டாக்டர்களைக் கைது செய்வதில் புதியவிதிமுறைகள் - விரைவில் அரசாணை
சென்னை:சிகிச்சையின்போது நோயாளிகள் இறக்க நேரிட்டால் டாக்டர்களைக் கைது செய்வது தொடர்பாக புதிய விதிமுறைகளை தமிழக அரசு வகுத்துள்ளது. இந்த விதிமுறைகளை காவல்துறை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் சமீபத்தில் தொண்டை அறுவைச் சிகிச்சையின்போது ஒரு சிறுவன் இறந்தான். இதையடுத்து அவனுக்கு அறுவைச் சிகிச்சை செய்த டாக்டர் தம்பதியை போலீஸார் கைது செய்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்களும், தனியார் டாக்டர்களும் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உச்சநீதிமன்றம் டாக்டர்கள் மீதான நடவடிக்கை தொடர்பாக கடந்த 2005ம் ஆண்டு பிறப்பித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என இந்திய மருத்துவ சங்கமும், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கமும் அரசை வலியுறுத்தின.
டாக்டர்கள் மீது தவறு இருப்பதாக உறுதியாகும் வரை அவர்களை கைது செய்வதோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோ கூடாது என டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியது.
இதுகுறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்தது. இதைத் தொடர்ந்து சிகிச்சையின்போது நோயாளிகள் இறக்க நேரிட்டால் டாக்டர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக புதிய நெறிமுறைகளை அரசு வகுத்துள்ளது. இதுதொடர்பாக விரைவில் அரசு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்ஆர். ராமச்சந்திரன் கூறுகையில்,
இந்தப் பிரச்சினை தொடர்பாக முதல்வருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. விரைவில் உச்சநீதிமன்ற நெறிமுறைகளின் அடிப்படையில் புதிய அரசு ஆணை பிறப்பிக்கப்படும்.
மதுரை விவகாரத்தில் என்ன தவறு நடந்தது என்பது குறித்து விசாரிக்கப்படும். அதேபோன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும் என்றார் அவர்.
அரசின் இந்த முடிவை தனியார் மருத்துவமனைகள் மற்றும் நர்சிங் ஹோம் வாரிய தலைவர் டாக்டர் முருகானந்தன் வரவேற்றுள்ளார். மருத்துவ சிகிச்சையின்போது எதிர்பாராதவிதமாக நோயாளிகள் இறக்க நேரிட்டால், டாக்டர்களை உடனடியாக கைது செய்யக் கூடாது. அப்படியே கைது செய்ய நேரிட்டாலும், டிஎஸ்பி ரேங்குக்குக் குறைவான அதிகாரிகள் கைது செய்ய அனுமதிக்கப்படக் கூடாது என்று இந்திய மருத்துவ சங்கம் கூறியுள்ளது.
அரசு புதிதாக பிறப்பிக்கவுள்ள அரசு ஆணையால், டாக்டர்கள் வட்டாரத்தில் நிம்மதி பிறந்துள்ளது.












Click it and Unblock the Notifications