ராமநாதபுரம்: 2 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட1,950 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிப்பு
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் இருமேனி என்ற பகுதியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட, விடுதலைப் புலிகளுக்காக கடத்தப்படவிருந்த 1,950 டெட்டனேட்டர்களை கியூ பிரிவு போலீஸார் கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.
சமீப காலமாக இலங்கைக்கு இரும்பு குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கடத்தியது தொடர்பாக கியூ பிரிவு போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த நவம்பர் மாதம் முதல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 17 இலங்கைத் தமிழர்கள் உள்பட 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் இருமேனி என்ற இடத்தில் மார்ச் 28ம் தேதி 1,950 டெட்டனேட்டர்களை கியூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து விசாரித்தபோது, கடந்த ஆண்டு இலங்கைக் கடற்படை பறிமுதல் செய்த வெடிபொருள் இவை என்ற திடுக்கிடும் தகவல் வெளியானது.
இதுகுறித்து கியூ பிரிவு போலீஸார் மேலும் கொடுத்துள்ள தகவல்:
கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி மதுரையைச் சேர்ந்த தினகரன் என்பவரை கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர். தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்களின் உதவியோடு, 61 ஆயிரம் டெட்டனேட்டர்களை இலங்கைக்குக் கடத்த முயன்றபோது அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பின்னர் அவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரிடமிருந்து பெருமளவிலான டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்படவில்லை. அவற்றை கடந்த 2005ம் ஆண்டு செப்டம்பர் 26, 2006ம் ஆண்டு பிப்ரவரி 13 மற்றும் பிப்ரவரி 19 ஆகிய தேதிகளில் இருமேனி பகுதியில் மண்ணில் புதைத்து வைத்திருந்தனர். அதைத்தான் தற்போது போலீஸார் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த 2006ம் ஆண்டு இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்ட வெடிபொருள் இவை. ஆனால் இவை எப்படி தினகரன் கும்பலிடம் வந்தது என்பது பெரும் குழப்பமாக உள்ளது. இதுகுறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே, விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளவர்களில், 8 இலங்கைத் தமிழர்கள் உள்பட 15 பேரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவர்களில் திமுகவைச் சேர்ந்த பரக்கத், மதிமுகவைச் சேர்ந்த சீமா பஷீர் ஆகியோர் முக்கியமானவர்கள்.
கடந்த மார்ச் 6ம் தேதி திருச்சியில் அருள் சீலன் என்ற இலங்கைத் தமிழர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் 4 இலங்கைத் தமிழர்கள் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 4,500 கிலோ எடை கொண்ட இரும்புக் குண்டுகள், 2 படகுகள், ஒரு லாரி ஆகியவை பல்வேறு பகுதிகளிலிருந்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, சென்னை கடற்பகுதியில் உள்ள பாதுகாப்பு நிலைமை குறித்து மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண், கடலோரக் காவல் படையின் ஹோவர்கிராப்ட் படகு மூலம் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை துறைமுகம் பகுதியிலிருந்து முட்டுக்காடு வரை இந்த ஆய்வு நடந்தது. இதில் கூடுதல் ஆணையர் ஜாங்கிட், இணை ஆணையர்கள் ரவி, துரைராஜ், ரத்தோர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
மாநிலத்தின் இதர பகுதிகளிலும் இதுபோன்ற ஆய்வை மேற்கொள்ள காவல்துறை முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications