For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைகோவும் காளிமுத்துவின் எதிர்காலமும்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அதிமுக கூட்டணிக்கு வைகோவை வர வைப்பதில் தான் காளிமுத்துவின் அரசியல் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது.

மாஜி சபாவான காளிமுத்து இப்போது அதிமுக அவைத் தலைவராகியிருக்கிறார். மதிமுகவை அதிமுக கூட்டணிக்குக் கொண்டு வர பல வகைகளிலும் முயற்சி செய்தார். அதில் அவருக்கு வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டது.

இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை முதல்வர் ஜெயலலிதா ஓடோடி வந்து பார்த்தார். பின்னர் உடல் நலம் தேறி வீடு திரும்பினார் காளிமுத்து.

இந் நிலையில் வைகோ பல்டி அடித்து திமுக கூட்டணியில் தான் இருப்பேன் என்று அறிவித்தார்.

இந் நிலையில் காளிமுத்துவின் உடல் நலம் மீண்டும் பாதிக்கப்பட்டு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், இதுவரை அவரை முதல்வர் ஜெயலலிதா திரும்பிப் பார்க்கவில்லை.

இந் நிலையில் மருத்துமனையில் இருந்தபடியே காளிமுத்து கூறுகையில்,

அதிமுக கூட்டணியில் வலுவான கட்சி இல்லையே என்பதற்காக நான் வைகோவை தொடர்ந்து அழைக்கவில்லை. வைகோவைக் காப்பாற்ற வேண்டும் என்ற பாசத்தில்தான் தொடர்ந்து கூப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.

கர்நாடகத்தில் குமாரசாமியை முதல்வராக்க தேவெ கெளடா செய்ததைப் போல தமிழகத்திலும் நடந்து விடக் கூடாது என்று சகோதரர் நாஞ்சில் சம்பத் பேசியது, திமுகவினரை அலற வைத்து விட்டது. ஸ்டாலினை எப்படியாவது முதல்வர் பதவியில் அமர்த்தி விட வேண்டும் என்பதுதான் திமுக போட்டுள்ள ஸ்கெட்ச்.

இந்த விஷயத்தில் சரியான நேரத்தில், சரியான முடிவை எடுத்த திருமாவளவனை பாராட்டுகிறேன். அவரது வருகை அதிமுக அணியின் வெற்றிக்கு பெருமளவில் துணையாக இருக்கும்.

விஜயகாந்த்தை கூட்டணியில் சேர்ப்பதா, வேண்டாமா என்பதை அம்மாதான் முடிவு செய்ய வேண்டும். அதேபோல கார்த்திக் விஷயத்திலும் அம்மாதான் முடிவெடுப்பார்.

முக்குலத்தோர் சமுதாயத்தைப் பொருத்தவரை அவர்கள் அன்று முதல் இன்று வரை என்றுமே அதிமுகவுக்குத்தான் ஆதரவாக இருந்து வருகின்றனர், இருப்பார்கள். தென் மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோரின் பெரும்பாலானவர்கள் அதிமுகவின் நீண்ட கால அனுதாபிகள்.

சட்டசபைத் தேர்தலில் மிகப் பெரும் வெற்றியை நோக்கி அதிமுக பயணித்துக் கொண்டுள்ளது. புரட்சித் தலைவியின் முகத்தைப் பார்த்தாலே சாதாரண மக்கள் மனதில் பூரிப்பை உண்டாக்குகிறது.

எனவே புரட்சித் தலைவி சுற்றுப்பயணம் இயக்கத்தின் வெற்றிக் கனியை பறிக்க நிச்சயம் துணை செய்யும் என்றார் காளிமுத்து.

வைகோ வருவதில்தான், அதிமுகவில் காளிமுத்துவின் அரசியல் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

திமுகவுக்கு புதிய பாரதம் கும்பிடு:

இதற்கிடையே திமுக கூட்டணியில் இடம் பெற்று, தேர்தல் காலங்களில் கருணாநிதியின் மனதில் மட்டுமே இடம் பிடித்து வந்த புதிய பாரதம் கட்சி கூட்டணியிலிருந்து விலகும் எனத் தெரிகிறது.

மக்கள் தமிழ்தேசம், புதிய பாரதம், எம்.ஜி.ஆர். கழகம் உள்ளிட்ட ஏராளமான குட்டிக் கட்சிகளும் திமுக கூட்டணியில் உள்ளன.

இதில் பெரும்பாலான கட்சிகளுக்கு கருணாநிதியின் இதயத்தில் மட்டுமே இடம் ஒதுக்கப்படும்.

வரும் தேர்தலில் புதிய பாரதம் 5 தொகுதிகளை கேட்கிறது. ஆனால் ஒரு சீட் கூட கிடைக்காது என்பதுதான் நிதர்சனம்.

சீட் கிடைக்காவிட்டால் அதிமுகவுடன் கூட்டணிக்கு முயற்சிப்போம். எங்களுக்கு வேறு வழியில்லை என்று அக் கட்சி கூறியுள்ளது.

ஜெகன் என்பவர் நடத்தி வந்த கட்சிதான் புரட்சி பாரதம். சென்னை வாழ் தலித் மக்களிடையே இந்தக் கட்சிக்கு ஓரளவு வாக்கு வங்கி உள்ளது. ஜெகன் மறைந்த பிறகு அவரது வாரிசான ஜெகன் மூர்த்தி இக் கட்சியை தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X