For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரேசன் கடை கொள்ளை-ப.சிதம்பரம் வேதனை

By Staff
Google Oneindia Tamil News


மதுரை: மத்திய தொகுப்பில் இருந்து வழங்கப்படும் ரேஷன் அரிசியில் பாதி, ரேஷன் கடைகளுக்கே போவதில்லை. இதற்கு தமிழ்நாடும் விதிவிலக்கல்ல என்று கூறியுள்ள மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அனைத்து ரேஷன் கடைகள் முன்பும் காங்கிரஸார் போராட்டம் நடத்தலாம் என்றும் கூறியுள்ளார்.

மதுரையில் நடைபெற்ற தமிழக காங்கிரஸ் கட்சியின் தென்மாவட்ட கலந்தாய்வு கூட்டத்தில் அவர் பேசியதாவது,

நாம் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை நாட்டு மக்களுக்கு இந்தக் கூட்டம் தெரிவிக்கும். இங்கு பேசியவர்கள் பலம், பலவீனம் பற்றி பேசினார்கள்.

நமது கட்சியின் மிகப்பெரிய பலம், பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தேர்தலில் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் இந்த கட்சியில் 40 ஆண்டு காலமாக தூண்களாக இருக்கின்ற தொண்டர்கள்தான். அந்த தொண்டர்களுக்கு வாய்க்கால், வடிகால் அமைத்து தராததுதான் பலவீனம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைவராக பொறுப்பு ஏற்பவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமாக கட்டடம், நிரந்தர அலுவலகம் அமைக்க வேண்டும். தினமும் 2 அல்லது 3 மணி நேரமாவது அலுவலகத்துக்கு வரவேண்டும். கட்சி தொண்டர்களை உறுப்பினர்களை சேர்த்து கட்சிக்கு புதிய வரவுகளைக் கொண்டுவர வேண்டும்.

1970, 1975, 1980ம் ஆண்டுகளில் அதிகளவு தொண்டர்களின் வரவு இருந்தது. 1984ல் ராஜீவ்காந்தி பொறுப்பேற்றபோது, இளைய தலைமுறையின் வரவு ஏராளமாக இருந்தது. மக்கள் தலைவர் மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கியபோது அதிகளவு தொண்டர்கள் சேர்ந்தனர். அதன் பின்னர் தொண்டர்களின் சேர்க்கை குறைந்துள்ளது.

கட்சி பற்று உள்ளவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும். ஒவ்வொரு வட்டார அளவிலும் கூட்டங்களை நடத்தி, அடையாள அட்டைகளை வழங்கவேண்டும். அதை ஒவ்வொரு மாவட்டத்திலும் செய்ய வேண்டும். மக்களை சந்தித்து மத்திய அரசினுடைய சாதனைகளை விளக்க வேண்டும்.

கூடங்குளம் அணுமின் நிலையம், தூத்துக்குடி துறைமுக விரிவாக்கம், நெய்வேலி நிலக்கரி சுரங்க மின் உற்பத்தி விரிவாக்கம், எண்ணூர் துறைமுக விரிவாக்கம், அனைத்து கண்மாய், ஏரிக் குளங்களை செப்பனிட்டு சீரமைப்பு திட்டங்கள் ஆகியவை நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இப்படி எண்ணற்ற திட்டங்கள், எத்தனையோ சாதனைகள். நிலமற்ற விவசாயிகளுக்கு பசி, பட்டினியை ஒழிக்கும் வேலை உறுதியளிப்பு சட்டம் உள்ளது. 12 லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன், 30 லட்சம் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு நிதி உதவி, விவசாயக் கடன்களுக்கு வட்டி குறைப்பு என இந்த சாதனைகளையெல்லாம், நம்மால் சொல்ல முடியாதா? நம்மிடம் ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் அதற்கு வழிக்காட்டுதல் தான் இல்லை.

ஒரு ஆட்சியில் (திமுக ஆட்சியில்) தவறுகளை சுட்டிக்காட்டுவதில் தவறில்லை. மத்திய தொகுப்பில் இருந்து ரேஷன் அரிசி, கோதுமை போன்றவற்றுக்கு மானியம் வழங்கப்படுகிறது. அதில் 36 சதவீதம் மக்களுக்கு போய் சேருவதில்லை. இதில் பாதி ரேஷன் கடைகளுக்கே போவதில்லை.

உத்தரப்பிரதேசம், கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் எல்லாம் இந்த கொள்ளை நடக்கிறது. இதற்கு தமிழ்நாடும் விதிவிலக்கல்ல. இந்த தவறுகளை சுட்டிக்காட்ட ஏன் தயங்க வேண்டும்?

தவறுகளை சுட்டிக்காட்டுவதால் இது மாநில அரசை எதிர்த்து நடத்தக்கூடிய போராட்டம் அல்ல. தவறை சுட்டிக்காட்டுவதற்கான போராட்டம். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமை யோசித்து சொன்னால் அனைத்து ரேஷன் கடைகளின் முன்பும் போராட்டம் நடத்தலாம்.

சிமென்ட் தட்டுப்பாடு இருக்கிறது. அதனை நான் ஒத்துக் கொள்கிறேன். லாபம் பெறவேண்டும் தான். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதற்காக கொள்ளை லாபமா அடிக்க வேண்டும். அதற்காகத்தான் கலால் வரியை மாற்றி அமைத்தோம். பலனில்லாமல் போய்விட்டது.

சிமென்ட் கடைகள் முன்பு போராட்டம் நடத்தி தவறுகளை சுட்டிக்காட்ட போராட வேண்டும் என்றார் சிதம்பரம்.

இந்த கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் ஜி.கே.வாசன் பேசுகையில்,

தென் மாவட்டம் எப்போதும் காங்கிரசின் கோட்டைதான். மத்தியில் ஐக்கிய முன்னணி கூட்டணி மதவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. சோனியா காந்தி வழிகாட்டுதலின்படி பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் சிறந்த மக்களாட்சி நடந்து வருகிறது.

நல்ல அரசாக, வல்லரசாக மாற்றப்பட்டு வருகிறது. தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.39,871 கோடி வழங்கியுள்ளது. இதை காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் பட்டி, தொட்டி எல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

தமிழகத்தில் நாம் நினைத்தது நடக்கும். அதற்கு அடித்தளமாக இந்தக் கூட்டம் அமையும். 40 ஆண்டு காலமாக தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி இல்லை. மக்கள் தலைவர் மூப்பனார் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என்று கூறிவந்தார்.

அதை நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை கொண்டு வருவது அவ்வளவு எளிதல்ல. அதற்காக நாம் படிப்படியாக செய்ய வேண்டியது நிறைய உள்ளது. தொண்டர்களின் சுக துக்கங்களில் பங்கு கொள்ள வேண்டும். தொண்டர்கள் இருக்கும் குக்கிராமங்களுக்கு நாம் சென்று அவர்களை சந்திக்க வேண்டும். காமராஜர் ஆட்சி அமைக்க கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.

பேசி முடித்த வாசன் பிற நிர்வாகிகள் பேசும் வரை இருக்காமல் பாதியிலேயே கூட்டத்தை விட்டு வெளியேறினார்.

வசந்தகுமார் எம்.எல்.ஏ. பேசுகையில், தமிழகத்தில் 35 பேர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கிறோம். அவர்களில் 5 பேருக்கு அமைச்சர் பதவி வாங்கிக் கொடுத்தால் கட்சிக்கு வலு சேர்க்கலாம். 5 பேருக்கு அமைச்சர் பதவி கிடைத்தால் அடுத்து தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்துக் காட்டுவோம் என்றார்.

சிதம்பரத்தின் மகன் கார்த்தி பேசுகையில், இப்போது உள்ளதுபோல் கட்சி இருந்தால் தமிழ்நாட்டில் ஆட்சி செய்ய முடியாது. பிரசாரமும், போராட்டமும் நடத்தினால்தான் அரசியல் கட்சியாக இருக்க முடியும். மத்திய அரசு மூலம் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். அதை மக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும்.

போராட்டமும், பிரசாரமும் செய்யாமல் இருந்தால் கட்சியை வளர்க்க முடியாது, 4 ஆண்டுகளாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு நிர்வாகிகளே இல்லை. 5 மாவட்டத்திற்கு தலைவர்களே இல்லை. இதற்கெல்லாம் ஒரு முடிவு எடுத்து நிர்வாகிகளை நியமித்து கட்சிக்கு வலு சேர்க்க வேண்டும். இளைஞர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X