இலங்கை கடற்படை வீரர்கள் சுட்டு புதுக்கோட்டை மீனவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டனத்தைச் சேர்ந்த மீனவர்கள் 15 படகுகளில் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர்.
தங்கப்பாண்டி (35) என்பவரும், இன்னும் சில மீனவர்களும் ஒரு படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களது படகு திசை மாறி இந்திய கடல் எல்லையைத் தாண்டிச் சென்று விட்டதாக தெரிகிறது.
இதையடுத்து இலங்கை கடற்படையினர் அங்கு விரைந்து வந்தனர். எந்தவித முன்னெச்சரிக்கையும் தெரிவிக்காமல் தமிழக மீனவர்களின் படகு மீது சரமாரியாக சுட்டுத் தள்ளினர்.
இதில் தங்கப்பாண்டியனின் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். படகில் இருந்த மற்ற இரு மீனவர்களும் காயமின்றி தப்பினர். பின்னர் தங்கப்பாண்டியனின் உடலுடன் அவர்கள் கரைக்கு வந்து சேர்ந்தனர்.
உடனடியாக தங்கப்பாண்டியனின் உடல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் பெரும் சோகத்திலும், கொந்தளிப்பிலும் மூழ்கியுள்ளனர்.
சமீப காலமாக பலி ஏதும் நிகழாமல் இருந்த நிலையில் மீண்டும் இலங்கை கடற்படை கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டிருப்பது தமிழக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரூ. 1 லட்சம் நிதியுதவி:
புதுக்கோட்டை மீனவர் இலங்கை படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முதல்வர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மீனவர் தங்கப்பாண்டியனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
தங்கப்பாண்டியன் குடும்பத்துக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடாக உடனடியாக வழங்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று மத்திய அரசின் மூலமாக இலங்கை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications