For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சபாநாயகர் மீது தொப்பியை வீசி அதிமுக எம்எல்ஏக்கள் தாக்குதல்

By Staff
Google Oneindia Tamil News


சென்னை:

தமிழக சட்டசபையில் சபாநாயகர் மீதே இன்று அதிமுக எம்எல்ஏக்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அவர்களை கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் ஆவுடையப்பன் உத்தரவிட்டார்.

Tamil Nadu Assemblyசட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுந்து எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா மீது உரிமைப் பிரச்சினையைக் கொண்டு வந்தார்.

இதை உரிமைக் குழுவுக்கு அனுப்பி விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றார் ஸ்டாலின்.

அப்போது பேசிய சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் அளித்த பேட்டியை நானும் படித்தேன். மேலெழுந்த வாரியாக பார்க்கும்போது அதில் அவை மீறல் இருக்கிறது. எனவே இதை உரிமை குழுவுக்கு அனுப்பி வைக்கிறேன் என்றார்.

ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தபோதே அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். ஜெயலலிதா மீதான பிரச்சனையை உரிமைக் குழுவுக்கு அனுப்பக் கூடாது என்றனர். ஆனால், அவர்களது கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர் ஆவுடையப்பன், ஸ்டாலின் கொண்டு வந்த பிரச்சினையை உரிமைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைப்பதாக அறிவித்தார்.

இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கை முன் திரண்டு அரசுக்கும் சபாநாயகருக்கும் எதிராக கூச்சலிட்டனர்.

இதைத் தொடர்ந்து அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். அவைக் காவலர்கள் வந்து அதிமுகவினரை வெளியேற்ற முயன்றபோது அவர்களுடனும் அதிமுக எம்எல்ஏக்கள் முரண்டு பிடித்தனர்.

இதனால் பலரை குண்டுகட்டாக தூக்கிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அவ்வாறு கொண்டு செல்லப்பட்டபோது ஒரு அதிமுக எம்எல்ஏ அவைக் காவலர் ஒருவரின் தொப்பியைப் பறித்து அதை சபாநாயகர் மீது வீசிவே அவையே அதிர்ந்து போனது.

இதையடுத்து அதிமுக எம்எல்ஏக்களுக்கும் அவைக் காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தங்களை காவலர்கள் தாக்கிவிட்டதாக அதிமுகவினர் கூறினர்.

அவையில் இருந்து வெளியேற்றபட்ட பின்னரும் அதிமுக எம்எல்ஏக்கள் வராண்டாவில் நின்றபடி அரசுக்கு எதிராக கோஷமிட்டதால் அவர்களை அங்கிருந்தும் வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்தும் அகற்றப்பட்டனர்.

சபாநாயகர் மீது தொப்பியை வீசி தாக்கிய அதிமுகவினரின் செயலுக்கு அனைத்துக் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ சிவபுண்ணியம் பேசுகையில்,

சபை நாகரீகம் இல்லாமல் நடந்து கொள்வதை இவர்கள் வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். சுயநலத்துக்காகவே இது போல நடந்து கொள்கிறார்கள். அவையை நடத்த விடாமல் தடுப்பதே இவர்கள் நோக்கம் நாட்டு மக்களுக்காக பேச இவர்களுக்கு அருகதை இல்லை. எனவே அதிமுக எம்எல்ஏக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் சுதர்சனம் பேசுகையில், அதிமுக உறுப்பினர்கள் 2 நாட்களாக தொகுதி பற்றியோ மக்களை பற்றியோ பேசாமல் ஜெயலலிதாவின் சொந்த பிரச்சினைக்காக அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்கிறார்கள். சபாநாயகரை தாக்க முயற்சி செய்கிறார்கள். இது சட்டமன்ற நடவடிக்கைகளை அவமதிக்கும் செயலாகும். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதைத் தொடர்ந்து அவை முன்னவரான பேராசிரியர் அமைச்சர் அன்பழகன் பேசுகையில்,

சட்டமன்ற மரபை மீறும் வகையில் நடந்து கொள்கிறார்கள். சட்டமன்றத்துக்கு வெளியே அவதூராக பேசி மலிவான இழிவான விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள். பேச்சுரிமையை பாதிக்கும் வகையில் அமைச்சரை பேச விடாமல் தடுக்கும் நோக்கத்தில் கூச்சல் போடுகிறார்கள். வெளியேற்றினால் வெளியேறாமல் இடையூறு செய்கிறார்கள்.

தொடர்ந்து இவ்வாறு அவர்கள் நடந்து கொள்வதை அனுமதிக்க கூடாது. எனவே இவர்களை இந்த சட்டப் பேரவை தொடர் முடியும் வரை தற்காலிக நீக்கம் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன் என்றார்.

இந்தத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் இந்தக் கூட்டத் தொடரின் எஞ்சிய நாட்கள் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

அப்போது பேசிய துணை சபாநாயகர் துரைசாமி, அதிமுக உறுப்பினர் ஒருவர் அவைகாவலரின் தொப்பியை பறித்து சபாநாகரை அடித்திருக்கிறார். அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள் என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர், அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து அது போல நடந்து வருகிறார்கள். இன்று அமைச்சர் பேசும்போது இடை மறித்து இடையூறு செய்து இருக்கிறார்கள். என் இருக்கை முன்பு அமர்ந்து கோஷம் போட்டார்கள்.

வெளியேற்ற ஆணையிட்டபோது அதை நிறைவேற்றிய காவலர்களை தாக்கி தொப்பியை பறித்து என்னை தாக்கி உள்ளனர்.

இது நாகரீகமான செயல் அல்ல. மக்களுக்கு பணியாற்றுவதை மறந்து விட்டு அநாகரீகமாக நடந்து கொள்கிறார்கள். இனியாவது அவர்கள் தங்களை திருத்தி கொண்டு மக்களுக்கு பணியாற்ற வேண்டும். இந்த நடவடிக்கைக்காக 22-ந்தேதி வரை அவையை விட்டு நீக்கி வைக்க உத்தரவிட்டு இருக்கிறேன் என்றார்.

பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், தொப்பியை வீசிய அந்த அதிமுக எம்எல்ஏ யார் என்பது இங்கு பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் அடையாளம் கண்டு, அவர் மீது சபாநாயகர் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

முதல்வர் கருணாநிதி பேசுகையில், மிகவும் அறுவறுக்கத்தக்க சம்பவம் இது. சபாநாயகரைத் தாக்கியதன் மூலம் சபையின் மாண்பை குறைத்து விட்டனர் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X