பட்ஜெட்: பிரதமர், சோனியா வரவேற்பு-பாஜக விமர்சனம்

மத்திய பட்ஜெட் குறித்து பிரதமர் கருத்து தெரிவிக்கையில், எக்ஸலன்ட், அவுட்ஸ்டான்டிங். நாடு முழுவதும் கடன் சுமையால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள விவசாயிகளின் கவலையை ப.சிதம்பரம் இறக்கி வைத்துள்ளார்.
பண வீக்கத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளன. வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான வழிமுறைகளும் சொல்லப்பட்டுள்ளன.
இது மக்களுக்கான பட்ஜெட். விவசாயிகளுக்கான பட்ஜெட். நடுத்தர வர்க்கத்தினருக்கான பட்ஜெட்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. அதேசமயம், சாதாரண குடிமக்களின் அபிலாஷைகளையும் இது பூர்த்தி செய்வதாக உள்ளது.
வருமான வரி உச்சவரம்பு குறைக்கப்பட்டிருப்பது நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரும் பயன் உள்ளதாக அமையும். அதேபோல ரூ. 60 ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது மிகப் பெரிய நடவடிக்கை. விவசாயிகளை பெரும் துயரிலிருந்து மீட்டுள்ளார் ப.சிதம்பரம் என்றார் அவர்.
இதேபோல ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தியும் பட்ஜெட்டை பாராட்டியுள்ளார். குறிப்பாக விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது மிகப் பெரிய புரட்சி என்று அவர் பாராட்டியுள்ளார்.
தேர்தல் பட்ஜெட்-பாஜக விமர்சனம்:
அதேசமயம், தேர்தலை மனதில் கொண்டு இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளதாக பாஜக விமர்சனம் செய்துள்ளது.
அக்கட்சியின் துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் பட்ஜெட் மக்கள் பட்ஜெட் அல்ல. மாறாக, இது தேர்தல் பட்ஜெட்.
விரைவில் தேர்தல் வரப் போகிறது என்பதையே பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள அறிவிப்புகள், திட்டங்கள் காட்டுகின்றன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை போல பட்ஜெட்டை மாற்றியுள்ளார் ப.சிதம்பரம்.
இவை எல்லாமே கண் துடைப்பு அறிவிப்புகள், தேர்தலுக்குப் பின்னர் இவை கண்டு கொள்ளப்படாமல் விட்டு விடப்படும் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும் என்று கூறினார் நக்வி.