தேமுதிக தொண்டர்கள் மீது தாக்குதல்br/திமுகவுக்கு விஜயகாந்த் எச்சரிக்கை
சென்னை:
எங்களது தொண்டர்கள் இதுவரை பொறுமை காத்து வருகின்றனர். இளைஞர்களின் எதிர்காலம் கெட்டுவிடக்கூடாது என்பதால் சிறிதும் அவர்களை வன்முறையில் ஈடுபடுத்தாமல், பெற்றோர்களுக்கு நல்ல பிள்ளையாக வளர்த்து வருகிறோம். அவர்களை சீண்டவேண்டாம் என்று திமுகவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சேலத்தில் பேனர் கட்டுவது தொடர்பாக திமுகவினருக்கும், தேமுதிகவினருக்கும் பயங்கர மோதல் மூண்டது. இரு தரப்பினரும் உருட்டுக் கட்டைகளால் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் தேமுதிக தொண்டர்கள் கடுமையாக தாக்கப்பட்டு காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தை விஜயகாந்த் கடுமையாக கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் 14ம் தேதி சேலத்தில் முதல்வர் கருணாநிதி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கிறார். அதே நாளில் புதுக்கோட்டையில் தேமுதிகவின் 3வது ஆண்டு துவக்கவிழா நடைபெற இருக்கின்றது.
கருணாநிதிக்கு எவ்வாறு திமுகவினர் பேனர்கள், கொடிகள், தோரணங்கள், அலங்கார வளைவுகள் அமைக்கின்றனரோ, அதைப் போலவே தேமுதிக தொண்டர்களும் தங்கள் கட்சியின் விழாவிற்காக சேலத்தில் பேனர்களை அமைத்து வருகின்றனர்.
ஆனால் ஆளும் கட்சி விளம்பரங்களைத் தவிர, மற்ற கட்சி விளம்பரங்களை முற்றிலும் அகற்ற வேண்டும். அறவே இருக்கக் கூடாது என்ற தோரணையில் போலீசாரின் துணையோடு, தேமுதிகவின் விளம்பரப் பலகைகளையும், தோரணம் மற்றும் கொடிகளையும் அகற்றியுள்ளனர்.
இதைத் தட்டிக்கேட்ட தேமுதிக தொண்டர்களின் மீது குண்டர்களை கொண்டு கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். படுகாயம் அடைந்த தேமுதிக தொண்டர்கள் அரசு மருத்துவமனையில் கூட அனுமதிக்கப்படவில்லை என்பது மிகவும் கொடுமையான செய்தியாகும்.
ஆளும் கட்சியினரின் கைப்பாவையாக காவல்துறை இயங்கி வருவது சட்டத்திற்கு புறம்பானது மட்டுமல்ல, அத்துறைக்கு பெரும் மானக்கேடு.
சேலத்தில் மட்டுமல்ல, தமிழகமெங்கும் தேமுதிகவினர் வைத்த விளம்பரங்களை அழிக்கின்றனர். எங்களது தொண்டர்கள் வியர்வையும், ரத்தத்தையும் சிந்தி உழைத்த பணத்தின் மூலம் விளம்பரங்கள் செய்கின்றனர். மற்றவர்களை போல் ஊழல் பணத்தில் விளம்பரம் செய்யவில்லை.
மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் காவல்துறை மக்களுக்கும், சட்டத்திற்கும் கட்டுப்பட்டது. ஆனால் இன்று ஆளும் திமுக கட்சிக்கு எடுபிடியாக மாறிவிட்டது கடும் கண்டனத்திற்குரியது.
ஆளும் கட்சி மாறலாம். நாளை தேமுதிக ஆட்சி மலரும். காவல்துறை பொதுவாக இயங்க வேண்டுமே தவிர, அரசியல் கட்சிகளின் கைப்பாவையாக மாறி விடக் கூடாது.
திமுக ஆட்சியில் யாரும் எந்தக் குற்றமும் செய்யலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. சட்டம், அமைதி சீர்கெட்டு விட்டது. எங்களது தொண்டர்கள் இதுவரை பொறுமை காத்து வருகின்றனர். இளைஞர்களின் எதிர்காலம் கெட்டு விடக்கூடாது என்பதால் சிறிதும் அவர்களை வன்முறையில் ஈடுபடுத்தாமல், பெற்றோர்களுக்கு நல்ல பிள்ளையாக வளர்த்து வருகிறோம்.
தமிழ்நாட்டின் எதிர்காலம் கருதி அவர்களை சீண்டவேண்டாம் என்று எச்சரிக்கிறேன். எதிர்க்கட்சிகளை பழிவாங்க வேண்டும் என்ற போக்கை தமிழக அரசு கைவிடவேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
எங்களுக்கும் தெரியும் ரவுடியிசம்!
முன்னதாக சென்னை சட்டக் கல்லூரி, மாநிலக் கல்லூரி, நந்தனம் அரசினர் கலைக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் விஜயகாந்த் முன்னிலையில் தேமுதிகவில் இணைந்தனர்.
அவர்களை வரவேற்று விஜயகாந்த் பேசுகையில், அரசியல் சாக்கடை என்று மாணவர்கள் ஒதுங்கிவிடக் கூடாது. துணிந்து இறங்கினால்தான் அந்த சாக்கடையை சுத்தமாக்க முடியும்.
கூட்டணி சேர்ந்தால் தான் ஜெயிக்க முடியும் என்று பலரும் என்னிடம் கூறுகிறார்கள். கூட்டணி சேராமல், நல்லது செய்தால் ஏன் ஜெயிக்க முடியாது?
என்னை அழித்து விடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். கஷ்டப்பட்டு கட்டிய கல்யாண மண்படபத்தை இடித்தார்கள். பல வழிகளிலும் நெருக்கடி கொடுத்தார்கள். எதை வேண்டுமானாலும் இடிக்கலாம், அழிக்கலாம். ஆனால் மக்களோடு இணைந்திருக்கும் விஜயகாந்தை அழிக்க முடியாது.
புதுக்கோட்டை தேமுதிக மாநாட்டிற்கு செல்ல விடாமல் தொண்டர்களுக்கு இடையூறு கொடுக்கிறார்கள். எங்களுக்கும் ரவுடியிசம் தெரியும். ஆனாலும் பொறுமை காக்கிறோம்.
எல்லோரும் டிவி ஆரம்பிக்கிறார்கள். நீங்கள் ஏன் ஆரம்பிக்கவில்லை என்று என்னை கேட்கிறார்கள். என்னை எப்படி ஆரம்பிக்க விடுவார்கள். இவர்கள் நினைத்தால் மட்டும்தான் ஒரே மாதத்தில் சேனல் துவங்க முடியும் என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications