சேலம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருச்சி, நெல்லை ஆகியவை மாநகராட்சி அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டபோது அத்துடன் சேர்த்து மாநகராட்சியானதுதான் சேலம் நகரம்.

தமிழகத்தின் மாங்கனி நகரம் என்று அழைக்கப்படும் சேலம் தமிழகத்தின் ஐந்தாவது பெரிய நகரமாகும்.

1994ல்தான் சேலம் நகராட்சி மாகநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு முதன் முதலாக 1996ம் ஆண்டு தேர்தல் நடந்தது. முதல்மேயராக திமுகவைச் சேர்ந்த சூடாமணி தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் சேலம் மாநகராட்சிப் பகுதிகள் பல நல்ல திட்டங்களைக் கண்டுள்ளன. நல்ல சாலைகள், எரியக் கூடிய தெரு விளக்குகள், புதிய பேருந்துநிலையம் என மாநகர் என்ற தகுதிக்குரிய பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வெற்றி வாய்ப்பு யாருக்கு?

பல நல்ல விஷயங்கள் திமுகவுக்கு சாதகமாக இருந்தாலும் கூட சமூக விரோதிகளின் கொட்டம் அதிகரித்தது திமுகவுக்கு பெருத்த பின்னடைவைத் தரும்என்பதில் சந்தேகமில்லை. மேலும் திமுக அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் அவரது குடும்பத்தினரின் ஆதிக்கமும் இந்தக்குடும்பத்தினரின் கட்டைப் பஞ்சாயத்து-பணம் பறிப்பு விஷயங்களும் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக கூட்டணியில் இந்த முறை மேயர் பதவி பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் பலமான வன்னியசதாயத்தினர் சேலம் நகரில் கணிசமாக இருப்பதால் அந்தக் கட்சிக்கு ஓரளவு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு ஜெ கொடுத்த விருந்தில் சாப்பிட்ட கை கூட காயாத நிலையில் திமுக கூட்டணிக்கு பா.ம.க. தாவியிருப்பதால்மக்கள் மத்தியில் அந்த கட்சி குறித்து பெரும் அதிருப்தியும் நிலவுகிறது.

மாநில பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் இரா. அருள் இங்கு மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சேலம் தொகுதியில் அதிமுகவேபோட்டியிடவுள்ளது. அதன் வேட்பாளர் யார் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.

ஜாதி வாக்குகளை மட்டுமே நம்பி பா.ம.க. களத்தில் வெற்றி பெற முடியாது. திமுகவுக்கு இங்கு நல்ல வாக்கு வங்கி உள்ளது. எனவே திமுகவினரின்ஒத்துழைப்பால் மட்டுமே பா.ம.க. வெற்றிக் கனியை சுவைக்க முடியும். திமுகவினர் அதற்கு முழு மனதுடன் செயல்படுவார்களா என்பது சந்தேகமே.

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மேயர் தேர்தலில் தனது ஆதரவாளரை நிறுத்த முடிவு செய்திருந்தார். ஆனால் பா.ம.க. அதைத் தட்டிப் பறித்துக்கொண்டதால் அவர் அதிருப்தியுடன் இருப்பதாகத் தெரிகிறது. சேலத்தை தனது கோட்டையாக கருதி வருகிறார் வீரபாண்டி ஆறுமுகம்.

அங்கு பாட்டாளி மக்கள் கட்சி காலூன்றுவதை அவர் விரும்ப மாட்டார். எனவே பா.ம.கவின் வெற்றியைத் தடுக்க மறைமுகமாக அவர் வேலைசெய்வார் என்று திமுகவினர் மற்றும் பாமகவினர் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில் அதிமுகவுக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்த மாவட்டம் அதிமுகவின் கோட்டைகளில் ஒன்று. ஜெயலலிதா முதல்வர் பதவியைஇழந்தது தமிழகம் முழுவதிலும் ஓரளவு அனுதாப அலையை உருவாக்கி இருப்பதாக கருதப்படுகிறது. இந்த அலை, மற்றும் பாமகவின் நம்பிக்கைத்துரோகம் ஆகியவற்றைக் கூறி ஓட்டுக் கேட்க அதிமுக முடிவு செய்துள்ளது. இதற்கு நல்ல பலன் இருந்தால் மாங்கனி நகரம் அதிமுகவுக்குக் கைமாறும் வாய்ப்பு உள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற