திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் பல்வேறு காலியிடங்கள்.. விண்ணப்பிக்க 15-ந்தேதி கடைசிநாள்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள பிசியோதெரபிஸ்ட், ஆடியாலஜிஸ்ட், ஆடியோமெட்ரிசியன், தரவு மேலாளர், பல் மருத்துவ உதவியாளர், மருத்துவமனை பணியாளர் பணியிடங்கள் மற்றும் சித்த மருத்துவ பிரிவுகளின்கீழ் காலியாக உள்ள மருத்துவர்கள் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கத்தின் மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள பிசியோதெரபிஸ்ட், ஆடியாலஜிஸ்ட், ஆடியோமெட்ரிசியன், தரவு மேலாளர், பல் மருத்துவ உதவியாளர், மருத்துவமனை பணியாளர் பணியிடங்கள் மற்றும் சித்த மருத்துவ பிரிவுகளின்கீழ் காலியாக உள்ள மருத்துவர்கள் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கத்தின் மூலம் நிரப்பப்பட உள்ளது.

இது முற்றிலும் தற்காலிகமானது. பணிநிரந்தரம் செய்யப்படமாட்டாது. இதற்கான விண்ணப்ப படிவத்தை https://tiruppur.nic.in/noticecategory/recruitment என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் வருகிற 15-ந்தேதிக்குள் கிடைக்கும் வகையில் நிர்வாக செயலாளர், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், பூலுவப்பட்டி, நெருப்பெரிச்சல் சாலை, திருப்பூர் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமோ அனுப்பவேண்டும்" இவ்வாறு கூறியுள்ளார்.
திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே வெளியிட்ட இன்னொரு அறிவிப்பில், "திருப்பூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையம், திருப்பூர் மகளிர் திட்ட அலுவலகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 27-ந்தேதி திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் நடக்கிறது. அன்றைய தினம் காலை 8.30 மணி முதல் மாலை 3 மணி வரை நடக்கும், முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியானவர்களை தேர்வு செய்ய உள்ளனர். எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல் மற்றும் தொழிற்கல்வி பெற்றவர்கள், கணினி இயக்குபவர்கள், ஓட்டுனர்கள், தையல் பயிற்சி பெற்றவர்கள் என அனைத்து விதமான கல்வித்தகுதி உடையவர்களும் கலந்து கொள்ளலாம்.
தனியார் துறையில் வேலைக்கு சேர்வதால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது. இது முற்றிலும் இலவச சேவையாகும். இளைஞர்கள் தங்களின் கல்விச்சான்றிதழ்கள் மற்றும் சுய விவர குறிப்புடன் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். www.tnprivatejobs.tn.gov.inஎன்ற இணையதளத்திலும் முன்பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது" இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications