துணை ஜனாதிபதி தேர்தல்: ஜெயலலிதாவிடம் ஆதரவு கேட்டார் ஷிண்டே
சென்னை:
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான சுசில் குமார் ஷிண்டே இன்று சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து அதிமுக தனக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்தத் தேர்தலில் ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும் மூத்த பா.ஜ.க. தலைவருமான பைரோன் சிங் ஷெகாவத்தும் ஷிண்டேயும் தான் நேரடிப் போட்டியில் ஈடுபட்டுள்ளனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ஷெகாவத்துக்கு ஏற்கனவே அதிமுகவின் ஆதரவைத் தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.
இந்நிலையில் இன்று காலை திடீரென்று சென்னை வந்த ஷிண்டே, நேரடியாக ஜெயலலிதாவைச் சென்று சந்தித்து துணை ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்தச் சந்திப்புக்குப் பின்னர் வெளியே வந்து நிருபர்களிடம் ஷிண்டே பேசுகையில்,
ஜெயலலிதா மதச்சார்பின்மைக்கு ஆதரவாளர் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
எனவே மதச்சார்பின்மைக்கு ஆதரவளிக்கும் விதமாக இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராகிய எனக்கே அதிமுகவினர் வாக்களிக்க வேண்டும் என்று ஜெயலலிதாவிடம் கேட்டுக் கொண்டேன்.
அதேபோல் மத்திய அரசுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கி வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியையும் சந்தித்து தனக்கு ஆதரவாக வாக்களிக்கும் படி கோருவேன்.
துணை ஜனாதிபதி தேர்தலின் முடிவு குறித்து இப்போதைக்கு ஒன்றும் கூற முடியாது. எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார் ஷிண்டே.












Click it and Unblock the Notifications