வளர்ந்து வரும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பிரிவில் MSME-களின் பங்கு.. எதிர்கால வாய்ப்புகள் எப்படி இருக்கு..?
இந்தியப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் எம்.எஸ்.எம்.இ-க்கள் (MSMEs), வேலை வாய்ப்பு உருவாக்கம், ஜிடிபி மற்றும் ஏற்றுமதி என அனைத்திலும் பெரும் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக பிராந்திய வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும், பொருளாதார சமத்துவமின்மையை ஊக்குவிப்பதிலும் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
எம்.எஸ்.எம்.இ-க்களை பொறுத்த வரையில் அனைத்து துறைகளிலும் தங்களது காலடி தடத்தை பதிவு செய்திருந்தாலும், வலுவான வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படும் வேளையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable Energy) பிரிவில் அதன் பங்கு என்ன என்பதைத் தான் இப்போது பார்க்க போகிறோம்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்கு!
இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பிரிவில் 2030-ம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் மின் உற்பத்தி இலக்காக வைக்கப்பட்டுள்ளது. இது எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்கலாம். குறிப்பாக சோலார் பயன்பாடுகளுக்கான பிரேம்கள், கட்டமைப்புகள், இணைப்பு பெட்டிகள், பேட்டரி பெட்டிகள் மற்றும் இன்வெர்ட்டர்களின் சில பாகங்கள் போன்ற பல உதிரிபாகங்களை எம்.எஸ்.எம்.இ-க்கள் தயாரிக்கின்றன. மேலும் காற்றாலைகளுக்கான சிறிய அசெம்பிளிகள் மற்றும் ஃபாஸ்டென்னர்கள் (Fasteners) வழங்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
சிறந்த சப்ளையர்கள்
எம்.எஸ்.எம்.இ-க்கள் இந்தியாவில் உள்ள சிறிய அளவிலான சந்தைகளுக்கு சோலார் சார்ந்த பொருட்கள், சிறிய அளவிலான காற்றாலைகள் மற்றும் பயோமாஸ் சார்ந்த சாதனங்கள் உள்ளிட்ட பலவற்றையும் விற்பனை செய்யும் சிறிய டீலர்களாக வலம் வருகின்றன. சில்லறை விற்பனையிலும் எம்.எஸ்.எம்.இ-க்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
நிறுவனம் மற்றும் பராமரிப்பு?
சோலார் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பிரிவுக்கு தேவையான சப்ளை மட்டும் அல்ல, அதை நிறுவிக் கொடுத்தல், சிறிய அளவிலான திட்டங்களை இயக்குதல் மற்றும் நீண்ட காலத்திற்கு பராமரிப்பு சேவை வழங்குதல் ஆகியவற்றிலும் எம்.எஸ்.எம்.இ ஒப்பந்ததாரர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
அதோடு மின்சார வசதி இல்லாத பகுதிகளுக்கு சிறிய சோலார் மைக்ரோ கிரிட்களையும் அமைத்து கொடுக்கின்றன. மேலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பிரிவுக்கு தேவையான ஆலோசனை சேவைகள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் தளவாட ஆதரவையும் எம்.எஸ்.எம்.இ-க்கள் வழங்குகின்றன.
எதிர்கால வாய்ப்புகள் எப்படி?
எதிர்கால வளர்ச்சியானது பிரகாசமாக இருக்கும் பசுமை ஆற்றல் பிரிவில், எம்.எஸ்.எம்.இ-க்களின் பங்கு நிச்சயம் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கிரீன் ஹைட்ரஜன் பிரிவில் முக்கிய பங்கு இருக்கலாம். இது எதிர்காலத்தில் எரிசக்திச் சேமிப்புக்கு முக்கியமாகும், எலக்ட்ரோலைசர்களின் பாகங்களைத் தயாரிப்பது மற்றும் சிறிய அளவிலான சேமிப்பு அமைப்புகளை உருவாக்குவது போன்ற துணைத் தொழில்களிலும் எம்.எஸ்.எம்.இ-க்கள் நுழையலாம்.
மேற்கொண்டு மிகப்பெரிய அளவில் வேகமாக வளர்ந்து கொண்டு வரும் மின்சார வாகனங்களின் தேவை மத்தியில், அவற்றிற்கான சார்ஜிங் மையங்களுக்கான அம்சங்களைத் தயாரித்தல் மற்றும் அவற்றை பராமரிக்கும் சேவை வழங்குனர்களாகவும் எம்.எஸ்.எம்.இ-க்கள் உருவாகலாம்.
அதிகரித்து வரும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி மத்தியில், அவற்றை சேமிக்கும் தொழில் நுட்பத்தின் தேவையும் பல மடங்கு அதிகரிக்கலாம். ஆக மொத்தத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் எம்.எஸ்.எம்.இ-க்களின் பங்கு தவிர்க்க முடியாத ஒன்றாகவும் இருக்கலாம்.












Click it and Unblock the Notifications