For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குட்டிக் கட்சிகளின் கூடாரமாக மாறும் அதிமுக!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பலமான வாக்கு வங்கிகளைக் கொண்ட கட்சிகளுடன் திமுக கூட்டணி அமைத்துவிட்டு அதைக் கட்டிப் பாதுகாக்க படாதபட்டு வரும் நிலையில், குட்டிக் கட்சிக் கட்சிகளின் புகலிடமாக மாறி வருகிறது அதிமக அணி.

தேர்தலுக்கு முன்பு தாறுமாறாகப் பேசிக் கொள்வதும், ஏசிக் கொள்வதும், தேர்தல் நெருங்கும்போது அணிகள் அமைப்பது, அரசியலில் சகஜமான விஷயம். தற்போது அந்தக் கால கட்டத்தில் தமிழக அரசியல் கட்சிகள் உள்ளன.

தேர்தல் நெருங்கி விட்டதால் அணி மாறுவது, பல்டி அடிப்பது, திரைமறைவு பேச்சுக்கள் நடத்துவது, பெரிய கட்சிகளிடம் சீட்களோடு தேர்தலுக்கு நிதியையும் சேர்த்து வசூலிப்பது ஆகியவற்றில் அரசியல்வாதிகள் படு பிசியாக உள்ளனர்.

தமிழக அரசியலில் இரு பெரும் சக்திகளாக விளங்கும் திமுக மற்றும் அதிமுகவை மையமாக வைத்தே பெரும்பாலும் அணிகள் அமையும். இதுவரை இந்த இரண்டு அணிகள் மட்டுமே வாழ்ந்துள்ளன.

3வது அணி என்று உருப்படியாக இதுவரை எந்த அணியும் அமைந்ததில்லை. இனியும் அமையுமா என்பது தெரியவில்லை.

இந் நிலையில் கடந்த வாரம் வரை மக்களுடன் மட்டுமே கூட்டணி, வேறு கட்சிகள் தேவையில்லை என்று வீராப்பாக கூறி வந்த அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதாவின் தேர்தல் பயத்தை, பதற்றத்தை அவர் வீசி வரும் வலையை வைத்தே அறிந்து கொள்ள முடியும்.

ஒரு பக்கம் வீர வசன பேச்சு, மறு பக்கம் நடராஜனில் ஆரம்பித்து உளவுத்துறை வைத்து அனைத்து வகையான ஆட்களையும் பயன்படுத்தி கட்சிகளுக்கு வலை வீசுவது என்று நாட்களை நகர்த்தி வந்தது அதிமுக.

இந்த வலையில் மதிமுக என்ற பெரிய மீன் சிக்கி, சிக்கி நழுவி வருகிறது. இதனால் மீனவர்களையும் படகுகளையும் மாற்றி மாற்றி அந்த மீனைப் பிடிக்க முயற்சி நடந்தவண்ணம் உள்ளது.

இருந்தாலும் தனது முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் மாதிரி தொடர்ந்து வைகோவுக்கு தூண்டில் போட்டுக் கொண்டே இருக்கிறது அதிமுக.

ஆனால், வைகோ சிக்குவாரா இல்லையா என்பது வைகோவுக்கே தெரியாது என்பதால் அவரை விட அதிகமாகக் குழம்பிப் போயுள்ளது அதிமுக.

இதுவரை எந்தப் பெரிய கட்சியும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முன் வராத நிலையில், குட்டிக் கட்சிகளை நோக்கி வலையை வீசியுள்ளது அதிமுக.

அய்யா வாங்க.. அள்ளிக்கிட்டு போங்க.. என்று சீட்களை கூறு கட்டி கூவிக் கூவி விற்று வருகிறது அதிமுக.

அந்த வகையில் அதிமுக விரித்த கடையில் முதல் பர்சேஸ் செய்துவிட்டார் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன். அதிமுகவிடம் 30 தொகுதிகள் கேட்டு கடைசியில் 9 தொகுதிகள் தர ஒப்புக் கொண்டுவிட்டனர்.

திமுக கூட்டணியில் சேர்க்கப்பட்டிருந்தால் கூட இத்தனை சீட் கிடைத்திருக்காது என்பதால் திருமாவுக்கு மகிழ்ச்சியே.

அதே நேரத்தில் பாண்டிச்சேரியில் 10 இடங்களில் தனித்துப் போட்டி என்று ஒருதலைப் பட்சமாக அறிவித்து அதிமுகவுக்கு கிலி கொடுத்துவிட்டார் திருமா.

கூட்டணி அமைத்தோம் என்பதற்காக அதிமுகவுக்கு நாங்கள் அடிமை அல்ல என்பதை பொட்டில் அடித்த மாதிரி சொல்லிவிட்டார்.

இப்போது அதிமுகவுக்கு அடுத்த பெரிய கட்சியாக அக்கூட்டணியில் இருப்பது விடுதலைச் சிறுத்தைகள் மட்டும்தான்.

இக்கட்சி தவிர அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள்:

விஜய டி.ராஜேந்தரன் லட்சிய திமுக, திண்டிவனம் ராமமூர்த்தியின் தமிழ்நாடு இந்திரா காங்கிரஸ், உழவர் உழைப்பாளர் கட்சி, கட்டிட தொழிலாளர் முன்னேற்றக் கழகம், வன்னியர் இனத் தலைவர் தீரனின் மக்கள் கட்சி, ஏ.கே.நடராஜனின் வன்னியர் சங்கம் என ஏகப்பட்ட குட்டிக் கட்சிகள் அதிமுக அணியில் சேர்ந்துள்ளன.

மேலும் அதிமுகவில் சேர கார்த்திக்கின் பார்வர்ட் பிளாக், டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளும் முயற்சி செய்து வருகின்றன.

இத்தனைக் கட்சிகள் அதிமுக அணியில் இருந்தாலும் வாக்கு வங்கி உள்ள கட்சி என்றால் அது திருமாவளவன் கட்சி மட்டுமே.

எனவே மற்ற கட்சிகளால் ஜெயலலிதாவுக்கு பெரிய அளவில் லாபம் இருக்கப் போவதில்லை. எங்களுக்கும் கூட்டணி அமைக்க கட்சிகள் இருக்கிறது என்று கூட்டம் சேர்க்க மட்டுமே இந்தக் கட்சிகள் பயன்படும்.

இவர்களைத் தவிர நம்மையும் கூப்பிட மாட்டார்களா என்ற ஏக்கத்தில் பாஜகவும் ஒரு பக்கமாக நின்று கொண்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் திண்டிவனம் கட்சிக்கு அதிகமாக 10 சீட்டும், மற்ற கட்சிகளுக்கு தலா ஒன்று அல்லது இரண்டு சீட்களும் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது.

கருணாநிதியைப் போல இதயத்தில் மட்டும் இடம் கொடுக்காமல், நிச்சயம் ஏதாவது தொகுதியை அம்மா ஒதுக்குவார் என்ற நம்பிக்கையில்தான் இந்தக் கட்சிகள் எல்லாம் அச்சத்துடன் காத்துக் கொண்டுள்ளன.

ஆனால், அதிமுக எதிர்பார்ப்பது மாதிரி வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை கூட்டணிக்குள் வந்தால் அந்த ஓரிரு சீட்களும் கூட இவர்களுக்குக் கிடைக்காமல் போகலாம்.

மக்களுடன் மட்டுமே கூட்டணி, வேறு கட்சி தேவையில்லை என்று பேசி வந்த அதிமுக இப்போது கூட்டணிக்காக அலையோ அலையென்று அலைவது அக்கட்சியின் தேர்தல் பயத்தை நன்றாகவே வெளிப்படுத்திவிட்டது மட்டும் உண்மை.

அம்மாவுக்கு ஏங்கும் ஏ.சி.சண்முகம்:

இதற்கிடையே அதிமுகவுடன் கூட்டணி சேர விரும்பும் தனது ஏக்கத்தை புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன் புதிய நீதிக் கட்சியைத் தொடங்கினார் ஏ.சி.சண்முகம். திமுகவுடன் கூட்டணி போட்டு தோல்வியடைந்தார். சென்னையில் கூவம் ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்ட இவரது கல்லூரிக் கட்டடங்கள் இடிக்கப்பட்ட சம்பவத்திற்குப் பின் நீண்டநாள் தலைமறைவாக இருந்து வந்த சண்முகம் தற்போது வெளியே வரத் தொடங்கியுள்ளார்.

ஈரோட்டில், தமிழ்நாடு செங்குந்தர் பேரவை சார்பில் நடந்த தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசுகையில், நமக்குத் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர வேறு வழியில்லை. அதிமுக கூட்டணியில் சேருவதே சரியாக இருக்கும் என்றார்.

கூவம் கட்டடங்களைக் காப்பாற்றவாவது இவர் அதிமுக கூட்டணியில் சேர்ந்தாக வேண்டும். அம்மா சேர்ப்பாரா?

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X