For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராமர் பாலம்-அரசை கண்டித்து அதிமுக செயற்குழுவில் தீர்மானங்கள்

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha

சென்னை: சட்டம் ஒழுங்கு, வெள்ள நிவாரணப் பணிகள், மின்சாரத் தட்டுப்பாடு, உரப் பற்றாக்குறை, பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்ட முயல்வதை தடுக்காதது, விலைவாசி உயர்வு, நக்சலைட் பிரச்சினை உள்ளிட்டவற்றில் தமிழக அரசு ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை என்று அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் கண்டனம் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிமுக செயற்குழுக் கூட்டம் கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் நேற்று (ஜனவரி 3) சென்னையில் நடந்தது.

இக்கூட்டத்தில் அடுத்து வரும் லோக்சபா தேர்தலிலும், கர்நாடக சட்டசபைத் தேர்தலிலும் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை ஜெயலலிதா வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, பல்வேறு துறைகளிலும் திமுக அரசு சரிவர செயல்படவில்லை என்று குற்றம் சாட்டி கண்டனத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

அதிமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

- ஊழலுக்காக ஒருமுறையும், தேச துரோக செயலுக்காக ஒருமுறையும் என இருமுறை திமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. ஆனால் இன்னும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. முதல்வர் கருணாநிதி மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமல் உள்ளது மத்திய அரசு.

மாநிலத்தில் சிலர் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தாலாட்டு பாடிக் கொண்டுள்ளனர். முதல்வர் கருணாநிதி ஒரு படி மேலே போய், தமிழ்ச்செல்வன் மரணத்திற்கு இரங்கற் பா பாடுகிறார். இந்தக் கவிதை நாட்டை பிளவு படுத்தும் கவிதையாகும்.

இத்தனைக்குப் பிறகும் முதல்வர் கருணாநிதி மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது.

- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீர்குலைந்துள்ளது. தீவிரவாதத்திற்கும், நக்சலைட் நடவடிக்கைக்கும் முற்றுப்புள்ளி வைக்க திமுக அரசு தவறி விட்டது.

வட இந்தியாவிலிருந்து வந்துள்ள நக்சலைட்டுள், தேனி மாவட்டத்தில் ஊடுறுவியுள்ளனர். தமிழகத்தை தங்களது களமாக மாற்ற நக்சலைட்டுகள் முயலுகின்றனர். தீவிரவாதக குழுக்களின் சொர்க்க பூமியாக தமிழகம் மாற திமுக அரசு அனுமதித்தது கண்டனத்துக்குரியது.

அதிமுக ஆட்சியில் சந்தனக் கடத்தல் வீரப்பன் வேட்டையாடப்பட்டு அழிக்கப்பட்டான். விடுதலைப் புலிகள், தமிழ்நாடு விடுதலைப் படை, மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் உள்ளிட்ட தீவிரவாதிகளுக்கு தமிழகத்தில் இடம் இல்லாத நிலை இருந்தது. ஆனால் 2006ல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், விடுதலைப் புலிகளுக்கும், நக்சலைட்டுகளுக்கும் திமுக ஆதரவு கொடுக்க ஆரம்பித்து விட்டது.

- ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பைக் குறைத்தது கண்டனத்துக்குரியது. இதன் காரணமாக 2 பேர் ஜெயலலிதாவின் வீட்டுக்குள் நுழையும் நிலை ஏற்பட்டது.

தீவிரவாத குழுக்களிடமிருந்து ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல்கள் உள்ளன. அவருக்கு பாதுகாப்பு தர வேண்டியது அரசின் கடமை. பசும்பொன் கிராமத்தில் நடந்த முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு சென்றபோதும், கடந்த டிசம்பர் 24ம் தேதி எம்.ஜி.ஆர். நினைவுநாளையொட்டி நடந்த அஞ்சலி நிகழ்ச்சியின்போதும் ஜெயலலிதாவுக்கு போதிய பாதுகாப்பு தரப்படவில்லை.

ஜெயலலிதாவுக்கு மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பிற அரசியல் தலைவர்களும் தங்களது பாதுகாப்பு குறித்து தனிப்பட்ட முறையில் ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டிய நிலையில் தமிழகம் உள்ளது கண்டனத்துக்குரியது.

- காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு ஆகிய பிரச்சினைகளில் தமிழக அரசு விவசாயிகள் மற்றும் தமிழக நலனைக் காக்கத் தவறி விட்டது. பாலாற்றின் குறுக்கே ஆந்திரா அணை கட்டாமல் தடுத்து நிறுத்த தமிழக அரசு முயற்சிக்கவில்லை. நதி நீர்ப் பிரச்சினையில் தமிழக அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது.

- ராமர் பாலத்தை இடித்து விட்டு சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் துடிப்பது கண்டனத்துக்குரியது.

- நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ. 1000 நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் கோரி வருகிறார்கள். அதை நிறைவேற்ற மத்திய அரசு தவறி விட்டது. கோதுமைக்கு நிகராக நெல்லுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- போதிய அளவில் உரம் கிடைக்காமல் விவசாயிகள் பெரும் சிரமப்படுகிறார்கள். உரத் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்காத திமுக அரசின் செயல் கண்டனத்துக்குரியது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுதவிர மின் தட்டுப்பாட்டை நீக்க போதிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும், வெள்ள நிவாரணப் பணிகளை முறையாக செய்யாததைக் கண்டித்தும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாத நிர்வாகத் திறமையின்மையைக் கண்டித்தும், ரேஷன் அரிசிக் கடத்தலைத் தடுத்து நிறுத்தாதைக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X