For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வான்புலிகளின் தலைவர் சென்னையில் படித்தவர்

By Staff
Google Oneindia Tamil News

கிளிநொச்சி: விடுதலைப் புலிகளின் விமானப்படையான வான்புலிகள் பிரிவின் தலைவராக இருந்தவர் சென்னை பொறியியல் கல்லூரியில் பி.இ படித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை அரசுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளனர் புலிகளின் வான் புலிகள் பிரிவினர். நள்ளிரவில் பலத்த பாதுகாப்பு மிக்க கொழும்பு விமான நிலையம் அருகே உள்ள விமானப் படை தளத்தை விமானம் மூலம் தாக்கி 3 பேரைக் கொன்று விட்டு பத்திரமாக தங்களது பகுதிக்குத் திரும்பியுள்ளது புலிகளின் விமானங்கள்.

புலிகள் நடத்தியுள்ள இந்த முதல் விமானத் தாக்குதல் இலங்கை அரசுக்கும், அந்நாட்டு பாதுகாப்புப் படையினருக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் சிங்கள மக்கள் உறைந்து போயுள்ளனர்.

இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் வான் புலிகள் குறித்து மேலும் பல தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளன.

விடுதலைப் புலிகள் வசம் இருப்பது செக் நாட்டு இசட்-143 ரக, இருவர் மட்டுமே அமர்ந்து செல்லக் கூடிய இலகு ரக விமானம் என்று தெரிகிறது.

2002ம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பின்னர்தான் இந்த விமானங்களை புலிகள் வாங்கியுள்ளனர். மொத்தம் ஐந்து விமானங்கள் புலிகளிடம் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த விமானங்களின் உதிரி பாகங்களை வன்னிப் பகுதிக்கு கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வந்து, பின்னர் அவற்றை அசெம்பிள் செய்து விமானங்களாக மாற்றியுள்ளனர். கப்பல் மூலமாக விமான உதிரிபாகங்களை அவர்கள் கொண்டு வந்துள்ளனர்.

புலிகளின் விமானத் தாக்குதல் மிகச் சாதாரணமானதாக இருந்தாலும், தோல்வி அடைந்த ஒன்றாக இருந்தாலும், மிக மிக பயங்கரமான ஆபத்து இதன் பின்னணியில் ஒளிந்திருப்பதாக ஜேன்ஸ்ஸ் டிபன்ஸ் வீக்லியைச் சேர்ந்த இக்பால் அதாஸ் கூறுகிறார்.

இலங்கை விமானப் படையிடம் 12 போர் விமானங்கள் உள்ளன. புலிகளிடம் ஐந்து இலகு ரக சாதாரண விமானங்கள் உள்ளன. படை பலத்தைப் பார்த்தால் புலிகளை இலங்கை போர் விமானங்கள் எளிதில் சமாளித்து விட முடியும்.

ஆனால், புலிகளின் விமான பலம் பல வகையான கேள்விகளை எழுப்பியுள்ளது. இலங்கை பாதுகாப்புப் படையின் நம்பகத்தன்மையை அது பலவீனமாக்கியுள்ளது.

வன்னியிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொழும்புக்கு, விமானத்தில் வந்து தாக்கி விட்டு பத்திரமாக மீண்டும் வன்னி திரும்பியுள்ளனர் புலிகள். இது இலங்கை பாதுகாப்புப் படையின் கண்காணிப்பை கேலிக்குரியதாக்கி உள்ளது.

இலங்கையில் 24 மணி நேர ரேடார் வசதிகள் இல்லை. குறிப்பாக இரவு நேர ரேடார் வசதி இல்லவே இல்லை. இதை புலிகள் சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

இனிமேல் புலிகளின் தாக்குதல் இலக்கு எல்லையற்றதாக மாறும். அவர்கள் எங்கு தாக்குதல் நடத்த நினைத்தாலும் அதை செய்ய முடியும். எனவே புலிகளின் விமானத் தாக்குதலை சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும் கூட அதன் பின்னணியில் மிகப் பெரிய ஆபத்துக்கள் ஒளிந்திருப்பதை மறுத்து விட முடியாது என்றார் அத்தாஸ்.

வான்புலிகள் பிரிவு எப்போது தொடங்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புலிகள் பகுதியில், விமான ஓடுதளம் இருப்பது சாட்டிலைட் படங்ள் மூலம் தெரிய வந்தது. இரணைமடு என்ற இடத்தில் இந்த ஓடுதளம் உள்ளது.

வான் புலிகள் பிரிவு 2000மாவது ஆண்டுக்கு முன்பே தொடங்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்தப் பிரிவின் தலைவராக இருந்தவர் சங்கர். பருத்தித் துறையில் உள்ள ஹார்ட்லி கல்லூரியில் படித்தவரான சங்கர் பின்னர் சென்னை வந்தார்.

சென்னையில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில், ஏரோநாட்டிக்ஸ் பிரிவில் பி.இ. படித்தார். அதன் பின்னர் கனடா சென்ற அவர், அங்கு ஏர் கனடா விமான நிறுவனத்தில் பொறியியல் பிரிவில் பணியாற்றியுள்ளார்.

அங்கு பெற்ற அனுபவத்துடன் ஈழத்திற்குத் திரும்பிய சங்கர் வான்புலிகள் பிரிவுக்குத் தலைமை ஏற்றார். 2001ம் ஆண்டு நடந்த சண்டையில் சங்கர் கொல்லப்பட்டார்.

புதிதாகத் தோன்றியிருக்கும் வான்புலிகள் பிரிவு, இந்தியாவுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

400 கிலோமீட்டர் தூரம் வரை சர்வசாதாரணமாக பறந்து சென்று கொழும்பில் தாக்குதல் நடத்தி விட்டு தங்களது தளத்திற்கு திரும்பியுள்ளனர் புலிகள். இது இலங்கையின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி விட்டது.

மேலும் முல்லைத்தீவிலிருந்து கொழும்பு செல்வதை விட தமிழ்நாட்டுக்கு தூரம் குறைவு. இருந்தாலும், புலிகளின் இலக்கு தமிழகமாக இருக்காது என்று நம்புகிறோம் என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X