For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அணு ஒப்பந்தமும் அத்வானி சர்க்கஸும்!!

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான பாஜக நிலை குறித்து அக்கட்சியின் மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான எல்.கே.அத்வானி மீண்டும் ஒரு நழுவல் விளக்கத்தை அளித்துள்ளார்.

அணு சக்தி ஒப்பந்தத்தை ஆரம்பத்தில் பாஜக எதிர்த்து வந்தது. பின்னர் இடதுசாரிகளுடன் சேர்ந்து மத்திய அரசை விமர்சித்து வந்தது. ஆனால், அணு சக்தி ஒப்பந்தத்திற்கு படித்தவர்கள் மத்தியிலும், விஞ்ஞானிகளில் பெரும்பாலானவர்களிடையேயும் ஆதரவு இருப்பதை அறிந்த பாஜக திடீரெ அணு சக்தி ஒப்பந்தத்தை ஆதரிப்பதாக அறிவித்தது.

நாட்டு நலனைக் கருதி ஒப்பந்தத்தை ஆதரிப்பதாக அத்வானி அறிவித்தார். ஆனால் பாஜகவின் இந்த பல்டி கட்சிக்குள் கடும் விமர்சனத்திற்குள்ளானது. இதையடுத்து தனது பேச்சு குறித்து அத்வானி புதிய விளக்கம் தந்துள்ளார். இது இன்னொரு அந்தர் பல்டியாக கருதப்படுகிறது.

அவர் கூறுகையில், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான பாஜக நிலையில் எந்த மாற்றமும் இல்லை. நான் கூறியதற்கும், பாஜகவின் நிலைக்கும் எந்த முரண்பாடும் இல்லை.

தற்போதுள்ள வடிவில் 123 ஒப்பந்தம் பாஜகவுக்கு உடன்பாடானது என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. நான் பேசிய பேச்சையும், எனது நிலையையும் பாஜக நாடாளுமன்றக் கட்சியிடம் விளக்கமாக எடுத்துரைத்துள்ளேன்.

அமெரிக்காவின் ஹைட் சட்டம், இந்தியாவின் இறையாண்மையைப் பாதிக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக நமது நாட்டின் வெளியுறவுக் கொள்கையைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு உள்ளது என்று நான் கூறியுள்ளேன்.

இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்தினால், அது நமது நாட்டின் அணு ஆயுதத் திட்டத்தை முடக்கி விடும். நமது பாதுகாப்பு திட்டங்களும் கேள்விக்குறியாகி விடும் என்று நான் கூறியுள்ளேன்.

நமது நாட்டின் நலனை கருத்தில் கொண்டு மட்டும்தான் இந்த ஒப்பந்தத்தை ஏற்கலாம் என நான் பேசியிருந்தேன் என்றார் அத்வானி.

கட்சித் தலைமைக்கு அத்வானி அனுப்பிய விளக்கக் கடிதத்தையும் பின்னர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வி.கே.மல்ஹோத்ரா வெளியிட்டார்.

கட்சித் தலைமைக்கு அத்வானி அளித்துள்ள விளக்கத்தில், நமது நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தை அமெரிக்காவிடம் சரண்டர் செய்வதை பாஜக ஏற்காது. 123 ஒப்பந்தத்தை அமல்படுத்தினால், அதையும் தாண்டி நமது நாட்டின் பாதுகாப்புத் திட்டங்கள் பாதிக்கப்படாத வகையில் நமது நாட்டு சட்டங்களை வலுப்படுத்த வேண்டும்.

இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்தினால் ஹைட் சட்டம் உள்ளிட்ட பிற அமெரிக்க சட்டங்களை நாம் பின்பற்ற வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் இவற்றை நாம் ஏற்க முடியாது.

இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்தினால் அமெரிக்காவுடன் ஒத்துழைத்து செயல்படுவது என்பதை விட அமெரிக்காவிடம் சரணடைந்து செயல்படுவது என்ற நிலை ஏற்படும். அதை பாஜக ஏற்காது.

1962ம் ஆண்டு அணு சக்தி சட்டத்தை இந்தியா மறு பரிசீலனை செய்ய வேண்டும். இந்த சட்டத்தை வலுப்படுத்துவதன் மூலம் 123 ஒப்பந்தத்தால் ஏற்படும் விளைவுகளை நாம் சமாளிக்க முடியும்.

இந்திய, அமெரிக்க ஒப்பந்தம் குறித்து விவாதிக்க ஐக்கிய முற்ேபாக்குக் கூட்டணிக் கட்சிகளை மட்டும் உள்ளடக்கிய குழுவை பாஜக ஏற்காது. அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய கூட்டு நாடாளுமன்றக் குழு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே பாஜகவின் நிலை.

இது நாட்டு நலன் சம்பந்தப்பட்டது. எனவே நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளும் இந்தக் குழுவில் இடம் பெற வேண்டும்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் நாட்டு நலன் சம்பந்தப்பட்ட எந்த பன்னாட்டு ஒப்பந்தத்தையும் அமல்படுத்துவதற்கு முன்பு நாடாளுமன்றத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் அத்வானி.

நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு ஒப்பந்தத்தை ஆதரிப்பதாக முதலில் கூறிய அத்வானி தற்போது நான் முழுவதுமாக அதை ஆதரிக்கவில்லை என்ற ரீதியில் விளக்கமளித்திருப்பது அவரது குழப்பத்தையே காட்டுவதாக உள்ளது.

அத்வானியின் விளக்கம் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் வெளியுறவு அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, அத்வானியின் விளக்கம் திருப்திகரமாக உள்ளது. அவர் எனது தலைவர், அவர் தவறு செய்ய மாட்டார் என்றார்.

மொத்தத்தில் அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக இன்ன நிலைதான் எடுக்கப்பட்டுள்ளது என்பதை பாஜகாவால் விளக்க முடியாத அளவுக்கு அங்கு குழப்பம் குடிகொண்டிருப்பது புரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X