For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தஞ்சை அருகே புலிகளின் 2 ஏஜென்டுகள் கைது - படகு பறிமுதல்

By Staff
Google Oneindia Tamil News

boominathanpushpadhanaraj
தஞ்சாவூர்: சென்னையில் பிடிபட்ட விடுதலைப் புலிகளுக்கு படகு வாங்க உதவியாக இருந்த இரண்டு பேரை தஞ்சை அருகே கியூ பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் சனிக்கிழமை இரவு ஜேம்ஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய இரு விடுதலைப் புலிகளை கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவர்களுடன் சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்.

விடுதலைப் புலிகள் இருவரும் ராமநாதபுரத்தில் ஒரு படகு வாங்குவதற்காக வந்திருந்தனர். அவர்களுக்கு ரவிக்குமார் உதவி செய்தார். படகு வாங்குவதற்குத் தேவையான பணத்தை மலேசியாவிலிருந்து கருப்பையா என்பவர் அனுப்பியிருந்தார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து 3 பேரையும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் பின்னர் சிறையில் அடைத்தனர்.

ஜேம்ஸ் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர். மீன் வலை விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அத்தோடு விடுதலைப் புலிகளுக்குத் தேவையான பொருட்களை தமிழகத்திலிருந்து கடத்தும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

இவரது ஏஜெண்டுகளாக தங்கச்சிமடத்தைச் சேர்ந்த புஷ்ப தனராஜ் (43), ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பூமிநாதன் (28) என்பவரும் செயல்பட்டு வந்தனர் என்பதும் போலீஸாருக்குத் தெரிய வந்தது. இவர்களில் புஷ்ப தனராஜ், ஜேம்ஸுக்கு உறவினர் ஆவார். அதாவது ஜேம்ஸின் தம்பிக்கு, தனது தங்கையை புஷ்ப தனராஜ் கல்யாணம் செய்து கொடுத்துள்ளார்.

இவர்கள் இருவரும் தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டிணத்திலிருந்து விடுதலைப் புலிகளுக்காக வாங்கப்பட்டிருந்த படகை இலங்கைக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் அங்கு விரைந்த கியூ பிரிவு போலீஸார், இருவரையும் கைது செய்து, படகையும் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் சென்னைக்குக் கொண்டு வந்தனர்.

போலீஸாரிடம் புஷ்ப தனராஜ் கூறுகையில், நான் இலங்கைக்கு பெட்ரோல், பீடி, சிகரெட், டீசல், ஜவுளிகள் உள்ளிட்டவற்றை கடத்திச் சென்று அங்கு அதிக விலைக்கு விற்பது வழக்கம். கள்ளத் தோணி மூலம் இலங்கைக்குச் சென்று வருவேன்.

2000மாவது ஆண்டில் ஜேம்ஸின் தம்பியை மண்டபம் அகதிகள் முகாமில் சந்தித்தேன். அவர் அடிக்கடி எனது வீட்டுக்கு வருவார். அப்போது அவருக்கும், எனது தங்கைக்கும் காதல் ஏற்பட்டது. இதை அறிந்த நான் இருவருக்கும் கல்யாணம் செய்து வைத்தேன்.

பின்னர் ஜேம்ஸுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்தான் விடுதலைப் புலிகளுக்காக பொருட்களைக் கடத்திக் கொடுத்தால் அதிக பணம் கிடைக்கும் என்று கூறினார். இதையடுத்து புலிகளுக்குத் தேவையான பொருட்களை கடத்த ஆரம்பித்தேன்.

கடந்த மாதம் ஜி.பி.எஸ். கருவிகள், கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள், நீச்சல் உடைகள், காலணிகள் உள்ளிட்டவற்றைக் கடத்தி அனுப்பினேன் என்றார் புஷ்ப தனராஜ்.

பின்னர் புஷ்ப தனராஜையும், பூமிநாதனையும் நேற்று இரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் இருவரையும் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த இருவர் உள்பட மேலும் சிலரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X