For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அனுமதி வாங்காத தேமுதிக-மதுரை போலீஸ் கமிஷ்னர் விளக்கம்

By Staff
Google Oneindia Tamil News

Vijaykanth

மதுரை: மதுரையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்கவும், ஊர்வலமாகச் செல்லவும் தேமுதிகவினர் காவல்துறையினரிடம் எந்தவித அனுமதியும் பெறவில்லை என மதுரை மாநகர காவல்துறை ஆணையர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

இரு கட்சியினரும் ஒரே நேரத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மாலையணிவிக்க நேரம் ஒதுக்கி, ஆடுகள் மோதிக்கொண்டால் இடையில் குள்ளநரி ரத்தம் குடிக்கலாம் என்ற கதையாக போலீசார் எங்கள் கட்சியினரையும், அதிமுகவினரையும் மோதலில் ஈடுபட வைக்க தூண்டி விடுகின்றனர் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்து கமிஷ்னர் சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 24ம் தேதி மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் மற்றும் தந்தை பெரியாரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அன்றைய தினம் அதிமுகவினர் காலை 10 மணிக்கு அழகர் கோவில் ரோட்டில் உள்ள பெரியார் சிறையிலிருந்து டாக்டர் அம்பேத்கர் ரோடு வழியாக கே.கே.நகர் ஆர்ச் அருகேயுள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவிக்க ஊர்வலமாக சென்றனர்.

இதற்கு கடந்த 19ம் தேதி அதிமுகவின் மாவட்டச் செயலாளர் செல்லூர் ராஜூ அனுமதி கேட்டிருந்தார். காவல்துறையினரும் அதிமுகவினர் ஊர்வலமாக செல்ல அனுமதி கொடுத்தனர்.

அதன்படி அதிமுகவைச் சேர்ந்த புதூர் துரைப்பாண்டி தலைமையில் 20 பெண்கள் உட்பட 120 பேர் 24ம் தேதி காலை 10.30 மணிக்கு அழகர் கோவில் ரோட்டில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, பின்னர் 10.45 மணிக்கு ஊர்வலமாக புறப்பட்டு கே.கே.நகர் ஆர்ச் அருகில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு 12 மணிக்கு கலைந்து சென்றனர்.

அப்போது அதிமுகவினர் எம்.ஜி.ஆர். சிலையை சுற்றிக் கட்டப்பட்டிருந்த தேமுதிகவின் கட்சிக் கொடிகளை பிடுங்கி எறிந்தனர். அங்கு பாதுகாப்புக்கு இருந்த காவல்துறையினர் அவர்களை கலைந்து போகச் செய்தனர்.

தேமுதிகவினர் 75 பேர் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமலும், காவல்துறையினரிடம் அனுமதி பெறாமல் பெரியார் சிலைக்கு 12 மணியளவில் அக்கட்சியின் மாநில பொருளாளர் சுந்தர்ராஜன் தலைமையில் மாலை அணிவித்துக் கொண்டிருந்த போது தங்கள் கட்சிக் கொடிகள் அகற்றப்பட்ட, செய்தி கேட்டு பெரியார் சிலை அருகே கட்டியிருந்த அதிமுக கொடிகளை அகற்றினர்.

அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவர்களை கலைந்து போகச் செய்தனர். ஆனால் தேமுதிகவினர் காவல்துறையினரின் உத்தரவை மீறி எம்.ஜி.ஆர் சிலையை நோக்கி அதிமுகவினரிடம் தகராறு செய்யும் நோக்கத்தில் செல்ல முயன்றனர்.

இதையடுத்து 62 தேமுதிகவினரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரியார் சிலை அருகே கைது செய்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விடுவிக்கப்பட்டனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் எம்.ஜி.ஆர் சிலை அருகே கலைந்து சென்ற அதிமுகவினர் தங்களது கொடிகள் பெரியார் சிலை அருகே தேமுதிகவினரால் அகற்றப்பட்ட செய்தி கேட்டு பெரியார் சிலை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இரு தரப்பினரும் டாக்டர் அம்பேத்கர் ரோட்டில் உள்ள மடீசியா ஹால் முன் கற்களை வீசி ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.

இது தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த சிக்கந்தர் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தேமுதிக மாநில பொருளாளர் சுந்தர்ராஜன் உட்பட 10 பேர் மீது தல்லாகுளம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அதே போன்று தேமுதிகவைச் சேர்ந்த ஷாஜகான் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் அதிமுகவின் தலைமைக் கழக பேச்சாளர் எம்.சி.பாண்டி உட்பட 14 அதிமுகவினர் மீது தல்லாகுளம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக 10 தேமுதிகவினரும், 6 அதிமுகவினரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கட்டுள்ளனர்.

தேமுதிகவினர் ஊர்வலமாகச் செல்வதற்கும், எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவிக்கவும் காவல்துறையினரிடம் எந்தவித அனுமதியும் கோரி மனு கொடுக்கவில்லை. மனு கொடுக்காததால் அவர்களுக்கு என்று தனியாக நேரம் ஒதுக்கப்படவில்லை.

அதேபோன்று இரு கட்சியினரும் பொது இடத்தில் அடிதடியில் ஈடுபட்டு பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்து சட்டம், ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கிய காவல்துறையினர் தலையிட்டு மேற்கொண்டு எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காமல் தடுத்து அமைதியை நிலைநாட்டினர்.

நடந்த சம்பவங்கள் தொடர்பாக இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காவல்துறை ஆணையர் விளக்கம் கொடுத்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X