'கிட்னி' குமாரின் தம்பியும் கைது!
டெல்லி: சிறுநீரக மோசடி மன்னன் டாக்டர் அமீத்குமாரின் தம்பி, டாக்டர் ஜீவன் குமார் ராவத் டெல்லியில் பிடிபட்டார்.
டெல்லி அருகே குர்கான் பகுதியில் நர்சிங் ஹோம் வைத்திருந்த டாக்டர் அமீத்குமார், 500க்கும் மேற்பட்டோரிடம் சிறுநீரகங்களை குறைந்த விலைக்கு வாங்கி அவற்றை வெளிநாட்டினருக்கு பல கோடி அளவுக்கு விற்று மோசடி செய்ததாக சர்ச்சை எழுந்தது.
இந்த வழக்கில் அமீத்குமாரும், அவரது தம்பி டாக்டர் ஜீவன் குமார் ராவத்தும் முக்கிய குற்றவாளிகளாக போலீஸாரால் அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து இருவரும் தலைமறைவானார்கள்.
அமீத்குமாரின் கூட்டாளிகள் சிலர் கைது செய்யப்பட்ட நிலையில் நேபாளத்தில் பதுங்கியிருந்த அமீத்குமார் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் டெல்லி கொண்டு வரப்பட்ட அவர் தற்போது சிபிஐ வசம் விசாரணையில் உள்ளார்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்து வந்த டாக்டர் ஜீவன் குமாரை சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்தனர். நேற்று அவர் டெல்லியில் வைத்து சுற்றி வளைத்துக் கைது செய்யப்பட்டார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது.
அமீத்குமாரும், ஜீவன் குமாரும் சிக்கி விட்டதால் சிறுநீரக மோசடி தொடர்பான அனைத்து விவரங்களும் விரைவில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிபிஐ காவலில் ஜீவன்குமார்:
பிடிபட்ட டாக்டர் ஜீவன் குமார் ராவத்தை, போலீஸார் டெல்லி முதன்மை பெருநகர மாஜிஸ்திரேட் சஞ்சீவ் ஜெயின் முன்பு இன்று ஆஜர்படுத்தினர்.
அவரிடம் நிறைய விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், தங்களது காவலில் அனுமதிக்குமாறு கோரி சிபிஐ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை ஏற்ற நீதிபதி பிப்ரவரி 29ம் தேதி வரை அவரை சிபிஐ தங்களது கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.
முன்னதாக கடந்த புதன்கிழமை ஜீவன் குமாரின் மனைவி பூஜா சிங்கால் கைது செய்யப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். குர்கான் போலீஸார் அவரைக் கைது செய்தனர். இவருக்கும் சிறுநீரக மோசடியில் தொடர்பு இருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.