நக்ஸல் வேட்டை அதிரடிப்படையினரின் மெனு!
பெரியகுளம்:நக்சல்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள அதிரடிப்படை வீரர்களுக்கு முகாமில் தங்கியிருந்தால் கோழிக் கறி சாப்பாடும், காட்டுக்குள் தேடுதல் வேட்டை நடத்தச் சென்றால் கஞ்சியும் உணவாக தரப்படுகிறது.
பெரியகுளம் வனப் பகுதியான முருகமலைப்பகுதியில் ஆயுதப்பயிற்சி எடுத்த நக்சல்களை போலீசார் பிடித்தனர். இதில் 5 நக்சல்கள் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட நக்சல்களிடம் விசாரணை நடத்தியதில், ஏராளமான இளைஞர்கள் இந்த இயக்கத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தப்பி ஓடிய நக்சல்களையும், இயக்கத்தில் உள்ள மற்றவர்களையும் தேடும் வேட்டை அனைத்து மலைப் பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.
இதற்காக பெரியகுளம் பகுதியில் அதிரடிப்படையினர் முகாம் அமைத்துள்ளனர். இந்த முகாமில் 130 அதிரடிப்படையினர் தங்கியுள்ளனர். இதில் 15 பேர் கொண்ட 3 குழுவினர் காட்டுக்குள் தேடுதல் வேட்டைக்கு செல்வார்கள். மற்றவர்கள் முகாமில் தங்கி பயிற்சியில் ஈடுபடுவார்கள்.
தேடுதல் வேட்டைக்கு சென்ற குழுவினர் 5 நாட்களுக்கு பின் முகாமிற்கு திரும்புவார்கள். சுழற்சி அடிப்படையில் இவர்கள் தேடுதல் வேட்டையை நடத்துகிறார்கள்.
அதிரடிப்படை முகாமில் உள்ள வீரர்கள் அவர்கள் இஷ்டத்துக்கெல்லாம் உணவை சமைத்து சாப்பிட முடியாதாம். அதற்கு உத்தரவு வந்தால் தான் சமைக்கவே ஆரம்பிக்க வேண்டுமாம். உத்தரவு எங்கிருந்து வர வேண்டும் தெரியுமா. சத்தியமங்கலத்திருந்து வர வேண்டும்.
சத்தியமங்கலத்தில் இருக்கும் ஏடிஎஸ்பி திருநாவுக்கரசு தான் சமைக்க உத்தரவு போடுவாராம். வாரத்திற்கு ஒரு முறை அவர் கொடுக்கும் மெனுதான் சாப்பாடு.
வாரத்திற்கு 3 நாட்கள் அசைவ உணவு சமைத்துக் கொள்ளலாம். மற்ற நாட்களில் இட்லி, தோசை, சப்பாத்தி, தயிர் சாதம், கூட்டு, பொறியல், சாப்பாடு தான்.இதெல்லாம் முகாமில் தங்கியிருந்து பயிற்சி எடுக்கும் வீரர்களுக்கு மட்டும்தான்.
காட்டுக்குள் தேடுதல் வேட்டைக்குச் செல்லும் வீரர்களுக்கு 5 நாட்களுக்கு தேவையான பேரிச்சம்பழம், ஜாம் போன்றவை பேக் செய்யப்பட்டு தரப்படுமாம். இது போக காட்டுக்குள் இரவு நேரங்களில் ஆங்காங்கே கூடாரம் போட்டு கஞ்சி காய்ச்சித்தான் சாப்பிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
