பாமகவின் தொடர் நெருக்கடி-கேபிள் டிவிநெட்வோர்க் தொடங்கும் தமிழக அரசு!
சென்னை:கேபிள் டிவி நிறுவனங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று தமிழக அரசை பாமக நெருக்கடி செய்ய ஆரம்பித்திருப்பதால், அரசு சார்பில் புதிய கேபிள் டிவி நெட்வோர்க் தொடங்கப்படுகிறது.
கடந்த அதிமுக ஆட்சியின் கடைசி நாட்களில், கேபிள் டிவி நிறுவனங்களை அரசே கையகப்படுத்தும் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து ஆளுநர் பர்னாலாவை கருணாநிதி நேரில் சந்தித்து இந்த சட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்தார். சன் டிவியின் சுமங்கலி கேபிள் விஷன் நெட்வோர்க்கை குறி வைத்து இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது என்பதால் அப்ேபாது கருணாநிதி தரப்பில் பர்னாலாவிடம் இக்கோரிக்கை வைக்கப்பட்டது. அதனால் அதை அப்படியே கிடப்பில் போட்டார் பர்னாலா.
இந்த நிலையில் தற்போது திமுகவுக்கும், சன் டிவிக்கும் இடையில் நல்லுறவு இல்லை என்பதால் கேபிள் டிவி நிறுவனங்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக வலியுறுத்த ஆரம்பித்துள்ளது.
பாமகவின் இந்த கோரிக்கையைத் தொடர்ந்து இதுதொடர்பாக ஆலோசனை நடத்த தொழில்நுட்பத் துறை வல்லுனர் குழுவை ராமதாஸிடம் அனுப்பி வைத்து அவரின் ஆலோசனையை முதல்வர் கருணாநிதி பெற்றுள்ளார்.
அந்தக் குழுவிடம், கேபிள் டிவி நிறுவனங்களை கையகப்படுத்தி, கேபிள் டிவி நிர்வாகத்தை அரசே ஒருங்கிணைத்து நடத்த வேண்டும் என்று ராமதாஸ் ஆலோசனை தெரிவித்தார்.
இந்த நிலையில் கேபிள் டிவி நிறுவனங்களை கையகப்படுத்துவதற்குப் பதில் (இதன் மூலம் சுமங்கலி கேபிள் விஷனை கையகப்படுத்தாமல் விட்டுவிடலாம்), தமிழக அரசின் சார்பில் தனியாக கேபிள் டிவி நெட்வோர்க்கை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுதொதாடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், கேபிள் டிவி நிறுவனங்களை கையகப்படுத்த முடியாது. அதில் சட்ட சிக்கல்கள் உள்ளன. எனவே அரசு சார்பில் தனியாக கேபிள் டிவி நிறுவனம் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
எப்படி மதுக் கடைகளை அரசின் டாஸ்மாக் நிறுவனமே நடத்தி வருகிறதோ அதேபோல கேபிள் டிவியையும் அரசே நடத்தும். அரசின் கேபிள் டிவி நிறுவனம் மூலம் தொடக்கத்தில் ஆண்டுக்கு ரூ. 500 கோடி அளவுக்கு வருமானம் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த வருவாயைக் கொண்டு அரசின் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
புதிய கேபிள் டிவி நிறுவனம் எப்போது தொடங்கப்படும் என்பதற்கு கால வரையறை வகுக்கப்படவில்லை. ஆரம்ப கட்டத்தில்தான் இந்தத் திட்டம் உள்ளது. உரிய தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெற்று இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
முதலில் குறிப்பிட்ட இடங்களில் இதை ஆரம்பித்து விட்டு பின்னர் படிப்படியாக தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
திமுக சார்பிலான கலைஞர் டிவி செப்டம்பர் 15ம் தேதி முதல் வரவுள்ள நிலையில், அரசின் இந்த கேபிள் டிவி நிறுவன அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழகத்தில் தற்போது முக்கால்வாசி கேபிள் டிவி நெட்வோர்க்குகளை, சன் டிவிக்குச் சொந்தமான சுமங்கலி கேபிள் விஷன் (எஸ்.சி.வி) நிறுவனம்தான் கட்டுப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications