For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

களக்காட்டில் குளங்கள் உடைந்து ஊருக்குள் வெள்ளம்!

By Staff
Google Oneindia Tamil News

களக்காடு: நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் விடிய விடிய மழை பெய்ததால் ஆறு, குளங்கள் உடைப்பெடுத்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் விவசாய நிலங்கள், வீடுகள் நீரில் மூழ்கின.

களக்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்றிரவு விடிய விடிய இடி,மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால் பச்சையாறு, நாங்குநேரியான் கால்வாய், உப்பாறு ஆகிய ஆறுகளில் அதிகாலை வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

களக்காட்டில் இருந்து சிதம்பரபுரம் செல்லும் பாலம், கீழ் கருவேளங்குளத்தில் இருந்து மஞ்சுவிளை செல்லும் பாலம், ஆகியவை வெள்ளத்தில் முழ்கின. பாலங்கள் மீது 4 அடி உயரத்தில் தண்ணீர் சென்றதால் அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சிதம்பரபுரம் பாலத்தில் போடப்பட்டிருந்த குடிநீர் குழாய்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

நாங்குநேரியான் கால் ஆற்றில் புதுத்தெரு அருகே உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. புதுத்தெரு, சர்ச்தெரு, ஆவுடைவிலாசம் தெரு, மருத்துவர் தெரு, பெருமாள்கோவில் தெரு, ஜவகர் வீதி, போலீஸ் லைன் தெரு வழியாக பெருக்கெடுத்து ஓடியதால் அங்குள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் தவித்தனர்.

சி.எஸ்.ஐ ஆலயம் அருகில் உள்ள துவக்கப்பள்ளி, வரதராஜர் பெருமாள் கோவில் ஆகியவையும் வெள்ளத்திற்கு தப்பவில்லை. ஆற்றாங்கரை தெருவில் சாஸ்தா கோவில் அருகே ஆறு உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்த ஆறு மேலும் உடையாமல் இருக்க கவுன்சிலர் கனகராஜ் மற்றும் பொதுமக்கள் மணல் மூட்டைகளை அடுக்கி தடுப்பு போட்டனர். இதே போல களக்காடு நாங்குநேரி ரோட்டில் பெல்ஜியம் அருகே ஆற்றில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் ஓடியது.

அங்குள்ள அரசு மருத்துவமனை குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது. அங்கிருந்த ஊழியர்கள் வீடுகளை விட்டு வெளியேறி மருத்துவமனைக்குள் தஞ்சம் புகுந்தனர்.

களக்காடு அருகே கீழபத்தையை சேர்ந்த வேலு, வியாசராஜபுரத்தை சேர்ந்த தங்கம் ஆகியோரது வீடுகள் மழையினால் இடிந்து விழுந்தது. கீழபத்தை என்ற கிராமத்தில் மின் கம்பம் விழுந்தது.

குடில் தெரு, விநாயகத்தான் குளம் இரு இடங்களில் உடைத்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. அப்பகுதி இளைஞர்கள் மணல் மூட்டைகளை அடுக்கி உடைப்பை சீரமைத்தனர். குடில்தெரு பாலம் அருகில் ரோட்டில் அரிப்பு ஏற்பட்டதால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

பேருந்துகள் நிறுத்தம்

கடும் மழையினால் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த கிராமங்களுக்கு செல்லும் பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

கங்கைகொண்டான் சிற்றாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் வடகரை, புங்கனூர், கைலாசபுரம், கீழக்கோட்டை, கொடியன்குளம், அம்மாள்பட்டி, அய்யாபுரம், கொத்தாளி உள்பட 9 கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் ஓடவில்லை. வேறு மாற்று பாதை எதுவும் இல்லாததால் கிராம மக்கள் வெளியூருக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

இங்குள்ள தாம்போதி பாலத்தில் கடந்த ஆண்டு வெள்ளத்தில் 5 பேர் இழுத்து செல்லப்பட்டு அதில் ஓருவர் பலியானார். இதனால் இந்த பாலத்தில் இறங்கி நடந்து செல்ல மக்கள் பயந்து எங்கும் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

இந்த தாம்போதி பாலத்தை உயர்த்தி சிமெண்டு குழாய் பதித்து பாலமாக மாற்றி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீண்ட காலமாக இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 6.30 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது. பலத்த இடி மின்னலுடன் விடிய விடிய மழை பெய்தது. அதிகாலை 5.30 மணி வரை விட்டு விட்டு மழை பெய்தது. இந்த கன மழையால் கயத்தாறு வட்டார பகுதிகளில் உள்ள குளங்கள் நிரம்பியது.

குளங்கள் நிரம்பியதால் உப்பாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால் பணிக்குளம், ராமநாதபுரம் போன்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் ஓடவில்லை.

அதே போல் காயத்தாறில் இருந்து தேவர்குளம் வழியாக நெல்லை, சங்கரன்கோவில், மானூர், கழுகுமலை செல்லும் சாலையில் அய்யனார் ஊத்து, காக்கா ஓடை மற்றும் ஆத்திகுளம் தாம்போதியிலும் வெள்ளம் கடை புரண்டு ஓடியதால் பஸ்கள் மற்றும் இதர வாகனங்கள் செல்ல முடியவில்லை.

வெள்ளத்தைத் தடுத்த எம்.எல்.ஏ.

அதிகாரிகளின் அலட்சியத்தால் ஊருக்குள் வரவிருந்த வெள்ள அபாயத்தை ஊர் மக்களுடன் சேர்ந்து முன்னாள் அதிமுக அமைச்சரும், எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் தடுத்து நிறுத்தினார்.

தாமிரபரணி ஆற்றில் உள்ள மருதூர் மேலக் கால்வாய் மூலம் சடையநேரி கால்வாயின் தலைமதகிற்கு தண்ணீர் வந்து சேருகிறது.
கடந்த ஆண்டு சடையநேரி குளத்திற்கு தண்ணீர் வந்தபோது சடையநேரி கால்வாயில் ராமசுப்பிரமணியபுரத்திற்கும் நங்கைமொழிக்கும் இடையே மிகப்பெரிய அளவில் அரிப்பு ஏற்பட்டது.

இதனை சீரமைக்காததால் தற்போது ராமசுப்பிரமணியபுரம் மற்றும் நங்கைமொழி கிராமங்களுக்குள் வெள்ளம் புகும் அபாயம் இருப்பதாக பல்வேறு அமைப்புகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் செய்தன. ஆனால் அந்த அதிகாரிகள் எவ்வித முயற்சியும் செய்யாமல் அலட்சியம் காட்டி வந்தனர்.

இதனால் கிராம மக்கள் ராமசுப்பிரமணிபுரத்தில் உள்ள சடையநேரி குளத்திற்கு தண்ணீர் செல்லும் மதகை அடைத்து புத்தன்தருவை குளத்திற்கு திருப்பி விட்டனர். இதையடுத்து கிராம மக்கள் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ விடம் தெரிவித்தனர்.

எம்.எல்.ஏ உடனடியாக தன்னுடைய சொந்த பணத்தில் இருந்து 2,000 மணல் மூட்டைகளுடன் 150 பேரை அழைத்து கொண்டு சடையநேரி கால்வாய் பகுதிக்கு சென்று அங்கு அரிப்பு ஏற்பட்ட பகுதியை சரி செய்து ஊருக்குள் வரவிருந்த வெள்ளத்தை தடுத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X