காவிரி ஆணையத்தை கூட்ட கோருகிறார் ஜெயலலிதா
சென்னை :
காவிரி ஆணையக் கூட்டத்தை உடனடியாக கூட்டுமாறு பிரதமர் வாஜ்பாய்க்கு, முதல்வர்ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வாஜ்பாய்க்கு எழுதியுள்ள கடிதத்தில்,
கர்நாடக அரசு, காவிரி நடுவர் மன்ற இடைக்கால உத்தரவுப்படி தமிழகத்திற்கு உரிய நீரைத் திறந்துவிடவில்லை. இதனால் தமிழக காவிரிப் பாசனப் பகுதிகளுக்கு உரிய நீரை மேட்டூர் அணையில்இருந்து இந்த ஆண்டு திறந்து விட இயலவில்லை.
கடந்த 1ம் தேதி நடந்த காவிரிக் கண்காணிப்பு கூட்டத்தில், பற்றாக்குறை காலத்தில் கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள் குறித்த புதிய திட்டத்தை கர்நாடக அரசு ஏற்கவில்லை.
இருப்பினும், கர்நாடக அரசு புறக்கணித்தாலும் கூட இந்தத் திட்டத்தை காவிரி ஆணையத்திற்குப்பரிந்துரைக்கப் போவதாக கண்காணிப்புக் குழு கூறியுள்ளது.
ஆகஸ்ட் மாதம் வரை, தமிழகத்திற்கு கர்நாடகம் 107.64 டிஎம்சி தண்ணீரைத் திறந்து விட்டிருக்கவேண்டும். ஆனால் மிகச் சிறிய அளவிலேயே நீரை கர்நாடகம் விட்டு வருகிறது. இன்னும் 90.31டிஎம்சி தண்ணீர் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு வர வேண்டியுள்ளது.
எனவே இந்தப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க காவிரி ஆணையக் கூட்டத்தை உடனடியாக கூட்டவேண்டும் என அக் கடிதத்தில் கோரியுள்ளார் ஜெயலலிதா.
நேற்று முன் தினம் சென்னை வந்த வாஜ்பாயைச் சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி, காவிரிஆணையக் கூட்டத்தைக் கூட்டுமாறு கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்துஜெயலலிதா இக் கோரிக்கையை முன் வைத்துள்ளார்.


