அமைச்சர்களை வெளியேற்ற ராவ் உத்தரவு: பணம் கொடுத்தார்களா?- கிராமங்களில் விசாரணை
சென்னை:
தேர்தல் பிரச்சாரம் முடிவடையவுள்ள நிலையில் அதிரடி சிறப்புப் பார்வையாளரான கே.ஜே.ராவ், இன்று மீண்டும் தமிழகம்வந்தார். இன்று காஞ்சி தொகுதியில் அவர் ஆய்வு நடத்தினார்.
இரு தொகுதிகளிலும் இன்று மாலையுடன் பிரசாரம் முடிவடைவதால் மத்திய திமுக அமைச்சர்கள், மாநில அதிமுக அமைச்சர்கள்உட்பட வெளி நபர்களை தொகுதிகளை விட்டு வெளியேற அவர் உத்தரவிட்டார்.
மேலும் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் கொடுத்ததாக வந்த புகார் குறித்து பல்வேறு கிராமங்களுக்கும் கே.ஜே.ராவ்அதிரடி விசாரணை நடத்தினார்.
இன்று காலை டெல்லியில் இருந்து வந்த ராவ் இரு தொகுதிகளிலும் மாற்றி, மாற்றி கண்காணிப்பு மேற்கொள்கிறார். தேர்தல்முடியும் வரை தமிழகத்திலேயே தங்கப் போகும் ராவ், இரு தொகுதிகளிலும் தேர்தல் எப்படி நடந்தது என்ற விவரத்தையும்தேர்தல் கமிஷனுக்குத் தந்துவிட்டே தமிழகத்தை விட்டு வெளியேறுவேன் என்று கூறியுள்ளார்.
தமிழகம் என்றால் எல்லாம் சரியாக இருக்கும் என்ற தனது கணிப்பை இந்த இடைத் தேர்தல் பொய்யாக்கிவிட்டதாகவருத்தப்படும் ராவ், பிகாரில் லாலுவுக்கே கடிவாளம் போட்டு தேர்தலில் முறைகேட்டைத் தடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போலீசாருக்கு எச்சரிக்கை:
தமிழகத்தில் அதிமுக, திமுக என இரு தரப்பினருமே போட்டி போட்டுக் கொண்டு முறைகேடுகளில் ஈடுபட்டதை சுட்டிக் காட்டும்ராவ், தேர்தல் முறைகேட்டுக்கு போலீசார் உடந்தையாக இருந்தால் கொஞ்சம் கூட தயக்கமே இல்லாமல் சஸ்பெண்ட் செய்வேன்என்றும் எச்சரித்துள்ளார்.
35 ஆண்டுகள் தேர்தல் கமிஷனிலேயே பணியாற்றியுள்ள ராவ், பணி ஓய்வு பெற்ற அதிகாரி. ஆனாலும் அவரது நேர்மை,கண்டிப்பு காரணமாக அவரை தேர்தல் கமிஷன் சிறப்புப் பார்வையாளராக தொடர்ந்து பணியில் வைத்துள்ளது.
ராவின் உத்தரவுகளுக்குப் பின்னரே மத்தியப் படைகள் இந்த இரு தொகுதிகளுக்கும் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.போலீசாரின் செயல்களில் ராவுக்கு திருப்தி இல்லை.
இதனால் ஒவ்வொரு வாக்குப் பதிவு மையத்திலும் மத்திய பாதுகாப்புப் படை வீரர்களை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார்.
மீண்டும் வந்தார்:
கடந்த இரண்டு நாட்களாக ராவ் இல்லாததால், இரு கட்சிகளும் மீண்டும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதுகுறிப்பிடத்தக்கது. இதில் அதிமுகவுக்கு போலீசாரும் மாவட்ட அதிகாரிகளும் உடந்தையாக இருந்தனர்.
முன்னதாக இன்று காலை காஞ்சிபுரம் வந்த ராவ் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆட்சித் தலைவர் வெங்கடேசன்,தேர்தல் அதிகாரி அன்பழகன் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
இதைத் தொடர்ந்து வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாக திமுக மற்றும் அதிமுக சார்பில் பரஸ்பரம் கொடுக்கப்பட்டபுகார்கள் குறித்து விசாரிக்க காஞ்சி தொகுதிக்குட்பட்ட கிராமங்களுக்கு ராவ் புறப்பட்டுச் சென்றார்.
காரில் ஏறி உட்கார்ந்த அவர் எங்கே போகிறார் என்று தெரியாமல் கலெக்டர் வெங்கடேசனும் எஸ்பி சமுத்திரபாண்டியனும்தங்களது காரிகளில் ஓடிப் போய் ஏறி பின் தொடர்ந்தனர்.
எப்ஐஆர் போடுங்க...
நேராக ரங்கசாமி குளத் தெருவுக்குப் போனவர் அங்கிருந்த அதிமுக, திமுக பேனர்களைப் பார்த்து, இதை அவர்கள் இன்னும்அகற்றவில்லையா? இருவர் மீதும் எப்ஐஆர் போடுங்கள் என்று கூறிவிட்டுப் புறப்பட, கரைவேட்டிகள் ஓடி வந்து பேனர்களைபிய்த்து கையில் எடுத்துக் கொண்டு ஆளுக்கொரு பக்கம் ஓடின.
அடுத்ததாக வாக்குகள் எண்ணப்படவுள்ள காஞ்சி பச்சையப்பா கல்லூரிக்குச் சென்ற அவர், அந்த இடத்தின் பாதுகாப்பு குறித்துஆய்வு நடத்தினர்.
லாலாஜா ரோட்டில் அதிகாரிகள் செல்லத் தயங்கும் ஒரு மகா மோசமான சாலையில் காரை விடச் சொன்னார். நத்தப்பேட்டை என்றகிராமத்தை அடைந்து அங்கிருந்த டீக் கடைக்காரரிடம் இங்கே ஓட்டுபோட காசு கொடுத்தார்களா என்று கேட்டார்.
காசு குடுத்தாங்களா?:
கடைக்காரரர் கவுண்டமணியை பார்த்த செந்தில் மாதிரி பல்வேறு முகபாவங்களைக் காட்ட, பணம் தரப்பட்டதை உணர்ந்துகொண்ட ராவ் அப்படியே, அங்கு தலித்கள் வசிக்கும் காலனிக்குள் நுழைந்தார்.
வீடு வீடாகப் போய் விசாரித்த ராவிடம் சிலர் மழுப்பலான பதிலைச் சொல்ல, பலர் பணம் தந்தாங்க என்று வெள்ளை மனதுடன்ஒப்புக் கொண்டனர்.
அதிமுகவினர் 100 ரூபாயும், போட்டிக்கு திமுகவினர் 50 ரூபாயும் தந்ததாக அன்பு என்ற வாலிபர் வெளிப்படையாகவேதைரியாகச் சொன்னார்.
வந்து மாட்டிய பொன்முடி:
அப்போது திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி இரண்டு கார்களில் தனது ஆதரவாளர்களுடன் ராவைத் தேடிவந்து ஒரு மனுவைக் கொடுத்தார்.
அந்த மனுவில், பத்திரிக்கையாளர்கள், அரசு ஊழியர்கள் என்ற பெயரில் காஞ்சிபுரம் தொகுதியில் ஏராளமான அதிமுகவினர் உலாவருகின்றனர். இவர்கள் கள்ள ஓட்டுப் போடுவதற்காக வந்துள்ளனர் என்று கூறப்பட்டிருந்தது.
இது குறித்து நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன் என்று ராவ் உத்தரவாதம் தர, பொன்முடி ரொம்ப நன்றிங்க என்று கும்பிடுபோட்டுவிட்டுக் கிளம்ப, அவரை நிறுத்திய ராவ், நீங்கள் வந்த காருக்கு தேர்தல் வேலையில் ஈடுபட பெர்மிட் இருக்கா என்றுகேட்க. ஒரு நிமிடம் தலை சுற்றிப் போன பொன்முடி, காருக்குள் ஓடிப் போய் தேடி பெர்மிட்டை எடுத்து வந்து காட்டினார்.
சரி, உங்க காருக்கு இருக்கு. உங்க கூட வந்த அந்த காருக்கு இருக்கா என்று ராவ் அதிரடிக் கேள்வியைப் போட, நாங்க சும்மாதாங்க வந்தோம், 5 மணிக்கெல்லாம் இங்கிருந்து போயுருவோம் என வாத்தியார் முன் வீட்டுப் பாடம் எழுதாத மாணவர்கள்மாதிரி பம்மினர் அந்த காரில் வந்த திமுகவினர்.
இதையடுத்து போலீஸ் பக்கம் திரும்பிய ராவ், அப்படியே அந்த காரை கொண்டு போய் போலீஸ் ஸ்டேசனில் நிறுத்துங்க. 5மணிக்கு மேலே வந்து எடுத்துட்டுப் போகட்டும் என்றார்.
திமுகவினர் பேயறைந்தது மாதிரி நிற்க, ஆஹா..., ஒரு திமுக கார் சிக்குச்சுடா என்ற மகிழ்ச்சியில் காக்கிச் சட்டைகள் அந்த காரைநோக்கி பாய்ந்தன.
வம்பாய் மாட்டிய ஒன்றியம்:
இதையடுத்து அங்கிருந்து கிளம்பிய ராவின் கார் சகட்டு மேனிக்கு ஆங்காங்கே பிரேக் போட்டது. திடீரென ஏதாவது வீட்டுக்குள் நுழைந்த ராவ்,கட்சியினர் ஓட்டு போட காசு கொடுத்தார்களா? யார் முதலில் தந்தது? எவ்வளவு தந்தார்கள் என்று கேள்விகளால் குடைந்தெடுத்துவிட்டு வெளியேவந்தார்.
பின்னர் ராவின் கார் போன பாதையில் எதிரே ஒரு கார் வர, அதை தடுத்தார். நீங்க யாரு என்று ராவ் கேட்க, அதில் வந்தவர் நான் வாலாஜாபாத்போறேன் சார் என்று மொட்டையாக பதில் வந்தது.
காரை திறங்க என்று ராவ் சொல்ல, அதில் 3 சூட்கேஸ்கள். ஒரு சூட்கேசில் திமுக கொடிகள் கட்டுக் கட்டாய்.. என்ன இது என்று சிரித்தவாரேகேட்டவர், போலீசை நோக்கி, கார் என்றார். அவ்வளவு தான். போலீசார் பாய்ந்து சென்று அதிலிருந்த திமுக ஒன்றியச் செயலாளர் அம்பிகாபதியைகீழே இறக்கிவிட்டு காரை எடுத்துக் கொண்டு சென்றனர். சில நிமிடங்களில் நடந்தது என்ன என்று புரியாமல் நடு ரோட்டில் பரிதாபமாக நின்றார்அம்பிகாபதி.
அடுத்தடுத்து எதிர்ப்பட்ட 3 கார்களை ராவ் நிறுத்த, எல்லாமே திமுகவினருடையவை. ஆனால், முறையான பெர்மிட்டோடு அவை இருந்ததால், குட்என்று சொல்லிவிட்டு கார்களை விடுவித்தார்.
வெரி குட், வெரி குட்:
டமார் என தாலுகா அலுவலகத்துக்குள் ராவ் நுழைய அலுவலகமே திமிலோகப்பட்டது. நாம கைப்பற்றின பேனர் எல்லாம்எங்கே என்று ராவ் கேட்க, அவை குவித்து வைக்கப்பட்டிருந்த அறையைத் திறந்து காட்டினர் அதிகாரிகள். இன்னும் நிறையஇருக்கணுமே என்ற ராவிடம், இதோ இருக்கு சார் என ஆளாளுக்கு அள்ளிக் காட்ட, வெரி குட் என்று பாராட்டுவிட்டு அவர்கிளம்பிய பின்னரே அதிகாரிகளுக்கு மூச்சு வந்தது.
மாட்டிய அதிமுக கார்:
அடுத்து காமராஜர் சாலை. அங்கே ஒரு காரை தடுத்த ராவ், உள்ளே சோதனையிட அதில் அதிமுக கொடிகள், பேனர்கள். போலீஸ்பக்கம் திரும்பி, கார் என்றார் ராவ். அவ்வளவு தான், அதுவும் போலீஸ் ஸ்டேசனுக்கு ஓட்டிச் செல்லப்பட்டது.
ராவிடம் கார்கள் இவ்வாறு குண்டாங்குதிரையாக சிக்கியதை செல்போன்கள் மூலம் கரைவேட்டிகள் ஒருவருக்கு ஒருவர்அவசரமாகத் தெரிவிக்க, பல கார்கள் ரோடுகளை விட்டு மாயமாயின. இண்டு இடுக்குகளில் போய் கார்களை அவசரமாக பார்க்செய்தனர். பலர் தங்கள் காரில் பந்தாவாக கட்டியிருந்த கட்சிக் கொடிகளை குச்சியோடு தூக்கி எறிந்துவிட்டனர்.
பார்த்தார்.. கழற்றினார்கள்:
இந்தத் தகவல் ராவுக்குச் சொல்லப்பட, மெல்லியதாய் ஒரு சிரிப்பை மட்டும் காட்டியவர், அடுத்து கைலாசநாதர் கோவில்,ஏகாம்பரநாத சாமி சன்னதி ஆகிய பகுதிகளுக்கு வந்தார். அங்கே கட்டப்பட்டிருந்த கட்சிக் கொடிகளை ராவ் பார்த்தமாத்திரத்திலேயே அதிகாரிகள் கழற்ற ஆரம்பித்துவிட்டனர்.
இதற்கிடையே ராவின் உத்தரவுகளால், இதுவரை தூங்கி வழிந்த மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியான நரேஷ் குப்தாவும்அதிரடியான உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். அதிமுக ஆதரவாளர் என்று குற்றச்சாட்டுக்கு பலமுறை உள்ளாகியுள்ள குப்தாவெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
வேட்பாளர்களின் செலவுகள் கணக்குப் பராமரிப்பு தொடர்பாக தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவுகள், காஞ்சிபுரம் மற்றும்கும்மிடிப்பூண்டியில் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன. இந்த உத்தரவுகள் இரு தொகுதிகளிலும் முறையாககடைப்பிடிக்கப்படவில்லை.
ஒரு வேட்பாளரின் பயணச் செலவு தவிர மற்ற அனைத்து செலவுகளும் வேட்பாளரின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும்.வேட்பாளருக்கு ஆதரவாக, மற்றவர்கள் செய்யும் செலவுகளும், வேட்பாளரின் தேர்தல் செலவுக் கணக்கிலேயே சேர்க்கப்படும்என்று கூறியுள்ளார் நரேஷ் குப்தா.
ராவின் அதிரடியால் தான் குப்தாவிடம் இருந்து இந்த உத்தரவு வந்துள்ளது.
கிராமங்களில் சோதனை:
கள்ள ஓட்டுப் போட நடக்கும் முயற்சிகளை முறியடிப்பதற்காக இன்று இரவு காஞ்சி கிராமங்களில் அதிரடி சோதனை நடத்த ராவ்திட்டமிட்டுள்ளார். இதையடுத்து அங்கே வீடு பிடித்துப் பதுங்கியிருந்த கரைவேட்டிகள் கிடைக்கும் வாகனங்களில் ஏறி எஸ்கேப்ஆக ஆரம்பித்துள்ளன.
அரசியல் கட்சிகள் எப்படியெல்லாம் பிராடுத்தனங்கள் செய்யும் என்பதை ராவ், அக்குவேறு ஆணிவேறாகத் தெரிந்துவைத்திருக்கிறார். இதனால் அவர்களை கையும் களவுமாகப் பிடிக்க ராவ் அதிக பிரயாசைப்படுவதே இல்லை.
அதே போல அதிகாரிகள் எப்படியெல்லாம் ஆளும் தரப்புக்கு சாதகமாக நடப்பார்கள் என்பதையும் தெரிந்து வைத்துள்ள ராவை,அவர்களையும் பொறி வைத்துப் பிடிக்கிறார்.
நீண்ட நாட்களுக்குப் பின் இப்படி ஒரு ஆக்ஷன் அதிகாரியைப் பார்த்த பெரும் திருப்தியில் இருக்கிறார்கள் தொகுதி மக்கள்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |