஆயிரம் ஊக்கத் தொகையுடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் கீழ் இயங்கி வரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவு வாயிலாக மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த பயிற்சியை பெறுவதற்கு முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டு மாணவர்கள் https://portal.naanmudhalvan.tn.gov.in/upsc-registration என்ற இணையதளத்தில் வருகிற 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவு சிறப்புத் திட்ட இயக்குனர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications