மேட்ச் பிக்ஸிங்: சலீம் மாலிக், அடா உர் ரஹ்மானுக்கு ஆயுள் காலத் தடை
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சலீம் மாலிக் மற்றும் ஆல் ரவுண்டர் அடா உர் ரஹ்மான் ஆகிய இருவரும், மேட்ச் பிக்ஸிங்விவகாரத்தில் ஆயுள் கால தடை விதிக்கப்பட்டுள்ளனர்.
சலீம் மாலிக்கிற்கு ஆயுள் காலத் தடையுடன், அவர் மீது தேவைப்படும் கிரிமினல் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று வாரியம் அறிவித்துள்ளது. மேலும்18,000 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதன்கிழமை இந்தத் தடையை விதித்தது. நீதிபதி மாலிக் முகம்மது கயாம் தலைமையிலான விசாரணைக் கமிஷன்அறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் வீரர்கள் சிலர் மீது ஆஸ்திரேலிய வீரர்கள் மார்க் வாக், ஷான் வார்னே ஆகியோர் மேட்ச் பிக்ஸிங் தொடர்பாகபுகார் கூறினர். 1994-95ம் ஆண்டில் பாகிஸ்தானில், ஆஸ்திரேலிய அணி சுற்றுப் பயணம் செய்தபோது, சாதகமாக விளையாடுவதற்காக பாக். வீரர்கள்பேரம் பேசியதாக இருவரும் புகார் கூறியிருந்தனர். இதையடுத்து கயாம் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது.
விசாரணைக் கமிஷன் அறிக்கையை புதன்கிழமை செய்தியாளர்களிடம் வெளியிட்ட கிரிக்கெட் வாரியத் தலைவர் தக்கீர் ஜியா கூறுகையில், கமிஷன் அறிக்கையில்கூறப்பட்டுள்ள அனைத்து பரிந்துரைகளும் உடனடியாக அமல் செய்யப்படும். புகார் நிரூபிக்கப்பட்ட அல்லது தண்டனை விதிக்கப்பட்ட வீரர்கள்நீதிமன்றங்களில் மேல் முறையீடு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
மேட்ச் பிக்ஸிங்கில் அனைவரும் சலீம் மாலிக்கையே குற்றம்சுமத்தினர். புகார்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டால் மாலிக் தண்டனைக்குரியகுற்றவாளியாகிறார். மேலும், கிரிக்கெட்டிற்கு இழுக்கு ஏற்படுத்தியமைக்காகவும் அவர் தண்டிக்கப்பட வேண்டியவராகிறார்.
சர்வதேச அளவிலும், பாகிஸ்தானிலும் எந்த கிரிக்கெட் போட்டியிலும் அவர் கலந்து கொள்ள முடியாது என்றார் ஜியா.
சலீம் மாலிக் தவிர, வாசிம் அக்ரம், முஷ்டாக் அகமது, அடா உர் ரஹ்மான், வக்கார் யூனிஸ், இன்சமாம் உல் ஹக், சயீத் அன்வர், அக்ரம் ரஸாஆகியோர் மீதும் புகார் கூறப்பட்டிருந்தது. இவர்களில் அடா உர் ரஹ்மானுக்கு ஆயுள் தடை விதிக்கப்பட்டது. பிறருக்கு விளையாட்டுக்கு அவமரியாதைஏற்படுத்தியமைக்காக அபராதம் விதிக்கப்பட்டது.
இன்சமாம், அக்ரம் ரஸா ஆகியோருக்கு தலா 1 லட்சம் பாகிஸ்தான் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இருவரையும் தொடர்ந்து கண்காணித்து வர முடிவுசெய்யப்பட்டுள்ளது. வாசிம் அக்ரமின் அபராதம் குறித்து வெளியிடப்படவில்லை.
சயீத் அன்வருக்கு எதிரான குற்றம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் விசாரணையின்போது சாட்சியம் இல்லாததால், அதை அவர் மறைத்திருக்கலாம்என்று கருதி 1 லட்சம் பாகிஸ்தான் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நான் அப்பாவி : சலீம் மாலிக் புலம்பல்
தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை. நான் அப்பாவி என்று தடை குறித்துக் கருத்துத் தெரிவித்த சலீம் மாலிக் கூறியுள்ளார்.தொலைபேசியில் அவர் அளித்த பேட்டியில், நான் கடவுளுக்குப் பயப்படுகிறேன். நான் தவறு செய்யவில்லை. எனது கரங்கள் சுத்தமானவை என்றார் மாலிக்.
தனக்கும், ஆசிய கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராகவும் சர்வதேச பத்திரிகைகள் தொடர்ந்து விஷமப் பிரச்சாரம் செய்து வருகின்றன. அதன் ஒரு பகுதிதான்இந்தப் பொய்ப் புகார்கள் என்றும் மாலிக் கூறினார். இந்தத் தடையை எதிர்க்க முடிவு செய்துள்ளதாகவும், இன்னும் இரண்டு நாட்களில் நீதிமன்றத்தைஅணுகவிருப்பதாகவும் அவர் கூறினார்.