மணல் திருட்டு: தமிழக அரசு மீது பாமக வழக்கு
சென்னை:நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவோர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும், இதற்கு உடந்தையாக உள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பாமக வழக்கு தொடர்ந்துள்ளது.
திமுக-பாமக இடையே மோதல் வலுத்துள்ள நிலையில் பாமக எம்.எல்.ஏக்கள் ஓமலூர் தமிழரசு, எடப்பாடி காவேரி ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வருவதாக எங்களது கட்சித் தலைவரிடம் பொதுமக்கள் புகார்கள் அளித்தனர்.
அதன் அடிப்படையில், எங்களது கட்சித் தலைவரின் உத்தரவுப்படி, நாங்கள் இருவரும் கடந்த 27.7.2007 மற்றும் 28.7.2007 அன்று சம்பந்தப்பட்ட மாவட்டங்ளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினோம்.
அப்போது அரசு விதிமுறைகளை மீறி இம்மாவட்டங்களில் வைப்பாறு, தாமிரபரணி, ஆறுகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவது கண்டறியப்பட்டது. தமிழக அரசின் இந்தப் போக்கை கண்டித்தும், மணல் அள்ளுவதை தடுக்கக் கோரியும் கடந்த 7.8.2007 அன்று எங்களது கட்சியின் சார்பாக அப்பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
இதில் பொட்டல், நூலச்சி, மணியார்குளம், செங்குளம், அழகப்பாபுரம், பாடபுரம், மதுவுடையார் குளம், வாழ்த்த நம்பி குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாவட்டங்களில் மணல் திருட்டைத் தடுக்கக் கோரியும், ஒப்பந்தகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பொதுப்பணித்துறைச் செயலாளரை சந்தித்துப் புகார் கொடுத்தோம்.
ஏற்கனவே தமிழக ஆற்றுப் படுகைகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 26.7.2002 அன்று வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மண்ணியல் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை விஞ்ஞானிகள் அடங்கிய கமிட்டியை நியமித்து சோதனை நடத்த உத்தரவிட்டது.
அந்த கமிட்டியின் பரிந்துரையின் பேரில், 2.10.2003 முதல் தமிழக அரசே மணல் குவாரிகளை ஏற்று நடத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்தப் பணி பொதுப்பணித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் கீழ நம்பியார்புரம், அம்மன்கோவில்புரம், ஆற்றங்கரை, வீரசம்பட்டி, கோடித்துறை, கருங்குளம், கன்சாபுரம், குறிச்சி, முக்கனி ஆகிய இடங்களில் மணல் குவாரிகள் உள்ளன.
இங்கு நேரடி ஆய்வு மேற்கொண்டபோது, அங்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் யாரும் இல்லை. ஒரு லாரி இரண்டு யூனிட் மணல் ஏற்றுவதற்குப் பதில் 8 யூனிட் மணல் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் அதற்கு இரண்டு யூனிட்டுக்கான விலையே தரப்படுகிறது.
இந்த மணல் அனைத்தும் டிப்போக்களில் விற்கப்படாமல் ஆற்றுப் படுகைகளிலேயே விற்கப்படுகிறது. பொக்லைன் வைத்து மணல் அள்ளுகிறார்கள். இது விதிமுறையை மீறிய செயல்.
இந்தக் குற்றத்தை களைவதை விட்டு விட்டு பொதுப்பணித்துறை அமைச்சர் மூலம் அரசு அறிக்கை விடுகிறது. இதேபோல பாமக எம்.எல்.ஏ இளவழகன் தொடர்ந்த வழக்கில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மேற்கண்ட பகுதிகளில் நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு நடத்த வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட வேண்டும். சட்டவிரோதாக மணல் அள்ளியவர்களுக்கு உடந்தையாக இருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications