அலங்காநல்லூர் மக்கள் மதுரையில் ரயிலை மறிக்க முயற்சி

Subscribe to Oneindia Tamil

Jalikattu

மதுரை: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்யக் கோரி அலங்காநல்லூர், பாலமேடு பகுதி மக்கள் இன்று காலை மதுரை ரயில் நிலையத்தில் ரயில் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை பிறப்பித்துள்ளதால் ஜல்லிக்கட்டுக்குப் பெயர் போன அலங்காநல்லூரில் பெரும் அதிர்ச்சியும், சோகமும் நிலவுகிறது. அதேபோல பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளிலும் மக்கள் பெரும் ஏமாற்றத்துடனும், அதிருப்தியுடனும் உள்ளனர்.

'கருப்பு' பொங்கல்!

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டு விட்டதால் இந்த ஆண்டு எங்களுக்கு சந்தோஷ பொங்கல் இல்லை, துக்கத்தையே உச்சநீதிமன்றம் எங்களுக்கு பொங்கல் பரிசாக கொடுத்து துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என்று அலங்காநல்லூர் மக்கள் சோகத்துடன் கூறுகின்றனர்.

வீடுகள் தோறும் கருப்புக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன. நேற்று பிற்பகலுக்கு மேல் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு விட்டன. இன்று உண்ணாவிரதம் இருக்க தீர்மானிக்கப்பட்டது.

மேலும் பொங்கல் திருநாளை துக்க பண்டிகையாக கொண்டாடவும் அலங்காநல்லூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்.

மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள உச்சநீதிமன்றம் தவறி விட்டதாக அலங்காநல்லூர் பகுதி மக்கள் குமுறுகின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்கப்படாவிட்டால், தங்களது ரேஷன் கார்டுகளையும், வாக்காளர் அடையாள அட்டைகளையும் அரசிடமே திருப்பிக் கொடுத்து விடப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

ரயில் மறியல்:

இந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் மதுரை ரயில் நிலையத்தில் குவிந்தனர்.

அங்கு ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆனால் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போகுமாறு கூறினர்.

இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் யாரும் கைது செய்யப்படவில்லை.

பரபரப்பு போஸ்டர்கள்:

இதற்கிடையே, மதுரை நகரின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில் இடம் பெற்றுள்ள வாசகங்கள்:

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்த உச்சநீதிமன்றமே

இம்முறை எங்களுக்கு 'கருப்புப் பொங்கலே'

ஆண்டுதோறும் புனித யாத்திரைகள் நடக்கும்போது விபத்தின் மூலம் உயிர்ப் பலி ஏற்படுகிறது. இது இயற்கை. இதைத் தடுக்க முடியுமா.

400 ஆண்டுகளாக நடைபெறும் வீர விளையாட்டு, இளைஞர்களின் திருநாள். இந்த வீர விளையாட்டுக்கு தடை விதித்த உச்சநீதிமன்றமே, மறு பரிசீலனை செய்து தமிழர்களின் கலாச்சாரமான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மறு பரிசீலனை செய்யாதபட்சத்தில், இந்திய குடியுரிமைக்கான குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்போம். இது எங்களது எதிர்ப்பு அல்ல, கோரிக்கை.

இவண் கிராம இளைஞர்கள், கிராம பொதுமக்கள், அலங்காநல்லூர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியர் அவசரக் கூட்டம்:

நிலைமை மோசமாகி வருவதை உணர்ந்த மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜவஹர், நேற்று அலங்காநல்லூர் பகுதி முக்கியஸ்தர்களை மதுரைக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் ஊர்ப் பெரியவர்கள், விழாக் கமிட்டியினர், ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போர், மாடு பிடிப்போர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் தங்களது கருத்துக்களை ஊர் முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர். ஆட்சியரும், தடையை நீக்க தமிழக அரசு ஆவண செய்து வருவதாக தெரிவித்தார்.

கூட்டத்தின்போது அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் பகுதிளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திரண்டிருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழர் வீர விளையாட்டு பாதுகாப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் கூறுகையில், இந்தத் தடை சற்றும் நியாயமில்லை. இது சாதாரண விஷயம் அல்ல. தமிழர்களின் பாரம்பரிய, வீர விளையாட்டு, தொன்று தொட்டு, பல நூற்றாண்டுகளாக நடந்து வரும் ஒரு நிகழ்ச்சி.

இது மக்களின் உணர்வுகள் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி. இதை தடை செய்திருப்பதன் மூலம் மக்களின் உணர்வுகளை புண்படுத்தி விட்டனர். எனவே இந்தத் தடையை நீக்க வேண்டும் என்ற ஒரே கோரிக்கையை மட்டுமே நாங்கள் ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளோம். அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தடையை நீக்கும் வரை பல்வேறு கட்டங்களாக போராட்டங்கள் நடத்த தீர்மானித்துள்ளோம்.

எப்படி காவிரிப் பிரச்சினையில் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்பை புறக்கணித்து நடந்து கொண்டதோ, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்பை புறக்கணித்ததோ அதேபோல தமிழக அரசும் ஜல்லிக்கட்டுக்குத் தடை என்ற தீர்ப்பை புறக்கணிக்க முன்வர வேண்டும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+