India
  • search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நக்ஸல் தீவிரவாதம் ஒடுக்கப்படும்-ஜனாதிபதி

By Staff
Google Oneindia Tamil News
Pratibha Patil
டெல்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று கூடியது.

இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஜனாதிபதி உரையுடன் கூட்டம் தொடங்கியது. மக்களவை, மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர் முதல் முதலாக உரையாற்றினார் பிரதீபா பாட்டீல்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கொள்கைகள், செயல்பாடுகளை அவர் விளக்கிப் பேசினார்.

பீரதீபா பாட்டீல் பேசுகையில், பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்தை எட்டும் வகையில் அரசு செயல்படும். விலை வாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்கும். தீவிரவாததம், நக்சலைட்டுகள் ஒழிப்பு ஆகியவற்றுக்கும் கூடுதல் கவனம் தரப்படும்.

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் அமல்படுத்தப்படும். அதற்கான உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

விலைவாசி கட்டுக்கடங்காமல் போகாத வகையில் அரசு பார்த்துக் கொள்ளும். சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பலனடையும் வகையிலும், சமச்சீரான வளர்ச்சி இருக்கும் வகையிலும் பொருளாதார வளர்ச்ச எட்டப்படும்.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான கடந்த நான்கு ஆண்டு கால ஆட்சியில் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரப்பட்டு, பாதுகாப்பு நிலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தீவிரவாத மிரட்டலுக்கு இந்த அரசு அடிபணியாது. தொடர்ந்து இரும்புக் கரம் கொண்டு தீவிரவாதம் கட்டுப்படுத்தப்படும். இடதுசாரி தீவிரவாதத்தையும் (நக்ஸல்) நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

ஜம்மு காஷ்மீர், உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் தீவிரவாத தாக்குதல்கள் நடந்தபோது நாடே ஒற்றுமையுடன் இருந்து அதைக் கண்டித்தது.

சமூக விரோத, தேச விரோத பிரிவினருக்கு எந்த வகையிலும் இடம் கொடுக்காமல், அவர்களைக் கட்டுப்படுத்த அரசு உஷார் நிலையில் உள்ளது.

இன்று பெண்கள் சமூகத்தின் முக்கிய அங்கமாக உள்ளனர். ஆண்கள் செய்யும் வேலைகளை பெண்களும் செய்கின்றனர். பெண்கள் கல்வியறிவு பெறவும், சமூகத்தில் உயரிய நிலையை அடையவும் இந்த அரசு பாடுபடும்.

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மூலம் நாட்டில் நேரடியாக 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. மறைமுகமாக 2 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது.

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மூலம் ரூ. 50 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகள் கவரப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் அது ரூ. 67 ஆயிரம் கோடியாக உயரும்.

அண்டை நாடுகளுடன் இந்தியா தொடர்ந்து நல்லுறவு வைத்துக் கொள்ள விரும்புகிறது. அமைதியான, நிலையான, செழுமையான சுற்றுப்புறம் என்பதே இந்தியாவின் கொள்கையாகும்.

இந்த ஆண்டு நாடாளுமன்றம் மிகவும் அமைதியாக, ஆக்கப்பூர்வமாக செயல்படும் என நம்புகிறேன். மாண்புமிக உறுப்பினர்கள், இந்த நாட்டு மக்களின் பிரதிநிதிகள் ஆவர்.

உங்களுக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்லாமல், இந்த நாட்டு மக்களுக்கும் ஆக்கப்பூர்வமான முறையில் நீங்கள் செயல்பட வேண்டும். அமைதியை விரும்பும் இந்திய மக்களுக்கும், உலக மக்களுக்கும் நம்பிக்கையூட்டும் வகையில் நீங்கள் செயல்பட வேண்டும்.

எனவே நீங்கள் செயல்படும் விதம் என்பது இந்த நாட்டின் ஜனநாயகத்திற்கு மிகவும் முக்கியமானது. உலக சமுதாயத்திற்கும் நீங்கள் நல்ல செய்தியை மட்டுமே தர வேண்டும் என்றார் பிரதீபா பாட்டீல்.

நாளை ரயில்வே பட்ஜெட்:

நாளை (செவ்வாய்க்கிழமை) ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தாக்கல் செய்கிறார்.

ரயில்வே பட்ஜெட்டில் லாலு பிரசாத் வழக்கம்போல, பயணிகளுக்கு பல்வேறு சலுகைகள், மாநிலங்களுக்கு ஏராளமான புது ரயில்கள், புதிய ரயில்வே திட்டங்களை அறிவிப்பார் எனத் தெரிகிறது. கட்டணத்தை மேலும் அவர் குறைக்கவும் கூடும்.

29ம் தேதி பொது பட்ஜெட்:

இதைத் தொடர்ந்து 29ம் தேதி மத்திய பொது பட்ஜெட்டை ப.சிதம்பரம் தாக்கல் செய்கிறார். அவர் வழக்கம்போல் நாட்டில் வருமான வரி கட்டும் வெறும் 3 சதவீதம் மக்களை மீண்டும் பிழிந்தெடுப்பார் என்பது நிச்சயம்.

இந்தக் கூட்டத் தொடரில் விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு, அணு சக்தி ஒப்பந்தம், சேது சமுத்திர திட்டம், ராமர் பாலம், ராஜ் தாக்கரேவால் ஏற்பட்டுள்ள சலசலப்பு என பல்வேறு பிரச்சினைகளுடன் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்த காத்திருக்கின்றன.

குறிப்பாக ராஜ் தாக்கரே விஷயத்தை லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளமும், முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடிக் கட்சியும் பெரிய அளவில் கிளப்ப காத்திருக்கின்றன.

இதேபோல அணு சக்தி விவகாரம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகிய பிரச்சினைகளை இடதுசாரிகள் பெரிய அளவில் கிளப்ப ஆயத்தமாக இருப்பதால் வழக்கம் போல இந்தக் கூட்டத் தொடரும் புயல் வீசும் களமாகவே இருக்கும் என்று தெரிகிறது.

பட்ஜெட் கூட்டத் தொடர் 3 மாதங்களுக்கு நடைபெறும். மார்ச் 9ம் தேதி கூட்டத் தொடர் முடிவடைகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X