காஷ்மீர் படுகொலை: பாகிஸ்தானே காரணம்- அத்வானி ஆவேசம்
விமானப் படை விமானம்:
காஷ்மீரில் 24 இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் நாடுதான் காரணம் என்றுதுணைப் பிரதமர் அத்வானி கூறியுள்ளார்.
புல்வாமா மாவட்டத்தில் உள்ள நந்திமார்க் கிராமத்தில் ராணுவ உடையில் நுழைந்த தீவிரவாதிகள்,அங்கிருந்த போலீசார் வைத்திருந்த துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைப் பறித்துக் கொண்டனர்.
பின்னர் 11 பெண்கள், இரண்டு குழந்தைகள் உள்பட 24 இந்துக்களை வரிசையாக நிற்க வைத்துஅவர்களைச் சராமாரியாகச் சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள் பின்னர் தப்பி ஓடிவிட்டனர்.
இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்ப்பதற்காக டெல்லியிலிருந்து காஷ்மீருக்குஅத்வானி இன்று கிளம்பினார். இந்திய விமானப் படையின் சிறப்பு விமானத்தில் அவர்நிருபர்களிடம் கூறுகையில்,
நேற்று நடந்துள்ள இந்தப் படுகொலைகள் காஷ்மீரில் அமைதியை நம்பி திரும்பிக் கொண்டிருந்தமக்களுக்குத் தீராத காயத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்தக் கொடூரமான தாக்குதலை அண்டை நாட்டைச் சேர்ந்த தீவிரவாதிகள்தான் நடத்தியுள்ளனர்(பாகிஸ்தான் என்று அத்வானி நேரடியாகக் குறிப்பிடவில்லை).
காஷ்மீரில் அந்த நாடு நடத்தி வரும் வன்முறை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளதுஎன்றார் அத்வானி.
தீவிரவாதிகளை ஒடுக்க காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீத் தவறி விட்டாரா என்று நிருபர்கள்கேட்டதற்கு, "இப்போதைக்கு இது குறித்து ஒன்றும் என்னால் சொல்ல முடியாது. சம்பவம் நடந்தஇடத்தைப் பார்வையிட்ட பின்னர் டெல்லி திரும்பி மத்திய அமைச்சரவையின் பாதுகாப்புக் குழுகூட்டத்தில் அறிக்கையை சமர்ப்பிப்பேன். அதன் பிறகு மற்றதைப் பார்த்துக் கொள்ளலாம்" என்றுஅத்வானி பதிலளித்தார்.
காஷ்மீரில் பந்த்:
இதற்கிடையே இந்தப் படுகொலைகளைக் கண்டித்து காஷ்மீர் மாநிலத்தில் இன்று முழு அடைப்புநடந்து வருகிறது.
இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள்,பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. சாலைகளில் வாகனப் போக்குவரத்து இல்லை.
அனைத்துக் கட்சி சார்பில் நடைபெறும் பந்த்தையொட்டி மாநிலம் முழுவதும் போலீசாரும்,பாதுகாப்புப் படையினரும் தீவிரப் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
ஐ.நா. கண்டனம்:
இந்நிலையில் காஷ்மீர் படுகொலை சம்பவங்களை பிரான்ஸ், பாகிஸ்தான் மற்றும் ஐரோப்பியக்கூட்டமைப்பு நாடுகள் கண்டித்துள்ளன.
மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரான கோபி அன்னானும் இதற்குக் கடும்கண்டனம் தெரிவித்துள்ளார்.
"பயங்கரவாதிகளின் கொடூரத் தாக்குதல்" இது என்று கூறியுள்ள அன்னான், உயிரிழந்தவர்களின்குடும்பங்களுக்கு தன்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
இதற்கிடையே தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஒமர்அப்துல்லா இந்தப் படுகொலை குறித்துக் கூறுகையில், பாகிஸ்தானின் லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும்ஜெய்ஷ்-ஏ-முகமது தீவிரவாதிகள்தான் இதற்குக் காரணம் என்று கூறியுள்ளார்.
வாஜ்பாய் நிதியுதவி:
இதற்கிடையே காஷ்மீர் படுகொலைச் சம்பவம் தொடர்பாக விவாதிப்பதற்காக மத்தியஅமைச்சரவையின் பாதுகாப்புக் குழு இன்று மீண்டும் கூடுகிறது.
இதையொட்டி, தான் பிரதமராகப் பதவியேற்று ஐந்து ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும்வகையில் சக அமைச்சர்களுக்காக இன்று இரவு ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தை வாஜ்பாய்ரத்து செய்துள்ளார்.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும்வாஜ்பாய் அறிவித்துள்ளார். பிரதமர் நிவாரண நிதியிலிருந்து இந்த உதவி அளிக்கப்படும்.
தீவிரவாதிகள் தாக்கி ராணுவ அதிகாரி பலி:
இதற்கிடையே பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் ஒரு ராணுவஅதிகாரியும், ஒரு பாதுகாப்புப் படை வீரரும் கொல்லப்பட்டனர்.
இன்று காலை சூரன்கோட் மலைப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது பாதுகாப்புப்படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
பாதுகாப்புப் படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்துவதற்குள் தீவிரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர்.


