• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓசி சாப்பாடு: காக்கிகளுக்கு கமிஷனர் வார்னிங்

By Staff
|

சென்னை:

ஹோட்டல்களில் வயிறு புடைக்க நிறைய சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் செல்லும் போலீஸார் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என சென்னை மாநக காவல்துறை ஆணையர் நடராஜ் எச்சரித்துள்ளார்.

சாதாரண ஒரு பொதுஜனம், ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு காசு கொடுக்காமல் செல்ல முயன்றால், உடனே அவரைப் பிடித்துசமையல் கட்டுக்குள் அனுப்பி வைத்து, மாவு ஆட்ட வைப்பர் அல்லது பாத்திரங்களை கழுவ விடுவர்.

கூடுதலாக செமத்தியாக ஆளுக்கொரு மொத்தும் மொத்தி வெளியே துரத்தி விடுவர். தின்றதற்கு ஏற்ப அடி விழும்.

ஆனால் அதுவே போலீஸாராக இருந்தால்.. ஹோட்டல் முதலாளி தன் விதியை நொந்து கொண்டு தனது கோபத்தை சப்ளையர் மீதுகாட்டுவார்.

பல போலீஸார் பெரும் கூட்டமாகப் போய் ஏதாவது ஹோட்டலில் புகுந்து வயிறு முட்ட ஒரு கட்டு கட்டுவர். பின்னர், வரட்டுமா..என்று ஹோட்டல் கல்லாவில் இருப்பவர்களைப் பார்த்து முரட்டுத்தனமாக ஒரு சிரிப்பை சிரித்து விட்டு அப்படியே கையைத்துடைத்துக் கொண்டு போய் விடுவர்.

அப்படியே துணிந்து காசைக் கேட்டால் போச். உன் ஹோட்டல்ல பாகிஸ்தான் தீவிரவாதி எல்லாம் வந்து சாப்பிடுறானாமே..கொலை கேஸ் முனுசாமி உன் ஹோட்டல் சமையக் கட்டுல தான் மறைஞ்சு இருக்கானாமே என்று துப்பு துலக்க வந்துவிடுவர்.

எழும்பூரில் பல காலமாக டீ கடை வைத்துள்ள கேசவன் என்பவர் இதுகுறித்துக் கூறுகையில், ஓசியில் போலீஸார் சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் போவது என்பது காலம் காலமாக நடப்பதுதான். எனது கடைக்கு பல போலீஸ்காரர்கள் வருவாரக்ள்.யாரிடமும் கேட்காமல் அவர்களாகவே பிஸ்கட், சிகரெட், வடை போன்றவற்றை எடுத்துக் கொள்வார்கள்.

ஸ்ட்ராங் டீ போட்றா தம்பி என்பார்கள். அப்படியே ஒரு கட்டு கட்டிவிட்டு, காசுக்குப் பதில் ஏப்பத்தை மட்டும் கொடுத்துவிட்டுக்கிளம்பிப் போய் விடுவார்கள். அவர்களை எதுவும் கேட்க முடியாது.

மீறிக் கேட்க முயன்றால், டீக் கடைக்கு லைசென்ஸ் இருக்கா, அரசு இடத்தை ஆக்கிரமித்து கடை வைத்திருக்கிறாயா என்றெல்லாம்கேட்டு தொந்தரவு செய்வார்கள். தேவையில்லாத பிரச்சினைகளை இழுத்து விட்டு விடுவார்கள். எனவே இதைகண்டுகொள்ளாமல் விடுவதுதான் என்னை மாதிரி பிழைப்பு நடத்துபவர்களுக்கு ஒரே வழி என்று புலம்பினார்.

ஹோட்டல்காரர்களுக்கு மட்டும் இந்த நிலை இல்லை. சாலையோரம் பழக் கடை, காய்கறிக் கடை போன்றவற்றைவைத்திருப்பவர்களுக்கும் இதே நிலைதான். பெரிய பைகளுடன் வந்து தங்களுக்கு வேண்டியதை அள்ளிப் போட்டுக் கொண்டுநிதானமாகக் கிளம்பிச் செல்லும் போலீஸ்காரர்கள் எண்ணிக்கை ரொம்பவே ஜாஸ்தி.

சிலர் பூக்கடைகளையும் விடுவதில்லை. ஒய்ப், சின்ன வீடு என அனைவருக்கும் ஈக்குவாலக பூவை அளந்து வாங்கிக் கொண்டுகாசு கொடுக்காமல் போவார்கள்.

இதுதவிர பெரிய பெரிய கடைகளையும் உயர் அதிகாரிகளான காக்கிகள் விடுவதில்லை. அங்கும் உரிமையுடன் புகுந்துதங்களுக்கு வேண்டியதை ஆர்டர் செய்து, அப்படியே வீட்டுக்கு அனுப்பி விடுங்கள் என்று செல்லமாக கூறி விட்டுப் போய்விடுவார்கள். காசு கேட்டால், அதோ கதிதான்!

இந்தப் பிரச்சினைகளுக்கு முடிவு கட்ட சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

அவர் கூறுகையில், இது மிகவும் மோசமான ஒரு செயல். ஹோட்டல்கள், கடைகளில் பொருட்களை எடுத்துக் கொண்டு காசுகொடுக்காமல் செல்லக் கூடாது என்று நான் காவல்துறையினரை பலமுறை எச்சரித்துள்ளேன். ஆயினும் இது தொடருவது எனக்குபெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

ஹோட்டல் உரிமையாலர்கள், கடை உரிமையாளர்கள், இனிமேல் போலீஸாரிடம் பணத்தைப் பெறாமல் எதையும் தரவேண்டாம். மீறி போலீஸார் காசு கொடுக்காமல் பொருட்களை எடுத்துக் கொள்ள முயன்றால் அவர்கள் குறித்து அருகில் உள்ளகாவல் நிலையங்களிலோ அல்லது நேரடியாக என்னிடமோ புகார் கொடுக்கலாம்.

அப்படி புகார் கொடுக்கப்பட்டால் கண்டிப்பாக தவறு செய்யும் போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவேன்என்றார் எச்சரிக்கை கலந்த குரலில் தெரிவித்துள்ளார்.

இனிமேலாவது ஓசி காக்கிகள் தொந்தி சாட்சியுடன்.. ஸாரி, மனசாட்சியுடன் நடப்பார்களா?

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X