For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உடனடி தேர்தல்- தளபதி பதவியிலிருந்து விலக முஷாரப்புக்கு புஷ் உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News


George Bushவாஷிங்டன்: பாகிஸ்தானில் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும். ராணுவத் தளபதி பதவியிலிருந்து விலக வேண்டும் என்று முஷாரப்புக்கு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உத்தரவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் நிலவரம் குறித்து இதுவரை புஷ் உறுதியான கருத்து எதையும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் முதல் முறையாக பாகிஸ்தான் குறித்து அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.

அமெரிக்கா வந்துள்ள துருக்கி பிரதமர் ரீகேப் தயீப் எர்டோகனுடனான சந்திப்புக்குப் பின்னர் எர்டோகடனுடன் செய்தியாளர்களைச் சந்தித்தார் புஷ். அப்போது பாகிஸ்தான் அதிபர் முஷாரப்புக்கு கட்டளை கலந்த கோரிக்கையை வைத்தார்.

புஷ் கூறுகையில், பாகிஸ்தானில் விரைவில் நேர்மையான, நியாயமான தேர்தல் நடத்தப்பட வேண்டும். ராணுவத் தளபதி பதவியிலிருந்து முஷாரப் கூடிய விரைவில் விலக வேண்டும்.

இந்த செய்தியை முஷாரப்புக்கு போன் மூலம் தெரிவிக்குமாறு வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸை நான் கேட்டுக் கொண்டுள்ளேன்.

பாகிஸ்தானில் எவ்வளவு விரைவாக ஜனநாயகத்திற்கு உயிர் கொடுக்கப்படுகிறதோ அவ்வளவுக்கு நல்லது.

எனது கோரிக்கையை முஷாரப் ஏற்கவிட்டால் அமெரிக்கா அடுத்து என்ன செய்யும் என்ற கேள்விக்கு என்னால் பதிலளிக்க முடியாது. அது ஒரு யூகம் கலந்த கேள்வி.

எனது அறிவுரையை அவர் மதிப்பார் என்று நம்புகிறேன். துருக்கி பிரதமரும் இதே கோரிக்கையைத்தான் வைத்துள்ளார். அதையும் முஷாரப் ஏற்பார் என்று நம்புகிறேன்.

தீவிரவாதத்திற்கு எதிரான போரில் முஷாரப் நன்கு ஒத்துழைத்து வருகிறார். இதனால்தான் அவருடனும், பாகிஸ்தான் அரசுடனும் இணைந்து செயல்பட அமெரிக்கா தொடர்ந்து விரும்புகிறது.

இந்த நம்பிக்கையில்தான் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தனது அறிவுரையை வழங்கியுள்ளது. அது ஏற்கப்படாத பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அமெரிக்கா யோசிக்கும்.

பாகிஸ்தானில் விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது அமெரிக்காவின் விருப்பம். இதை முஷாரப் கூடுமான வரையில் விரைவுபடுத்த வேண்டும். அதேசமயம், தீவிரவாதத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் எதிரான போரில் முஷாரப்புடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம்.

இந்தத் தீவிரவாதிகள், முஷாரப்பை கொல்லத் துணிந்தவர்கள் மட்டும் அல்ல. ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் தீவிரவாத செயல்களை அரங்கேற்றியவர்கள் என்றார் புஷ்.

கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க ஐ.நா. கோரிக்கை

இதற்கிடையே, அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டவுடன் கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள், வக்கீல்கள் உள்ளிட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என பாகிஸ்தானை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நூற்றுக்கணக்கான மனித உரிமை ஆர்வலர்கள், எதிர்க்கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மத சுதந்திரத்திற்கான ஐ.நா. சிறப்புப் பிரதிநிதி அஸ்மா ஜஹாங்கீரும் ஒருவர் என்பது வருத்தம் தருகிறது.

கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரிக்கைகள், தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும்.

பாகிஸ்தானில் மீண்டும் ஜனநாயகம் மலர வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் திட்டமிட்டபடி நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.


நீதிபதிகளின் எண்ணிக்கை குறைப்பு:

இதற்கிடையே, பாகிஸ்தான் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 17லிருந்து 12 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இனிமேல் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தவிர 11 நீதிபதிகள் மட்டுமே இருப்பார்கள் என அந்நாட்டு அட்டர்னி ஜெனரல் மாலிக் கயூம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அதிபர் தேர்தலில் முஷாரப் போட்டியிட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை 11 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்கும்.

நிர்வாக காரணங்களுக்காகவே இந்த மாற்றம். இதற்கும் அவசர நிலை பிரகடனத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

நீதிபதிகள் பதவி உயர்வை தலைமை நீதிபதியே முடிவு செய்வார். நான்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் தற்போது உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். விரைவில் அவர்கள் பதவி ஏற்றுக் கொள்வார்கள் என்றார்.

புதிதாக பதவி உயர்வு பெற்றுள்ள நீதிபதிள் நவாஸ் அப்பாசி, பக்கீர் கோக்கர், ஜாவேத் பட்டர், சயீத் அஷாத் ஆகியோர் ஆவர். இவர்கள் அனைவரும் ஏற்கனவே பதவி ஏற்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் தவிர மேலும் 2 உயர்நீதிமன்ற நீதிபதிகளும் உச்சநீதமன்ற நீதிபதிகளாக பதவி உயர்த்தப்படவுள்ளனர்.


வக்கீல்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு ஐ.நா. மனித உரிமை ஆணையர் லூயிஸ் ஆர்பரும் கண்டனம் தெரிவித்துள்ளார். நீதிபதிகள், வக்கீல்கள், அரசியல் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. குறிப்பாக மத சுதந்திரத்திற்காக பாடுபட்டு வரும் அஸ்மா ஜஹாங்கீர் கைது செய்யப்பட்டிருப்பது வன்மையாக கண்டித்தக்கது என்று அவர் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X