எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேறியது மதமாற்ற தடை சட்டம்
சென்னை:
பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் இன்று தமிழக சட்டசபையில் கடும்எதிர்ப்புகளுக்கு இடையே ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த 5ம் தேதி தமிழக அரசு இந்தச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. அறிமுகமான அடுத்த நாளே சிறுபான்மைமத அமைப்புகளும், திமுக, பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதைக் கடுமையாக எதிர்த்தன.
இந்த மதமாற்றத் தடைச் சட்டத்தை எதிர்த்து சிறுபான்மை கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் மத அமைப்புகள் கடந்த 24ம்தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தின.
போராட்டத்தின் முடிவில் சென்னையில் பிரம்மாண்டமான மாநாடும் நடத்தப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதிஉள்ளிட்ட ஏராளமான கட்சித் தலைவர்களும் இதில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் நேற்று தமிழக சட்டசபையில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.இதைத் துவக்க நிலையிலேயே எதிர்க்கிறோம் என்று திமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கூறினார்.
இதையடுத்து இன்று இம்மசோதா குறித்து சட்டசபையில் விவாதம் நடைபெற்றது. ஆளும் அதிமுகஎம்.எல்.ஏக்களுக்கும் எதிர்க் கட்சி எம்.எல்.ஏக்களுக்கும் இடையே அனல் பறக்கும் விவாதம் நடந்தது.
ஜெ. விளக்கம்:
கட்டாய மதமாற்றச் சட்டம் குறித்து விளக்கமளித்து முதல்வர் ஜெயலலிதா பேசுகையில்,
கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் எந்த ஒரு மதத்தையுமோ அல்லது சிறுபான்மை இனத்தவரையுமோ மனதில்வைத்து கொண்டுவரப்படவில்லை.
தாங்களாகவே விருப்பப்பட்டு மதம் மாற நினைப்பவர்கள் யாரையும் இந்தச் சட்டம் ஒன்றும் செய்யாது, செய்யவும்முடியாது.
வற்புறுத்தியும், ஆசை காட்டியும், ஏமாற்றியும் மதமாற்றம் செய்ய முயற்சிப்பவர்கள் மட்டுமே இந்தச் சட்டத்தின்மூலம் தண்டிக்கப்படுவார்கள்.
கடந்த 1981ம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் சுமார் 800 தலித் மக்கள் வற்புறுத்தலின்பேரில் முஸ்லீம் மதத்திற்கு மாறினர்.
தொடர்ந்து 1982ம் ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் ஏற்பட்ட பயங்கரமானகலவரத்திற்கு மதமாற்ற முயற்சி தான் காரணம் என்றும் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக விசாரணை செய்தகமிஷனும் மதமாற்றத் தடைச் சட்டம் கட்டாயம் தேவை என்று பரிந்துரை செய்துள்ளது.
இதையடுத்து கடந்த 1997ம் ஆண்டில் கூட ராமநாதபுரம் மாவட்டத்தில் மதமாற்ற சம்பவம் நடந்துள்ளது.இப்போதும் கூட விருதுநகர், தேனி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஏராளமானோர் மதம் மாறப் போவதாகஅறிவித்துள்ளனர்.
""மதமாற்ற முயற்சி என்பது ஒரு கொடுமையான செயல். எனக்கு மட்டும் இதற்கான அதிகாரத்தைக் கொடுத்தால்நான் நிச்சயம் இம்முயற்சிகளைத் தகர்த்து எறிந்து விடுவேன்"" என்று மகாத்மா காந்தியடிகளே கூறியுள்ளார்(ஜெயலலிதா இவ்வாறு பேசும் போது காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் அதற்குக் கடும் ஆட்சேபம்தெரிவித்தனர்).
சிறுபான்மையினரின் உரிமைகளையோ, நலன்களையோ இந்தச் சட்டம் எந்தவிதத்திலும் குலைத்து விடாது.மத்தியப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் ஒரிசா போன்ற மாநிலங்களில் கூட இது போன்ற சட்டம்உள்ளது.
மதமாற்ற முயற்சிகளைத் தடுப்பது குறித்து குற்றவியல் சட்டத்திலும் எதுவும் கூறப்பட்டிருக்கவில்லை. எனவேமதமாற்றத்தைத் தடை செய்வதன் அவசியம் குறித்து உணர்ந்தே தமிழக அரசு இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது என்றார் ஜெயலலிதா.
பா.ஜ.க.-தி.மு.க. மோதல்:
பா.ஜ.க. உறுப்பினர்கள் மதமாற்றத் தடைச் சட்டத்திற்கு ஆதரவாக ஆரம்பத்திலிருந்தே குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இன்றைய விவாதத்தின் போது பலமுறை பா.ஜ.க. உறுப்பினர்களும், இந்தச் சட்டத்தை எதிர்க்கும்திமுக எம்.எல்.ஏக்களும் அடிக்கடி வார்த்தைகளால் மோதிக் கொண்டனர்.
மத்தியில் இந்த இரு கட்சிகளும் ஒரே கூட்டணியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஓட்டெடுப்பு:
அனல் பறக்கும் விவாதம் முடிந்தவுடன் எதிர்க் கட்சிகளின் வற்புறுத்தலைத் தொடர்ந்து இந்தச் சட்ட மசோதாதொடர்பாக ஓட்டெடுப்பும் நடந்தது.
கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்திற்கு ஆதரவாக 140 வாக்குகளும் எதிராக 73 வாக்குகளும் விழுந்தன.
திமுக தலைவர்கள் கருணாநிதியும் அன்பழகனும் வழக்கம் போல் சபைக்கு வரவில்லை. இவர்கள், சபாநாயகர்காளிமுத்து உள்ளிட்ட 20 பேர் இன்றைய ஓட்டெடுப்பில் பங்கு கொள்ளவில்லை
இதையடுத்து கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு விட்டதாக சபாநாயகர்அறிவித்தார்.
உயிருடன் புதைப்பதை தடுக்கும் சட்டமும்...
இதற்கிடையே ஒருவரை உயிருடன் மண்ணுக்குள் புதைத்து வெளியே எடுப்பதைத் தடுக்கும் சட்டமும் இன்றுஎந்தவிதமான விவாதமும் எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது.
மதுரை மாவட்டம் பேரையூரில் சில மாதங்களுக்கு முன் கோவில் திருவிழாவின் போது சிறுமிகளை உயிருடன்புதைத்து, பின்னர் சில நிமிடங்கள் கழித்து எடுக்கும் நிகழ்ச்சிகள் நடந்தன.
இதைத் தடை செய்வதற்காகத் தமிழக அரசு சமீபத்தில் ஒரு சட்டம் கொண்டு வந்தது. அந்தச் சட்டம் இன்றுசட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது.
மதமாற்ற தடை சட்டம்: இன்று சட்டசபையில் விவாதம்


