பெங்களூரில் போலீசார் சுட்டு இமாம் அலி உள்பட 5 தீவிரவாதிகள் கொலை
பெங்களூர்:
மதுரை மாவட்டம் திருமங்கலத்திலிருந்து கடந்த மார்ச் 7ம் தேதி போலீசாரின் பிடியிலிருந்து தப்பிச் சென்றஅல்-உம்மா தீவிரவாதியான இமாம் அலியை பெங்களூரில் தமிழகப் போலீசார் இன்று அதிகாலை சுட்டுக்கொன்றனர். அவனுடன் ஒரு பெண் உள்பட வேறு 4 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மேலூரைச் சேர்ந்த 32 வயதான இமாம் அலி தன்னுடைய கூட்டாளியான ஹைதர் அலியுடன் கடந்த மார்ச் 7ம்தேதி திருமங்கலம் போலீஸ் நிலையம் வாசலில் வேனில் வைக்கப்பட்டிருந்த போது தப்பி விட்டனர்.
டாடா சுமோ வேனில் வந்த வேறு சில தீவிரவாதிகள் போலீஸ் நிலையத்தில் குண்டுகளை வீசியும், போலீசாரைநோக்கித் துப்பாக்கியால் சுட்டும் இமாம் அலியையும் ஹைதர் அலியையும் தப்பிக்க வைத்தனர்.
அடுத்த ஒரு வாரத்திலேயே சிவகங்கையில் வைத்து ஹைதர் அலியைப் போலீசார் கைது செய்தனர். ஆனால் இமாம்அலி மட்டும் தொடர்ந்து தலைமறைவாகி இருந்தான். நாடு முழுவதும் அவனைப் போலீசார் சல்லடை போட்டுத்தேடி வந்தனர்.
இதற்கிடையே இவர்கள் இருவரும் தப்பிக்கக் காரணமாக இருந்த சுமார் 23 பேரைப் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் பெங்களூர்-சஞ்சய் நகரில் உள்ள ஒரு வீட்டில் இமாம் அலி தன் கூட்டாளிகளுடன்தங்கியிருப்பதாகத் தெரிய வந்தது. இதையடுத்து பெங்களூர் போலீசார் உடனடியாகத் தமிழகப் போலீசாரிடம்தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து கோயம்புத்தூர் போலீஸ் டி.ஐ.ஜி. அஷூதோஷ் சுக்லா மற்றும் மதுரை துணைப் போலீஸ் கமிஷனர்ஷகீல் அக்தர் ஆகியோர் தலைமையிலான ஒரு தனிப் படை பெங்களூர் விரைந்தது. அவர்களுடன் பெங்களூர்போலீசாரும் சேர்ந்து கொண்டு இன்று அதிகாலை சுமார் 2 மணிக்கு இமாம் அலி தங்கியிருந்த வீட்டைச் சுற்றிவளைத்தனர். அவனுடன் வேறு சில தீவிரவாதிகளும் அங்கிருந்தனர்.
அவர்களை உடனடியாகச் சரணடைந்து விடுமாறு போலீசார் கூறினார். ஆனால் தீவிரவாதிகள் சரணடையமறுக்கவே அவர்களை வெளியே கொண்டு வருவதற்காகக் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை போலீசார் எறிந்தனர்.இதைத் தொடர்ந்து இமாம் அலி உள்ளிட்ட தீவிரவாதிகள் ஜன்னல் வழியாகத் துப்பாக்கிகளால் போலீசாரைநோக்கிச் சராமாரியாகச் சுட்டனர்.
இதை எதிர்பார்த்திருந்த போலீசாரும் உடனே பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசாருக்கும்தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
அப்போது அந்த வீட்டை விட்டு இமாம் அலி உள்ளிட்ட ஐந்து தீவிரவாதிகளும் தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால்அவர்கள் தப்பிச் செல்ல முடியாதபடி சுற்றி வளைத்துப் போலீசார் சுட்டதில் ஐவருமே குண்டு பாய்ந்துஉயிரிழந்தனர்.
இமாம் அலி தவிர மதுரையைச் சேர்ந்த முகமது இப்ராஹிம், சைபுல்லா, சைபுல்லாவின் மனைவி மற்றும்மேலப்பாளையத்தைச் சேர்ந்த மங்கா பஷீர் ஆகியோர் தான் மற்ற நான்கு பேர் என்று தெரிய வந்துள்ளது.
ஐந்து பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக உடனடியாக பெங்களூர் அரசு மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டன.
மேலும் இந்தக் கடுமையான துப்பாக்கிச் சண்டையில் குண்டுக் காயமடைந்த 13 போலீசாரும் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு லேசான காயம் தான் என்றும் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் போலீசார்தெரிவித்தனர்.
தீவிரவாதிகள் தங்கியிருந்த வீட்டிலிருந்து ஏ.கே.47 உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களையும் போலீசார்கைப்பற்றினர். அந்த வீட்டிற்குச் சொந்தக் காரர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். கடந்த மூன்று மாதங்களாக அவர்கள் இங்கு தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு வழக்கு, சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலகக் குண்டு வெடிப்பு உள்ளிட்ட பலவழக்குகள் தொடர்பாக இமாம் அலி கைது செய்யப்பட்டிருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications