விந்தணு வடிவில் விசித்திர கறையான்.. திமிங்கிலம் தலை.. மீனை போல உடல்.. மர உச்சியில் வாழ்க்கை.. பார்ரா
பிரேசிலியா (பிரேசில்): விந்தணு போன்ற விசித்திர உடல் அமைப்பைக் கொண்ட ஒரு புதிய வகை கறையான் இனம் தென் அமெரிக்கக் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. மொபிடிக் திமிங்கலம் மற்றும் சிறிய மீன் வடிவத்தோடு ஒத்துப்போகும் இந்த உயிரினம், பூச்சியியல் உலகில் ஒரு பெரும் விசித்திரம் என்று ஆராய்ச்சியாளர்களால் வர்ணிக்கப்படுகிறது.. மனிதர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லாத இந்த அரிய வகை பூச்சி, இயற்கையின் மர்மமான படைப்புகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது..
தென் அமெரிக்காவின் அடர்ந்த காட்டு பகுதிகளில் ஒரு புதிய வகை உயிரினத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். காடுகளில் மிக உயரமான மரங்களின் மேல் பகுதியில் மறைந்து வாழ்ந்து வந்த இந்த அரிய வகை கறையானை தான் தற்போது ஆராய்ச்சியாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

கறையான் கண்டுபிடிப்பு
இது ஒரு கறையான் வகை என்கிறார்கள்.. ஆனால் நாம் வழக்கமாக பார்க்கும் கறையான்களுக்கும் இதுக்கும் துளியும் சம்பந்தம் கிடையாதாம்.. இதன் உடல் அமைப்பு வித்தியாசமாக இருக்கிறது..
இதன் தலைப் பகுதி வழக்கத்திற்கு மாறாக நீளமாக இருக்கிறது. ஒட்டுமொத்த உடல் அமைப்பைப் பார்த்தால், ஒரு சிறிய மீன் அல்லது விந்தணுவின் வடிவத்தை (Mini-Sperm) பிரதிபலிப்பது போல இருக்கிறதாம்.. விந்தணு வடிவம் என்று சொல்வதைவிட வித்தியாசமான வடிவம் என்றே சொல்லலாம்..
இதன் விசித்திரமான உருவத்தைப் பார்த்த விஞ்ஞானிகள், ஆரம்பத்தில் இது உண்மையாகவே கறையான் இனத்தைச் சேர்ந்ததுதானா என்று மண்டையை உடைத்து கொண்டார்கள்.. பிறகு மறுபடியும் ஆய்வில் இறங்கினார்கள்.. மிக நீண்ட ஆய்வுக்கு பிறகே, இது ஒரு புதிய வகை கறையான் இனம் என்பதை உறுதி செய்திருக்கிறார்கள்.
விசித்திரமான உயிரினம்
இந்த விசித்திரமான கறையான்களுக்கு விஞ்ஞானிகள் 'கிரிப்டோடர்ம்ஸ் மொபிடிக்கி' (Cryptotermes mobydicki) என்று பெயரும் வைத்திருக்கிறார்கள்.. மனித நடமாட்டம் இல்லாத, உயரமான மரங்களின் உச்சாணிக் கிளைகளில்தான் இவைகள் வாழுமாம்.. அதனால்தான் இத்தனை காலமும் இவை யாருடைய கண்ணிலும் படாமல் தப்பித்து வந்துள்ளன
இயற்கையின் விந்தையாகக் கருதப்படும் இந்த உயிரினம், பூமியில் இன்னும் மனிதர்களால் கண்டறியப்படாத பல மர்மங்கள் ஒளிந்திருப்பதை உலகிற்கு மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது..
ஆபத்து இல்லாத கறையான்
பொதுவாக கறையான் என்றாலே ஒருவித அச்சம் ஏற்படுவது இயல்பு. ஆனால், இந்த புதிய வகை கறையான்களால் மனிதர்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். இது முற்றிலும் காடுகளை மட்டுமே வாழ்விடமாகக் கொண்ட ஒரு அரிய பூச்சி இனமாகும். மனிதர்கள் வாழும் பகுதிக்கு வரவே வராதாம்..
அதுமட்டுமல்லாமல், இது மற்ற பூச்சிகளை போல அல்லாமல், அதன் பிரத்யேக உருவத்தால் மரங்களுக்கு இடையே மிக எளிதாக மறைந்து கொள்ளும் ஆற்றல் கொண்டது..
அரிய கண்டுபிடிப்பு
நிஜமாகவே இது ஒரு அரிய கண்டுபிடிப்பாகும். இதுவரை நாம் புத்தகங்களிலும், நேரடியாகவும் பார்த்த கறையான்களின் உருவத்தை இந்தப் புதிய கண்டுபிடிப்பு முற்றிலுமாக வேறுமாதிரி உள்ளது.. தென் அமெரிக்கக் காடுகளில் இன்னும் இதுபோல எத்தனை உயிரினங்கள் ஒளிந்திருக்கின்றனவோ தெரியவில்லை.
ஆனால் இந்த கறையான்களின் கண்டுபிடிப்பு பூச்சியியல் துறையில் ஒரு புதிய விவாதத்தைத் தொடங்கியுள்ளது. இவ்வளவு மாறுபட்ட உடல் அமைப்பைக் கொண்டுள்ள இந்த உயிரினம், எப்படி அப்படியொரு விசித்திரமான சூழலில் உயிர்வாழ்கிறது? அதன் உணவுப் பழக்கவழக்கங்கள் என்னென்ன? என்றெல்லாம் தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. உருவத்தில் மிகவும் சிறியதாக இருந்தாலும், இதைப் பற்றிய தகவல்கள் தற்போது இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது..!!!












Click it and Unblock the Notifications