For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இது ஏமாற்று வேலை: சாலைப் பணியாளர்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

80 உயிர்களைப் பறித்து விட்டு, அவர்களது குடும்பங்களுக்கு எந்த இழப்பீட்டையும் தராமல், நான்கு ஆண்டு கால ஊதியம் குறித்தும் அறிவிக்காமல், தேர்தல் ஆதாயத்தை மட்டுமே கருத்தில் கொண்டு தங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா மீண்டும் வேலை வழங்கியிருப்பதாக சாலைப் பணியாளர்கள் சங்கம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

அதிமுக ஆட்சிக்கு வந்த பின் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் பணியில் அமர்த்தப்பட்ட 9,813 சாலைப் பணியாளர்கள் ஒரே நாளில் கூண்டோடு பணி நீக்கம் செய்யப்பட்டனர். தங்களை பணியில் சேர்க்கக் கோரி கடந்த நான்கரை ஆண்டுகளாக அவர்கள் நடத்தாத போராட்டம் இல்லை.

பட்டினிப் போராட்டம், குடும்பத்தோடு நடு ரோட்டில் போராட்டம் என பல வகைகளிலும் போராடினாலும் அரசின் கருணைப் பார்வை இவர்கள் மீது விழவில்லை. வேலை இழந்த ஊழியர்களில் சுமார் 80 பேர் வரை தற்கொலை மற்றும் மாரடைப்பால் பலியாகிவிட்டனர்.

இந் நிலையில் சட்டமன்றத்துக்குத் தேர்தல் வரும் நிலையில் அரசு திடீரென கருணையை இவர்கள் மீது லிட்டர் கணக்கில் ஊற்றிவிட்டுள்ளது.

அத்தனை பேரையும் மீண்டும் வேலையில் சேர்க்குமாறு முதல்வர் ஜெயலலிதா திடீரென உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு சாலைப் பணியாளர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை. மாறாக பெரும் அதிருப்தியே கிடைத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நிாடு சாலைப் பணியாளர்கள் சங்கத் தலைவர் சித்தையன் கூறுகையில்,

சாலைப் பணியாளர்களை நீக்காமல் இருந்திருந்தால், கடந்த நான்கரை ஆண்டு காலமாக வேலை இல்லாத காரணத்தால் இறந்து போன 80 பேரின் உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும்.

ஆனால் உயிர்களைப் பலி கொடுத்துவிட்டு இப்போது தேர்தல் நெருங்கும் சமயத்தில் அனைத்து சாலைப் பணியாளர்களையும் மீண்டும் வேலையில் சேர்ப்பதாக அரசு அறிவித்துள்ளது. இது வெறும் தேர்தல் ஆதாயத்துக்காகத் தான்.

இறந்து போன 80 குடும்பங்களுக்கு அரசு எந்தவித இழப்பீட்டையும் அறிவிக்கவில்லை. மேலும் கடந்த நான்கரை ஆண்டு காலமாக வேலையில் இல்லாத காலத்திற்குரிய ஊதியம் குறித்தும் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இதையெல்லாம் செய்யாமல் இப்போது தேர்தல் நெருங்குகிற சமயத்தில் மீண்டும் வேலை தருவதாக கூறியிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி தரவில்லை என்று கூறினார் சித்தையன்.

ஜெ. நாடகம்: ராமதாஸ்:

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில்,

இதை முன்பே ஜெயலலிதா செய்திருந்தால் 80 உயிரை பாதுகாத்திருக்க முடியும். நான்கு ஆண்டுகளாக செய்யாமல் இப்போது தேர்தல் வருகிற நேரத்தில் செய்திருப்பது தேர்தலை மனதில் வைத்துத் தான்.

திமுக ஆட்சியில் பணியில் அமர்த்தப்பட்ட ஒரே காரணத்திற்காக பதவியிலிருந்து நீக்கி விட்டு இப்போது தேர்தலை கருத்தில் கொண்டு அத்தனை பேரையும் மீண்டும் பணியில் சேர்ப்பதாக அறிவித்துள்ள ஜெயலலிதாவின் கபட நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள்.

வேலையிழப்பால் பறிபோன 80க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர்களின் குடும்பங்களும் ஜெயலலிதாவை மன்னிக்காது என்று கூறியுள்ளார்.

கருணாநிதி கண்டனம்:

திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆட்சிக்கு வந்ததும் வராததமாக 10,000 சாலைப் பணியாளர்களையும் ஒரே உத்தரவில் வீட்டுக்கு அனுப்பினார் ஜெயலலிதா. இப்போது சாலைப் பணியாளர்கள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் விரைவில் தீர்ப்பு வெளியாகவிருந்தது.

எம்.ஜி.ஆர். நகர் நெரிசல் பலிகள் தொடர்பான வழக்கில் கிடைத்த கண்டனத்தைப் போல, இந்த வழக்கிலும் கடும் நீதிமன்ற கண்டனத்தை சந்திக்க நேரிடுமோ என்ற மிரண்டு போய் தான் வேலையிலிருந்து நீக்கப்பட்ட அத்தனை சாலைப் பணியாளர்களையும் மீண்டும் பணியில் சேர்த்துள்ளார் ஜெயலலிதா.

சாலைப் பணியாளர்களுக்காக எதிர்க்கட்சிகள் அனைத்தும் தந்த ஆதரவை, ஒத்துழைப்பை சாலைப் பணியாளர்களும், உயிரிழந்த சாலைப் பணியாளர்களின் குடும்பத்தினரும் மறக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.

உயர் நீதின்றத் தீர்ப்பின்படி மீண்டும் வேலை தருவதாக கூறியுள்ள ஜெயலலிதா, இதை முன்பே செய்திருந்தால் 80 சாலைப் பணியாளர்கள் உயிரிழந்திருக்க மாட்டார்கள்.

இதேநேரத்தில், இந்த அரசால் பழிவாங்கப்பட்டு, பணி நீக்கம் செய்யப்பட்ட 13,000 மக்கள் நலப் பணியாளர்கள், 9,000 கூட்டுறவுப் பணியாளர்களை முதல்வர் மறந்து விட்டாரா என்பதையும் அறிய விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X