அச்சிறுப்பாக்கம் இடைத் தேர்தலை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை:
அச்சிறுப்பாக்கம் இடைத் தேர்தல் செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக அத்தொகுதி தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த மே 31ம் தேதி சைதாப்பேட்டை, அச்சிறுப்பாக்கம் மற்றும் வாணியம்பாடி ஆகிய சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. இவற்றில் அச்சிறுப்பாக்கம் தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த பூவராகமூர்த்தி வெற்றி பெற்று எம்.எல்.ஏவானார்.
இந்நிலையில் அச்சிறுப்பாக்கம் தொகுதி இடைத் தேர்தலை செல்லாதது என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் இது தொடர்பாகத் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
அச்சிறுப்பாக்கம் தொகுதியில் நானும் சுயேச்சையாகப் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தேன். ஆனால் வயதைக் காரணம் காட்டி தேர்தல் அதிகாரி என்னுடைய மனுவைத் தள்ளுபடி செய்து விட்டார்.
அதிமுக வேட்பாளரான பூவராகமூர்த்தி வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத் தேர்தல் அதிகாரி திட்டமிட்டே என்னுடைய வேட்பு மனுவைத் தள்ளுபடி செய்தார்.
எனவே அச்சிறுப்பாக்கத்தில் நடந்த இடைத் தேர்தல் செல்லாது என்றும் பூவராகமூர்த்தி எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதையும் செல்லாது என்றும் அறிவிக்க வேண்டும் என்று ஆறுமுகம் அம்மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி தங்கவேலு இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அந்தத் தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications