• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

5 நிமிடம்..50 முட்டைகள்: மன்சூர் அட்டகாசம்!

By Staff
|

சென்னை:

Mansoor Ali Khan

முட்டை சாப்பிடுவதால் பறவைக் காய்ச்சல் வராது என்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடிகர் மன்சூர் அலிகான் 5 நிமிடங்களில் 50 முட்டைகளை அப்படியே உடைத்துக் குடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அரசியலில் எப்படி சுப்பிரமணியம் சுவாமியோ, அதேபோல சினிமாவில் மன்சூர் அலி கான். அவ்வப்போது ஏதாவது ஒரு பிட்டைப் போட்டு பரபரப்பை ஏற்படுத்துவார்.

ஒருமுறை, ஷூட்டிங்கில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்த அவர் அதே டிரஸ்ஸைப் போட்டுக் கொண்டு கோர்ட்டுக்குப் போய், ஒரு வழக்கில் குற்றவாளிக் கூண்டில் ஏறி, நீதிபதியின் கடும் கண்டனத்துக்கு ஆளானார்.

அவ்வப்போது ஏதாவது ஒரு கட்சியில் சேருவார், எப்போது அதிலிருந்து விலகினார் என்பதே தெரியாது, ஆனால் அடுத்த முறை வேறு ஒரு கட்சிக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருப்பார். முதலில் பாமக, பின்னர் புதிய தமிழகம், அப்புறம் அதிமுக, தற்போது மீண்டும் அதிமுக, இடையில் சிறிது காலம் விஜயகாந்த்துடன் நெருக்கம் என அடிக்கடி அதிரடி செய்வதில் வல்லவர் இந்த வில்லன் மன்சூர்.

இப்போது இன்னொரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் மன்சூர். ஆனால் இந்த முறை மக்களுக்காக இந்த பரபரப்பு.

பறவைக் காய்ச்சல் காரணமாக மக்கள் முட்டை, கோழியை பார்த்தாலே பயந்து ஓடுவதைத் தடுத்து முட்டை சாப்பிடுவதால் ஒரு காய்ச்சலும் வராது என்பதைக் காட்டுவதற்காக 5 நிமிடத்தில் 50 முட்டைகளை சாப்பிட்டு அசத்தினார் மன்சூர்.

இன்று காலை சென்னை வடபழனி மேற்கு பெரியார் பாதையில் உள்ள தனது வீட்டுக்கு செய்தியார்கள், புகைப்படக்காரர்களை வரவழைத்தார் மன்சூர். அனைவரையும் தனக்கு முன்பாக சேர் போட்டு அமர வைத்தார் மன்சூர்.

கைலி, முண்டா பனியன் மட்டுமே அணிந்திருந்த அவருக்கு முன்பாக பெரிய தட்டில் முட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

எல்லாம் ரெடியா என்று கேட்டுக் கொண்ட மன்சூர், ஆரம்பிப்பா என்று தனது உதவியாளருக்கு உத்தரவு கொடுத்தார். பின்னர் உதவியாளர் ஒவ்வொரு முட்டையாக உடைத்துக் கொடுக்க அதை வாங்கி அப்படியே உள்ளே தள்ள ஆரம்பித்தார்.

இப்படியாக கிட்டத்தட்ட 50 முட்டைகளை 5 நிமிடத்தில் ஸ்வாகா செய்து அசத்தினார்.

உதவியாளர் முட்டைகளை உடைக்க சிரமப்பட்டபோது, அதைக் கொடு இப்படி என்று வாங்கி தனது ஒரு விரலால் சுண்டி ஓட்டை உடைத்து முட்டையை வாயில் ஊறினார்.

முட்டைகள் உள்ளே போன பின்னர் பெரிதாக ஒரு ஏப்பம் விட்டுக் கொண்டார். தண்ணீரை மடக் மடக்கென்று குடித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

என்ன பயந்துட்டீங்களா? எல்லாம் மக்களோட நல்லதுக்குத்தான் என்று ஆரம்பித்த அவர், தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் வந்து விடுமோ என்று மக்கள் தேவையில்லாமல் பயப்படுகிறார்கள். ஆனால் இங்கு அப்படி ஒரு காய்ச்சலே இல்லை.

பறவைக் காய்ச்சல் பயத்தால், ஹோட்டல்களில் சிக்கன் பிரியாணி தயாராவதில்லை, அப்படியே செய்தாலும் வாங்கி சாப்பிட ஆள் இல்லை. ஆம்லெட் கூட கிடைப்பதில்லை. எல்லாம் பறவைக் காய்ச்சல் பயம்தான்.

இப்படி மக்கள் பயப்படுவதால் கோழிக்கறி, முட்டை விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள், வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அட, கோழித் தீவணத்தைக் கூட உள்ளே நுழைய விட மாட்டேன் என்கிறார்கள்.

இதனால் ஏராளமான கோழிகள் செத்துக் கொண்டிருக்கின்றன. கோழி சாப்பிட்டவர்கள் எல்லாம் மட்டன், மீன் என்று மாறி விட்டதால் அவற்றின் விலையும் ஏகத்துக்கு எகிறியுள்ளது. எனவேதான் மக்களிடையே உள்ள அச்சத்தைப் போக்குகிற வகையில் நான் முட்டை சாப்பிடும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தேன்.

இதன் மூலம் மக்கள் மனதில் பயம் தெளிந்து முட்டை, கோழியை ஒரு கை பார்த்தால் சந்தோஷப்படுவேன் என்றார் மன்சூர் அலிகான் ஏப்பம் விட்டபடியே.

ஏவ்.....

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X