• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

அதிமுக அவைத் தலைவரானார் காளிமுத்து: கூட்டத்தை புறக்கணித்தார் பொன்னையன்

By Staff
|

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் இன்று நடந்த அதிமுக செயற்குழு-பொதுக் குழுக் கூட்டத்தில் அதிமுகவின் அவைத் தலைவராக மாஜி சபாநாயகர் காளிமுத்து தேர்வு செய்யப்பட்டார். இதுவரை இந்தப் பதவியில் இருந்த நிதியமைச்சர் பொன்னையன் கழற்றிவிடப்பட்டார்.

Kalimuthu with Jayalalithaஇதையடுத்து செயற்குழு-பொதுக் குழுக் கூட்டங்களை பொன்னையன் புறக்கணித்துவிட்டார்.

சட்டசபைத் தேர்தலை மிகுந்த நம்பிக்கையோடும், புதுத் தெம்போடும் சந்திக்கத் தயாராகி வருகிறது அதிமுக. முதல் கட்டமாக தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறும் பணியைத் தொடங்கியுள்ளது.

இந் நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, அதிமுக செயற்குழுக் கூட்டம் இன்று காலை கூடியது. சென்னை வடபழனி விஜயசேஷ மஹாலில் காலை 10 மணிக்கு கூடிய இக்கூட்டத்திற்கு முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா முன்னிலை வகித்தார்.

முதலில் செயற்குழுக் கூட்டம் நடந்தது. இதில் முதல் நிகழ்ச்சியாக புதிய அவைத் தலைவராக காளிமுத்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து காளிமுத்து தலைமையில் செயற்குழுவின் மற்ற நிகழ்ச்சிகள் நடந்தன.

இக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சட்டசபைத் தேர்தலில் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கும் அதிகாரத்தை ஜெயலலிதாவுக்கு வழங்கியும், வெள்ள நிவாரணத்திற்கு தமிழக அரசு கோரிய நிதியை ஒதுக்காத மத்திய அரசுக்குக் கண்டித்தும், ஐந்து ஆண்டு அதிமுக ஆட்சியில் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டது, புதிய வீராணம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளைப் பாராட்டியும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து பிற்பகலில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இக் கூட்டத்தில் தேர்தலில் பணிகள், பண பட்டுவாடா குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

அழைப்பிதழுடன் வந்த உறுப்பினர்கள் மட்டுமே மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களைத் தொடர்ந்து வட பழனி பகுதி முழுவதும் அதிமுகவினர் மயமாக காணப்படுகிறது.

வழக்கமாக கூட்டணி விஷயத்தில் அதிமுகவில் பெரிய விவாதம் எல்லாம் நடப்பதில்லை. முதல்வர் ஜெயலலிதா எடுக்கும் முடிவை எல்லோரும் ஆமோதிப்பர். அந்த வகையில் இன்றைய செயற் குழுக் கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் ஜெயலலிதாவுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன. சில கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.பொதுக் குழுவில் இதுகுறித்து முடிவெடுக்க எனக்கு அதிகாரம் வழங்கப்படும். அதன் பிறகு விவரங்களை தெரிவிக்கிறேன் என்று கூறியிருந்தார்.

இன்றைய கூடடத்தில் கட்சியின் அமைப்புச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையனுக்கும் முக்கிய பொறுப்பு வழங்கப்படக் கூடும் எனத் தெரிகிறது. ஒவ்வொரு தேர்தலின்போதும் செங்கோட்டையனுக்கு முக்கியத்துவம் தரப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுக்குழு மற்றும் செயற்குழு கூடுவதையொட்டி தமிழகம் முழுவதிலுமிருந்து அதிமுகவினர் நேற்று முதலே சென்னையில் குவிந்துவிட்டனர்.

இப்போது அவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள காளிமுத்துவுக்கு அமைச்சர் பதவியும் தரப்படலாம் என்று தெரிகிறது. பிரச்சாரத்தின்போது அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தவும், பிரச்சாரத்துக்குப் போகும்போது பந்தாவாகவும் இருக்கும் என்பதாலும் அவரை அமைச்சராக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கார்த்திக் காரணமாக அதிமுகவின் முக்கிய வாக்கு வங்கியான முக்குலத்தோர் சமுதாய வாக்குகளில் பிரியலாம் என அஞ்சும் அதிமுக தலைமை, அதை சரிகட்டி வாக்குகளைத் தக்க வைக்க தேவர் சமூகத்தைச் சேர்ந்த காளிமுத்துவை அமைச்சராக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

புறக்கணித்தார் பொன்னையன்:

பதவி பறிக்கப்பட்ட நிதியமைச்சர் பொன்னையன் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்களைபுறக்கணித்துவிட்டார்.

அதிமுக அவைத் தலைவராக இருந்து வந்த கவிஞர் புலமைப்பித்தன் அப்பதவியிலிருந்து விலகியவுடன், அப்பொறுப்பைபொன்னையனுக்கு அளித்தார் முதல்வர் ஜெயலலிதா.

இதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆஸ்தான ஆலோசகராக விளங்கினார். பொன்னையனைக் கேட்டுத்தான் முக்கியமுடிவுகளை ஜெயலலிதா எடுத்தார். சட்டசபையில் ஜெயலலிதாவுக்குப் பதிலாக பதில் சொல்லும் நிலைக்கு உயர்ந்தார்பொன்னையன்.

சட்டசபைக் கூட்டங்களில் முதல்வருக்கு அடுத்து அதிக அளவில் எதிர்க்கட்சியினருக்குப் பதில் சொல்வது பொன்னையனாகத்தான்இருக்கும். எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு உடனுக்குடன் சூடாகப் பதில் கொடுத்து அசத்துவார் பொன்னையன்.

பொன்னையனின் இந்த வளர்ச்சியை மன்னார்குடி வகையறா பொறாமையுடன் பார்த்து வந்தது. இந் நிலையில் பொன்னையனைதிடீரென ஒதுக்கத் தொடங்கினார் ஜெயலலிதா.

கடைசியாக நடந்த சட்டசபைக் கூட்டத்தில் பொன்னையன் அடக்கி வைக்கப்பட்டார். இதனால் கடுப்பான பொன்னையன்பட்ஜெட்டைப் படிக்க மாட்டேன் என்று முரண்டு பிடித்ததாகக் கூட தகவல் வந்தது.

பொன்னையனை ஓ.பன்னீர்செல்வம் மூலம் மிரட்டியும், கெஞ்சியும் ஒரு வழியாக இடைக்கால பட்ஜெட் அவர் மூலமாகவேதாக்கல் செய்யப்பட்டது.

இந் நிலையில் அவரிடமிருந்து அவைத் தலைவர் பொறுப்பைப் பறித்து காளிமுத்துவிடம் தந்துவிட்டார்.

பொன்னையன் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்துள்ளதாகவும், புதிய அவைத் தலைவராக காளிமுத்து தேர்வுசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறி அவரது பெயரை முதல்வர் ஜெயலலிதா செயற்குழுக் கூட்டத்தில் முன்மொழிந்தார். அதை முன்னாள்அமைச்சர் தம்பித்துரை வழிமொழிந்தார். பின்னர் அவைத் தலைவராக காளிமுத்துவை தேர்வு செய்ததை அங்கீகரிக்கும் விதமாகதீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது.

இதனால் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டங்களில் பொன்னையன் கலந்து கொள்ளவில்லை.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X