அமைச்சரின் கார் டிரைவருக்கு அடி, உதைஅமைச்சரின் 2வது மனைவி காரணமா?
திண்டுக்கல்:வருவாய்த்துறை அமைச்சர் திண்டுக்கல் ஐ. பெரியசாமியின் கார் டிரைவர் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அமைச்சரின் 2வது மனைவி என்று கூறப்படும் பெண்மணி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் திண்டுக்கல்லில் பரபரப்பு நிலவுகிறது.
அமைச்சர் திண்டுக்கல் பெரியசாமியின் வீட்டுக்கு 8 பேர் ஒரு காரில் வந்தனர். காரை விட்டு இறங்கிய அவர்கள் வேகமாக அமைச்சரின் வீட்டுக்குள் செல்ல முயன்றனர்.
அப்போது அமைச்சரின் கார் டிரைவர் கண்ணன் அவர்களைத் தடுத்துள்ளார். அப்போது அந்தக் குழுவில் இருந்த ராஜலட்சுமி பெண்மணி, நான் யார் தெரியுமா, அமைச்சரின் 2வது மனைவி. என்னையே தடுக்கிறாயா என்று கோபத்துடன் கூறியபடி கண்ணனை அடித்துள்ளார். அதைத் தொடர்ந்து அவருடன் வந்தவர்களும் சரமாரியாக கண்ணனை அடித்துள்ளனர்.
இதில் கண்ணன் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தத் தாக்குதல் தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண்மணி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக வேறு ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது டிரைவர் கண்ணன், அமைச்சர் பெயரைச் சொல்லி பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி விட்டாராம்.
இதையடுத்து ஆத்திரமடைந்த பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், அமைச்சர் வீட்டுக்குச் சென்று அவரிடம் முறையிட்டனராம். அவர்களை சமாதானப்படுத்திய அமைச்சர், கண்ணனிடம் விசாரிப்பதாக கூறியுள்ளார்.
பின்னர் வெளியே அவர்கள் வந்தபோது எதிரே கண்ணன் வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கண்ணனை அடித்து உதைத்ததாக அந்த இன்னொரு செய்தி கூறுகிறது.
இதில் எது உண்மை, என்ன நடந்தது என்பது தெரியவில்லை. காவல்துறை தரப்பில் இந்த சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
ஆனால் தனது 2வது மனைவி வந்து தகராறு செய்ததாக கூறப்படுவதில் உண்மை இல்லை. இது எனது பெயரை களங்கப்படுத்தும் செயல். டிரைவர் தாக்கப்பட்டது உண்மை. ஆனால் எதற்காக தாக்கப்பட்டார் என்று தெரியவில்லை என்று அமைச்சர் பெரியசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.