கர்ப்பிணி நாடகமாடி குழந்தை கடத்திய பெண்
கிருஷ்ணகிரி10 மாதமாக வயிற்றில் துணியைக் கட்டிக் கொண்டு கர்ப்பிணியாக நாடகமாடி, தனது கணவர் வீட்டை ஏமாற்றியதோடு, மருத்துவமனையில் குழந்தையைத் திருடி, அதை தனது குழந்தை என்றும் கூறிய பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேர்பேட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி. இவரது மனைவி விமலா. இவருக்கு குழந்தை இல்லை. இதனால் கொளஞ்சிக்கு 2வது கல்யாணம் செய்ய அவரது வீட்டினர் திட்டமிட்டனர்.
இதனால் பயந்து போன விமலா, தனது வாழ்க்கையைக் காப்பாற்ற எண்ணி ஒரு திட்டம் போட்டார். அதன்படி கடந்த ஆண்டு ஜூலை மாதம் தான் கர்ப்பமாக இருப்பாக கணவர் வீட்டாரிடம் தெரிவித்தார்.
இதனால் சந்தோஷமடைந்த கொளஞ்சியின் குடும்பத்தினர் விமலா கர்ப்பமாகி விட்டதால் 2வது கல்யாணம் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தனர். அதன் பின்னர் விமலா, கர்ப்பிணியைப் போலவே நடந்து கொள்ள ஆரம்பித்தார்.
வயிற்றை மேடாக காட்ட துணிகளை வைத்துக் கட்டிக் கொண்டு நாடகமாடி வந்தார். நாட்கள் போகப் போக அவர் கட்டும் துணிகளும் அதிகரித்துக் கொண்டே வந்தது.
பின்னர் விமலாவுக்கு வளைகாப்பையும் சிறப்பாக நடத்தி பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர் கொளஞ்சி குடும்பத்தினர். அங்கு போன பின்னர் தனது நாடகத்தை முடிவுக்குக் கொண்டு வர முடிவு செய்தார் விமலா.
பல பகுதிகளிலும் அலைந்து சுமதி என்பவரைப் பிடித்து அவர் மூலம் ஒரு பெண் குழந்தையை ரூ. 2000 பணம் கொடுத்து வாங்கினார். அக்குழந்தையுடன் தனது கணவர் வீட்டுக்குத் திரும்பினார்.
விமலாவிடம் விற்கப்பட்ட அந்தப் பெண் குழந்தை ஓசூரைச் சேர்ந்த முருகன், சுதா தம்பதிக்குப் பிறந்தது. பிறந்த சில மணி நேரங்களிலேயே அந்தக் குழந்தையை சுமதி திருடிக் கொண்டு வந்து விட்டார்.
போலீஸார் விசாரணை நடத்தி விமலாவிடம் குழந்தை இருப்பதைக் கண்டுபிடித்தனர். விமலாவின் குட்டும் உடைந்தது, கொளஞ்சி குடும்பம் நிலை குலைந்தது.
விமலாவின் இந்த கர்ப்பிணி வேடம் கொளஞ்சி குடும்பத்தினரை மட்டுமல்லாது போலீஸாருக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. விமலா, சுமதி ஆகியோரை கைது செய்த போலீஸார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications