ராகுல்காந்தி அப்செட்? தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து செல்வப்பெருந்தகை மாற்றமா?
சென்னை: வருமான வரித்துறை சோதனை விவகாரம், ராகுல் காந்தியின் பேச்சை தப்புத்தப்பாக மொழி பெயர்த்த உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், கே.எஸ்.அழகிரி ஆகியோரிடம் கருத்துக் கேட்டதை அடுத்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்து செல்வப்பெருந்தகை மாற்றப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் கடந்த 20ஆம் தேதி வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக செல்வப்பெருந்தகை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அன்றைய தினம் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்காக தென் தமிழகத்திற்கு வந்திருந்தார்.

அவரது பிரச்சாரத்திற்கு கூட தன்னை செல்லவிடாமல் அதிகாரிகள் சிறை பிடித்திருப்பதாக செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார். உடனே முதல்வர் ஸ்டாலின், தமிழக மேலிடப்பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து மத்திய அரசை விமர்சித்திருந்தனர்.
ஆனால் அப்படியொரு சோதனையே நடக்கவில்லை என வருமான வரித் துறை விளக்கம் அளித்திருந்தது. இது தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் 20 ஆம் தேதிக்கு முன்பு ராகுல் பிரச்சாரத்தை தவறாக செல்வப்பெருந்தகை மொழிபெயர்த்ததால் அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை என அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இரண்டு நாட்களுக்கு முன்பாக தமிழகத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தியின் ஆங்கில உரையைத் தமிழில் மொழிபெயர்த்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை, ராகுல்காந்தி பேசியதற்கு சற்றும் தொடர்பில்லாமல், தன் மனதில் தோன்றியதை எல்லாம் அடித்து விட்ட உண்மை, இன்றுதான் ராகுல் காந்திக்குத் தெரிந்திருக்கிறது போலும்.
அதனால் செல்வப்பெருந்தகையை இனிமேல் தனது கூட்டத்தின் பக்கமே விடாதீர்கள் என்று உத்தரவிட்டிருக்கிறார் என்று தெரிகிறது. இதனால் ராகுல் காந்தியின் இன்றைய கூட்டத்திற்கு தனக்கு அழைப்பில்லை என்ற உண்மை வெளிவந்தால், இன்னும் அசிங்கமாகிவிடும் என்ற பதற்றத்தில், செல்வப்பெருந்தகை, இன்று காலை, தனது வீட்டில் வருமானவரி சோதனை நடப்பதாகவும், தன்னை வீட்டிற்குள்ளேயே சிறைப்பிடித்து வைத்திருப்பதாகவும் ஒரு நாடகமாடினார்.
இதனை அடுத்து, வழக்கம்போல, சினிமா வசனங்கள் பேசி, முதலமைச்சர் ஸ்டாலினும் பொங்கல் வைக்க, தற்போது, சோதனை நடந்ததாக செல்வப்பெருந்தகை கூறியது முழுப் பொய் என்று, வருமான வரித்துறை தெளிவுபடுத்தியிருக்கிறது. மேலும், தன்னை வீட்டுக்குள்ளே முடக்கி வைத்ததாகக் கூறிய செல்வப்பெருந்தகை, வெளியே வந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவதிலிருந்து, அவர் கூறியது பொய் என்பது உறுதியாகியிருக்கிறது.
பள்ளி செல்லும் குழந்தைகள் போல ஒரு சாக்கு சொல்லி மாட்டிக் கொண்டுள்ளார் செல்வப்பெருந்தகை. அவரது நகைச்சுவையை நம்பி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் பொங்கல் வைத்திருப்பதுதான் உச்சகட்ட நகைச்சுவை. ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், அடிப்படையான விஷயங்களைக் கூட சரிபார்க்காமல் வடக்கு, தெற்கு என்று வசனம் பேசுவது, அவரது தேர்தல் தோல்வி பயத்தைக் காட்டுகிறது.
இந்த உதவாக்கரை கூட்டணி, தமிழக மக்களை எத்தனை ஏமாளிகள் என்று எண்ணினால், இப்படி ஒரு பொய்யை துணிந்து சொல்வார்கள்? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிலையில் செல்வப்பெருந்தகை மீது நடவடிக்கை எடுக்க காவல் துறை ஆணையரிடம் வருமான வரித் துறை தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வருமான வரித் துறை வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் சென்னைக்கு நேற்று முன் தினம் வந்த கே.சி.வேணுகோபால், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், கே.எஸ்.அழகிரி ஆகியோரிடம் வருமான வரித் துறை சோதனை நடத்தியதாக சொல்லப்படும் விவகாரத்தில் யார் சொல்வது உண்மை என விசாரித்துள்ளார்.
அவர்கள் இருவரும் தெரிவித்த கருத்துகளை, ராகுலிடம் வேணுகோபால் தெரிவித்துள்ளார். செல்வப்பெருந்தகை செயலால் பாஜகவினர் கடுமையாக டிரோல் செய்து வருவதால் ராகுல் அப்செட்டாகி உள்ளாராம். ஏற்கெனவே சட்டசபைத் தேர்தலுக்கு பின்னர் தலைவர் பதவியிலிருந்து செல்வப்பெருந்தகை மாற்றப்படுவார் என எதிர்கோஷ்டியினர் தெரிவித்து வருகிறார்கள்.
சட்டசபை தேர்தல் முடிந்ததும் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் செல்வப்பெருந்தகை விரைவில் தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications