
மார்ச் 20ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்
சென்னை: தமிழக அரசின் 2008-09ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) மார்ச் 20ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 19ம் தேதி தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பை ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா இன்று வெளியிட்டார்.
19ம் தேதி காலை 9.30 மணிக்கு சட்டசபை கூடும். 20ம் தேதி காலை 9.30 மணிக்கு 2008-09 ஆண்டுக்கான தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் க.அன்பழகன் தாக்கல் செய்வார்.
பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர் அவை ஒத்திவைக்கப்படும். பின்னர் அலுவல் ஆய்வுக் குழு கூடி சபையை எத்தனை நாட்களுக்கு நடத்துவது, என்னென்ன பிரச்சினைகளை எடுத்துக் கொள்வது என்பது குறித்து விவாதிக்கும்.
ஒரு மாதம் வரை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் எனத் தெரிகிறது. இந்தக் கூட்டத் தொடரின்போது அனைத்துத் துறை அமைச்சர்களும் மானியக் கோரிக்கைகளை கொண்டு வருவார்கள்.
கடந்த ஜனவரி 23ம் தேதி தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் நடந்தது. அப்போது ஆளுநர் உரை நிகழ்த்தினார். அதன் பின்னர் பிப்ரவரி 1ம் தேதி காலவரையின்றி சபை ஒத்திவைக்கப்பட்டது.